அமெரிக்காவில் 25 வருடங்களாக வசித்து வந்த ஒரு பாகிஸ்தானிய குடும்பம் சமீபத்தில் தாயகம் திரும்பிய நிலையில், தனது மகளின் டிக்டொக் காணொளிகளை ஏற்க முடியாததால், தந்தையே அவரை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை, பாகிஸ்தானின் தென்மேற்கு நகரமான குவெட்டாவில் 19 வயதான ஹிரா என்பவளை அவரது தந்தை அன்வர் உல்-ஹக் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில், அடையாளம் தெரியாத சில ஆண்கள் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பாக இருப்பதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தாலும், பின்னர் தாமே தனது மகளை கொலை செய்ததாக குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அவரது மகள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்த காணொளிகள் குடும்பத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் இல்லை என அவர் தெரிவித்ததுடன், இது ஒரு “கௌரவக் கொலை” என்று சந்தேகிக்கப்படும் சம்பவமாக உருவெடுத்துள்ளது.
பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான பெண்கள் “கௌரவக் கொலை” என்ற பெயரில் தங்கள் குடும்பத்தினரால் கொல்லப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. ஹிராவின் கொலையில் தொடர்புடையதாக அவரது தந்தையின் மைத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலைகாரர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது, இந்த வழக்கை மேலும் விரிவாக விசாரணை செய்யும் பணியில் பொலிஸார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.