25.6 C
Jaffna
March 1, 2025
Pagetamil
கிழக்கு

மடத்தடி ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆலயம் – வரலாற்றுப் பார்வை

மடத்தடி ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆலய மஹா கும்பாபிஷேக சிறப்பு பூஜையை முன்னிட்டு, 01.02.2025 – அதிகாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணிவரையும், 02.02.2025 – அதிகாலை 4.00 மணி முதல் பகல் 2.00 மணிவரையும் எண்ணைக்காப்பு வைபவம் இடம்பெறுவதோடு, ஆலய மஹா கும்பாபிஷேகம் 03.02.2025 அன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

இவ் ஆலய வரலாறு பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்ததாகும். சைவாலயங்கள் நிறைந்த திருகோணமலையில் பழமையான கிருஷ்ணன் கோவிலாக சிறப்புப்பெற்று விளங்குவது மடத்தடி ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆலயம், திருகோணமலை நகரில், புகையிரத நிலையத்திற்குச் சமீபமாக வீரகத்திப் பிள்ளையார் கோவிலுக்கருகே அமையப்பெற்ற சிறப்புவாய்ந்த ஆலயமாகும். இவ்வாலயம் தனக்கென சிறப்பு தலவரலாறை கொண்டு விளங்குகின்றது.

வீரகத்திப் பிள்ளையார் கோவில் வரலாற்றில் கூறப்பட்டுள்ள திரு. பெரிய ராசகோன் முதலியாருடைய தருமக் காணியான வீரகத்திப்பிள்ளையார் கோவில் நிலத்திலே திரு. மாரிமுத்து நாயக்கரும், திருவிளங்க நகரத்தாரும் (வாணிபர்), ஊரவர்களும் கூடிப் பெருமாள் குறித்த கிருஷ்ணன் கோவிலைக் கட்டினார்கள்.

1825ம் ஆண்டில் சுற்றுமதிலும் அக்கிரகாரமும் கொண்டதாக இவ்வாலயம் அமைக்கப்பட்டதோடு, கற்பக்கிரகமும், அர்த்தமண்டபமும் கருங்கற் திருப்பணியாக அழகிய தூபியுடன் கட்டப்பட்டிந்தது.

பிரித்தானியர் இலங்கையை ஆளத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் அவர்களிடம், வட இந்தியர்களை கொண்ட தரைப்படையில், தலைப்பாக்கட்டிகள் என்று அக்காலத்தவர்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்த வைஷ்ணவ படைப் பிரிவொன்றிருந்தது.

இவர்கள் தங்களுக்கென ஒரு வழிபாட்டுத் தலத்தை அமைக்க முற்பட்ட தன விளைவே தற்போதைய கிருஷ்ன கோவில் அமைவுக்கு மூலமாகும்.

வடஇந்தியப் படைவீரர்களின் வழிபாட்டுத் தேவையை முன்னிட்டு இந்த ஆலய அமைப்பு தொடங்கப்பட்டதெனும் செய்தி வரலாற்றில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. அக்காலத்தில், இன்றைய கிருஷ்ணன் கோவில் இருக்கும் இடத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து கருடன் வட்டமிட்டுச் சுற்றியதை அவதானித்த மக்கள், அது மகாவிஷ்ணுவின் பரிகாசம் எனக் கருதி, வீரகத்திப் பிள்ளையார் கோவில் நிர்வாகத்திடமிருந்து நிலம் பெற்றுக் கொண்டு ஆலயத்தை கட்டினார்கள். இதற்கான சாசனம் இன்றும் பாரம்பரியமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

திருக்கோணேஸ்வரத்தின் வரலாற்றில் இராமேஸ்வரம் கோவில் அமைப்பதற்கு திருகோணமலையிலிருந்தும் கருங்கற்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக ஓர் வரலாறு உள்ளதைப்போல, இக் கிருஷ்ண ஆலயம் அமைப்பதற்கு இந்தியாவிலிருந்து கற்கள் கொண்டுவரப்பட்டதென்ற வரலாறும் உள்ளது. இராமபக்தனாகிய அனுமனால் தீவைக்கப்பட்டு எரிந்த இலங்கையிலுள்ள கற்கள் சுடுபட்ட கற்கள் என்ற காரணத்தால், வைஷ்ணவ பக்தர்கள் இந்தியாவிலிருந்து கற்களைக் கொண்டு வரப்பட்டு, அந்தக் கற்களால் கட்டப்பட்ட கோவிலாக இன்றுமிருக்கின்றது கிருஷ்ண பக்கவான் ஆலயமாகும்.

வடஇந்தியப் படைவீரர்களில் திருவிளங்க நகரத்தாரும், ஆரியநாட்டாருமே குறித்த கிருஷ்ண ஆலயம் அமைப்பதற்கு உற்ற துணையாயிருந்தவர்கள். இந்தப்படையினர் இந்தியாவுக்கு மீண்டு செல்ல வேண்டி நேர்ந்ததால், அக்காலத்தில் ஆரியநாட்டாரிடமும், திருவிளங்க நகரத்தாரிடமும் ஆலயப் பராமரிப்பை ஒப்படைத்துச் சென்றுவிட்டார்கள். அதன்பின் இவ்வாலயத்தில் பூஜை செய்து கொண்டிருந்த திரு. இரகுஐயருடன் சேர்ந்து ஆரியநாட்டாரும், திருவிளங்க நகரத்தாரும் 1837ம் ஆண்டில் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி இரகுஐயர் பூசைப்பொறுப்பையும், மேலதிக அதிகாரத்தையும் பெற்று ஆலயத்தை நடத்திவந்தார் என குறிப்பிடப்பட்டிருந்ததென வரலாற்று சாசனங்கள் கூறுகின்றன.

ஸ்ரீ இரகுஐயருக்குப்பின், ஸ்ரீமுத்துச்சாமிக் குருக்களும், அதன்பின் ஸ்ரீசுப்பையாக் குருக்களும் பூசை செய்து கொண்டு வந்தார்கள் எனவும், இரகுஐயருடைய மகள் செல்வி. தர்மசம்வர்த்தனி அம்மாளை திரு. கா. பஞ்சநதக் குருக்கள் திருமணம் செய்தமையால், உரிமைப்பிரகாரம் ஸ்ரீபஞ்சநதக் குருக்கள் இவ்வாலயத்தில் பூசைசெய்துவந்தார் எனவும், பஞ்சநதக் குருக்களுக்குப்பின் அவருடைய புதல்வர் சிவஸ்ரீ ப. யோகீஸ்வரக் குருக்கள் ஆலயப் பொறுப்பையேற்று பூசை செய்து வந்தார் எனவும், இவ் ஆலய குறிப்புக்கள் கூறிநிற்கின்றன. இவர் சிறந்த ஞானஸ்தராக விளங்கியமையால் இவருடைய காலத்தில் ஆலயம் சிறந்த நிலையில் இருந்து வந்ததெனவும், அவருக்குதவியாக ஸ்ரீ பாலக்கிருஷ்ண ஐயரும் பூசை செய்து வந்ததாகவும் அறியக் கிடக்கின்றது.

ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட ஆலயத்தில் காலத்திற்குக் காலம் திருப்பணிகள் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. ஆரியநாட்டாரரும், திருவிளங்க நகரத்தாரும் மகாமண்டபம், ஸ்நபன மண்டபம், ஸ்தம்பமண்டபம், வசந்தமண்டபம் என்பனவற்றைக் கட்டியிருந்தார்கள்.

2வது உலகயுத்தத்தின் தாக்கத்தால் ஆலயம் பராமரிப்பிழந்திருந்த போதிலும், நித்தியபூசைகள் நடைபெற்றுவந்து, 1941ல் ஆலயத்தில் சில திருப்பணிகளைச் செய்து கும்பாபிஷேகம் செய்யப்பட்டிருந்தது. எனினும், 1942 களில் ஜப்பானியருடைய குண்டு வீச்சினால் ஆலயப் பராமரிப்புச் சீர்குலைந்து, பின்னர் 1980 களில் மீளவும் பல திருப்பணிகள் செய்யப்பட்டு புனருத்தாரண மகாகும்பாபிஷேகம் நடைபெற்று இன்று சிறப்பாக ஆலயப் பூசை விழாக்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அடுத்த கும்பாபிஷேக பணிகள், பாலஸ்தான பணிகள்  நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

ஆவணி மாதத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற தினத்தை முதல் நாளாகக்கொண்டு பத்து நாட்கள் அலங்கார உற்சவம் நடைபெறுவதோடு, வைகாசித் திருவோணத்தில் கம்சன் கதை படிக்கப்பட்டு கிருஷ்ணபரமாத்மாவுக்கு உற்சவம் நடத்தப்படும். வைகாசித் திருவோணத்தை கிருஷ்ணபரமாத்மாவின் அவதாரத் தின விழாவாகவும், அதனை அடுத்துவரும் ஐந்தாம் நாள் ருக்குமணி கல்யாண விழாவாகவும், ஆறாம் நாள் கம்சன்சுதை விழாவாகவும், ஏழாம் நாள் வாணாசுரன் போராகவும், பத்தாம் நாள் சத்தியபாமா கல்யாண விழாவாகவும் அலங்கார உற்சவம் நடைபெற்று வருகின்றது. ஆவணிமாத ஜென்ம அஷ்டமியன்று உறியடிவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. புரட்டாதிச் சனிவாரம் நான்கு நாட்களிலும், கார்த்திகை விளக்கீடு அன்றும் இரவில் விசேட திருவிழாவும், மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவும் திருப்பாவை விழாவும், ஒவ்வொரு ஏகாதசியிலும் திருவிழாவும் இவ்வாலயத்தில் நடைபெற்று வருகின்வருகின்றது. இவ்வாலயத்தில் கடைசியாக நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் பின்னர் இவ்வாலயச் சூழலில் ஒருவகையான அருட்பிரகாசம் காணப்படுகின்றது. மக்களுடைய ஆதரவும் பெருகி வருகின்றது

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கொம்மாதுறையில் யானைத்தாக்குதலில் ஆசிரியர் வீடு பெரும் சேதம்

Pagetamil

திருக்கோணேஸ்வரர் ஆலய லிங்கேற்பவர் அபிஷேகம் மற்றும் பூஜை

Pagetamil

யானை தாக்கி குடும்பஸ்தர் பலி – மூதூரில் சம்பவம்

Pagetamil

குடிசைகளை எரித்த வனவளத் திணைக்கள அதிகாரிகள்

Pagetamil

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி விழா பக்திபூர்வமாக அனுஷ்டிப்பு

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!