27.6 C
Jaffna
February 12, 2025
Pagetamil
இந்தியா

கமலின் மநீம-வில் இருந்து விலகியது ஏன்? – நடிகை வினோதினி விளக்கம்

நடிகர் கமல்ஹாசனின் அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக நடிகை வினோதினி அறிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதள பதிவில் அவர் கூறியதாவது:

“மய்யத்திலிருந்து மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுகிறேன். அரசியல் பெரிய கடல். அதில் முத்தெடுத்து, மக்களுக்குச் சேர்க்க, தனிப்பட்ட நபரால் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் செய்ய தேவை – எண்ணம், சிந்தனை, செயல், பணம். என்னிடம் எண்ணமும், சிந்தனையும் மட்டுமே உள்ளது என்பதைக் காலம் புரிய வைத்திருக்கிறது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என் செயலும் பணமும் எனது சொந்த வாழ்க்கைத் தரத்தை ஓரளவு முன்னேற்றுவதற்கும், நான் மேற்கொண்டுள்ள தெருவிலங்குகளின் (நாய், பூனை, ஒரு கோஷாலாவில் என் செலவில் வாழும் சில மாடுகள்) வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதற்குமே சென்றிருக்கிறது.

இந்தியில் ஒரு வார்த்தை இருக்கிறது. அதை நான் சொல்லிப்பல பேரைத் திட்டியிருக்கிறேன். காம்சோர் என்பதுதான் அந்த வார்த்தை. ஆங்கிலத்தில் சொன்னால் Slacker. கடமைகளைத் தட்டிக்கழிக்கும் சோம்பேறி. மய்யத்தில் நான் செய்தது காம்சோர். இதை ஒத்துக்கொள்வதில் தவறில்லை என்றும் இந்த உண்மையை வெளிப்படுத்துவதன் மூலம் எனக்கு மிகப்பெரிய சுதந்திரம் கிடைக்கிறது என்றும் நம்புகிறேன்.

பலர் இங்கு, கட்சி நடக்கிறதா என்றெல்லாம் கேட்பார்கள். எப்பொழுதும் நான் சொல்வது – கட்சிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சிந்தியுங்கள். சிறு துளி கூட பெரு வெள்ளமாகும். அச்சிறு துளியைக்கூட நான் என் பல அலுவல்களுக்கு நடுவில்தான் செய்திருக்கிறேன். முழுமையாக அல்ல.

அமெரிக்க அரசியலில் ஒரு டேர்ம் பயன்பாட்டில் உள்ளது. கேரியர் பாலிடிஷ்யன். முழுமையாக அரசியலில் மட்டுமே இருப்பவர்கள், அரசியலையே தொழிலாகக் கொண்டவர்கள், அதிலிருந்தே சம்பாதிப்பவர்கள். ஆனால் அதை முறியடித்துத்தான் ட்ரம்ப் அதிபரானார். (அவர் அமெரிக்காவிற்கு சரியான தலைவரா இல்லையா என்பது வேறு விஷயம்). ஆனால் அங்குள்ள மக்களே உணர்ந்தது என்னவென்றால் – தொழிலதிபரான ட்ரம்ப் எல்லாவிதத்திலும் மக்களின் நலனுக்காக மக்கள் கஷ்டங்கள் தெரிந்து போராடுவார், இதைத்தான் அமெரிக்காவை நிறுவியவர்கள் விரும்பினர் என்று. ஆனால், அப்படி முழுநேர அரசியல் செய்யாமல் அவ்வரசியலிலிருந்து பொருள் ஈட்டாமல் இருக்க, மக்கள் பணத்தைச் சுருட்டாமல் இருக்க, சொந்தமாகப் பெரிய வணிக அல்லது பொருளாதாரப் பின்புலம் தேவை. அது என்னிடம் இல்லை.

கட்சி எடுத்த பல நிலைப்பாடுகளைக் கேள்வி கேட்டிருக்கிறேன். பெருந்தன்மையோடு எனக்கு புரிய வைத்திருக்கின்றனர். யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்புக்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. தலைவரோடு நேரடியாக உரையாட, கேள்வி கேட்க, பற்பல நிகழ்ச்சிகளைத் துவக்க, பற்பல செயல்பாடுகளை முன்னெடுக்க. ஆனால் அவற்றையெல்லாம் நான் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

கமல்ஹாசன் போன்ற மகத்தான தலைவனைத் தவறவிட்டது தமிழ்நாடு மட்டுமல்ல, வினோதினியும்தான். தொடர்ந்து என் எண்ணமும் சிந்தனையும் தமிழ்நாட்டு அரசியலை மையப்படுத்தியே இருக்கும். ஏனெனில், நான் பிறந்த இம்மண்ணுக்கு என் மக்களுக்கு என்னால் ஆன சிறு மாற்றத்தையாவது, குறைந்தபட்சம் சிந்தனையளிவிலாவது, இப்பிறவியில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் என் நோக்கம்.

65 வயதிற்கு மேலும் தனது மூத்திரப்பையை கையில் ஏந்தி பகுத்தறிவு புகட்டிய அந்த தாத்தனைப்போல், இன்றும் எங்கள் மய்யத்தில் கொடி நட்டு, போஸ்டரடித்து, உறுப்பினர் சேர்த்து, ஒவ்வொரு தேர்தலின்போதும் அயராது களத்தில் இறங்கி வேலை செய்யும் தொண்டனைப்போல், மக்கள் பிரச்சினை என்றால் களத்தில் குதிக்கும் ஒவ்வொரு கட்சியின் நிர்வாகிபோல் நானும் என் கணக்கைத் தொடங்கும் பொழுதுதான் அது அரசியல் அல்லாது, அறச் செயலாக மாறும்.

அதுவரை, சிந்தனையில் மட்டுமே. அச்சிந்தனையை மெருகேற்றிய கமல்ஹாசனுக்கும் அவர்பின் நின்ற, நிற்கும் அனைவருக்கும் நன்றிகளும் அன்பும். தொடர்ந்து பயணிப்போம். சமரசமற்ற நடுவு நிலையில் இருந்தபடியே” என அவர் கூறியுள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியில் வினோதினி இணைந்தார். இந்த சூழலில் தற்போது கட்சியில் இருந்து விலகி உள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“வாடகை மனைவி” முறை உள்ள ஊர்

east tamil

ம.பி.யில் நடனமாடிக் கொண்டிருந்த 23 வயது பெண் மாரடைப்பால் உயிரிழப்பு

Pagetamil

உலகமே ஏற்றுக்கொண்டாலும் பெரியாரை நான் தொடர்ந்து எதிர்ப்பேன்: சீமான் திட்டவட்டம்

Pagetamil

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிறுத்தி வைத்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது: உச்ச நீதிமன்றம் கருத்து

Pagetamil

இந்திய பாதுகாப்புப் படையினரால் 31 மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொலை

east tamil

Leave a Comment