சூடானின் ஓம்டர்மேன் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள திறந்தவெளி சந்தையில் நடத்தப்பட்ட கடுமையான தாக்குதலில் 54 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதில் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலை சூடானின் துணை இராணுவப் படையினர் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலைக் கண்டித்த அந்நாட்டு அரசு, இது சர்வதேச மனிதாபிமான சட்டங்களை வெளிப்படையாக மீறிய ஒரு செயல் என தெரிவித்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், வைத்தியசாலைக்கு அருகில் கூட குண்டுவீச்சு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், மருத்துவமனையில் இடவசதி இல்லாமல், தரையிலேயே பலருக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சூடானில் 30 ஆண்டுகளாக சா்வாதிகார ஆட்சி செய்து வந்த ஜனாதிபதி ஒமர் அல்-பஷீரை 2019ம் ஆண்டு இராணுவம், பதவியில் இருந்து நீக்கி ஆட்சியை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, அந்நாட்டில் இராணுவத்துக்கும், துணை இராணுவப் படைக்கும் இடையே கடுமையான மோதல் உருவாகி, உள்நாட்டுப் போர் வெடித்துள்ளது.
இந்த போரில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சூடானில் தொடரும் இவ்வளவு அதிகமான தாக்குதல்கள், அந்நாட்டின் நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.