27.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

மாவை சேனாதிராஜா – ஒரு அரசியல் சரித்திரம்

இலங்கை தமிழரசுக் கட்சி வரலாற்றில் ஒரு நிலைகல், மாவை சேனாதிராஜா (சோமசுந்தரம் சேனாதிராஜா). இவர் 1942ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 27ம் திகதி பிறந்தவர். யாழ்ப்பாணம் வலி.வடக்கு மாவிட்டபுரத்தை சொந்த இடமாகக் கொண்டவர்.

இளமைத் துடிப்புடைய அரசியல் கிளர்ச்சியாளர்கள் பொறுப்பு வாய்ந்த அரசியல் தலைவர்களாக மாறிய நிகழ்வுகள் வரலாற்றில் நிறைந்து கிடக்கின்றன. கொந்தளிப்பான ஆர்ப்பாட்டங்களிலும் அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்ற கிளர்ச்சி உணர்வுகொண்ட இளைஞர்கள் அவர்களின் வாழ்நாளின் பிற்பகுதியில் சமநிலை உறுதியுடையவர்களாகவும், அரசியல் கட்டுமானத்தின் பாரம்பரிய தூண்களாகவும் படிமுறை வளர்ச்சி காண்கிறார்கள்.

மாவிட்டபுரத்தை சேர்ந்தவர் என்பதால் சேனாதிராஜா தனது பெயருடன் முன்னிணைப்பாக மாவை என்ற சொல்லை சேர்த்துக் கொண்டார். அந்த கிராமத்தின் கந்தசாமி கடவுள் மாவை கந்தன் என்று அழைக்கப்படுவதை போன்று மாவை சேனாதிராஜாவும் மாவிட்டபுரத்தின் மிகவும் பிரபலமான பிரதிநிதியாகவும் விளங்குகிறார். பலர் அவரை எளிதாக சேனாதி, மாவை அல்லது மாவை அண்ணன் என்று அழைக்கிறார்கள்.

தனது இளமைக்கல்வியை வீமன்காமம் பாடசாலையிலும், நடேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்ற பின்னர், இலங்கைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் கற்றார்.

சிறிமா பண்டாரநாயக்கவின் ஐக்கிய முன்னணி அரசாங்க காலத்தில் யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெருமளவு அமைதியின்மை ஏற்பட்ட நாட்கள் அவை. ஹர்த்தால்கள், பகிஷ்கரிப்புகள், ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், மறியல் போராட்டங்கள், கறுப்புகொடி போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் என்று அந்தக் காலத்தில் பெருவாரியான அரசியல் போராட்டங்கள் நடைபெற்றன. அந்த போராட்டங்களில் முன்னணியிலிருந்து செயற்படும் இளைஞராக மாவை சேனாதிராஜா இருந்தார்.

இளம் வயதில் பல்வேறு போராட்டங்களில் கலந்து தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த இன வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்த மாவை 1973ல் கைது செய்யப்பட்டு 1977ல் விடுதலை செய்யப்பட்டிருந்தார். சிறை சென்றதால் பல்கலைக்கழக கற்கையை தொடர முடியாத நிலை ஏற்படவே வெளிவாரி கற்கை, சட்டத்துறை கற்கையையும் தொடர இயலாமல் இடை விலகினார். சிறையிலிருந்து விடுதலை பெற்ற பின்னர் 1978ல் இந்தியாவிற்கு சென்ற இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று பட்டத்தை பெற்றுக்கொண்டார்.

தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிகளுக்காக சிறுவயது முதலே கிளர்ந்தெழுந்து பல்வேறு அஹிம்சை போராட்டங்களிலே பங்கெடுத்தார். தந்தை செல்வா தமிழ் மக்களுக்காக நடத்திய சத்தியாக்கிரக போராட்டங்களின் போது உடனிருந்து செயற்பட்டார். 11 தடவைகள் கைது செய்யப்பட்டு மொத்தமாக 7 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்தார்.

வாலிப முன்னணியின் செயலாளராகவும், இளைஞர் பேரவையின் செயலாளராகவும் இளம் வயதில் செயற்பட்ட இவர், தமிழரசுக்கட்சியின் உறுப்பினராகவும், தமிழர் விடுதலை கூட்டணியின் அரசியல் குழு உறுப்பினராகவும் தொடர்ந்தும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

சேனாதிராஜா 1989 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு கூட்டணியின் வேட்பாளர்களில் 13வதாக வந்து தோல்வியடைந்தார். ஆனாலும், அ. அமிர்தலிங்கம் 1989 யூலை 13ம் திகதி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவரின் இடத்திற்கு சேனாதிராசா தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். 1999 யூலை 29ல் நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மீண்டும், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றார்.

2000ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் 2001, 2004, 2010ம் ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். செப்டம்பர், 2014ல் சேனாதிராஜா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

2020ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்கட்சி முரண்பாடுகள் மற்றும் வாக்கு வீழ்ச்சியால், மாவை சேனாதிராஜா தோல்வி கண்டார். இது அவரது நீண்ட அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய மாற்றமாகும்.

இலங்கை தமிழரசு கட்சியின் மிக நெருக்கடியான காலங்களில் தலைவராகப் பணியாற்றி கட்சியை கொண்டு செல்வதற்கு பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்ட ஒரு உன்னதமான நபர் ஆவார்.

இவர் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக செயலாற்றிய காலப்பகுதியில் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளில் இருந்து வேறுபட்ட பல கொள்கைகள் சார்ந்து செயற்பட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். தலைவர் பதவியில் இருந்த போதிலும் கட்சியின் உறுப்பினர்களாலும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களாலும் எடுக்கப்பட்ட முடிவுகளை கட்டுப்படுத்த முடியாத நிலைமையில் கட்சி சீரழிந்து செல்ல இவரது ஆளுமையற்ற தன்மையும் காரணமானது.

மேலும் கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் தமிழ் பொது வேட்பாளர்களுக்கு ஆதரவளித்ததுடன், கட்சியின் முடிவுகளை மீறி செயற்பட வேண்டிய கட்டாயத்துக்கும் ஆளாகியிருந்தார்.

இவரது காலப்பகுதியில் எடுக்கப்பட்ட பல முடிவுகளில் விளைவாக இலங்கை தமிழரசு கட்சி சிதைவடைந்த நிலைக்குச் செல்வதற்கு இவரும் ஒரு காரணம் எனலாம்.

இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நீண்ட காலமாக உடல்நல குறைபாடுடன் காணப்பட்ட நிலையில் இன்றைய தினம் யாழ் போதனா வைத்தியசாலையில் தொடர் சிகிச்சைகள் தோல்வியடைந்த நிலையில். தனது 82வது வயதில் மரணம் அடைந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டையில் நூதன கொள்ளை

east tamil

மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணு லான்ஸ் கோப்ரல் பலி

east tamil

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

east tamil

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது

east tamil

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil

Leave a Comment