தம்பலகாமம் பிரதேசத்தில் உள்ள ஜனநாயக பங்குதாரர்கள் மற்றும் மக்களுக்கிடையிலான முக்கியமான கலந்துரையாடல் நேற்று (24.01.2025) தம்பலகாமம் பிரதேச கேட்போர் கூடத்தில் வெகுசிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் குச்சவெளி மற்றும் தம்பலகாமம் பிரதேசங்களின் முக்கிய ஜனநாயக பங்குதாரர்கள், உள்ளூர் ஊடகவியலாளர்கள், தம்பலகாமம் பிரதேச சபையின் செயலாளர், மற்றும் AHRC நிறுவனத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். இதற்கிடையில் பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்ட குறைகள், முறைப்பாடுகள் மற்றும் அவற்றுக்கான தீர்வு முயற்சிகள் குறித்து ஆழமான விவாதம் நடைபெற்றது.
2024 ஆம் ஆண்டின் டிசம்பர் 9ம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில் மக்கள் முன்வைத்த பிரச்சினைகளுக்கு எட்டப்பட்ட தீர்வுகள், அவற்றின் முன்னேற்றங்கள் மற்றும் இன்னும் நிலுவையில் உள்ள பிரச்சினைகள் பற்றி விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காததற்கான 2024ல் போதிய நிதி ஒதுக்கப்படாமையேமுக்கிய காரணம் என குறிப்பிடப்பட்டது.
இவ்வாண்டில் கிடைக்கவுள்ள நிதிகளை முழுமையாக பயன்படுத்தி நிலுவை பிரச்சினைகளுக்கு தீர்வு காணபடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை பெறப்பட்ட முறைப்பாடுகள் எண்ணிக்கை 7000 ஆகும், இதனை சீராகப் பகுத்து அவற்றில் சாத்யமானவற்றிற்கு விரைவில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என செயலாளர் உறுதியளித்தார். குறிப்பாக, AHRC நிறுவனத்தின் பங்குதாரர்களிடமிருந்து பெறப்படும் முறைப்பாடுகளை தனியாக கோவைப்படுத்தி அவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
கலந்துரையாடலின் போது வீதிகள் பராமரிப்பு, வடிகால் வசதிகள் மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் சீரமைப்பு ஆகியவை முக்கியமாக விவாதிக்கப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலின் முடிவில் மக்கள், உடனடியாக செயல்பாடுகளை ஆரம்பித்து, எதிர்வரும் மாதங்களில் தீர்வுகளுக்கான முன்னேற்றங்களை காண்போம் என்ற நம்பிக்கையுடன் நிகழ்வில் பங்கேற்றனர்.
தம்பலகாமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் இந்த கலந்துரையாடல்கள் மக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையேயான தெளிவான தொடர்பு மற்றும் திறமையான நிர்வாகத்தை உறுதிப்படுத்தும் முக்கியமான முயற்சியாக கருதப்படுகிறது.