-கருணாகரன்
தமிழ்த்தேசியத்தை வலுப்படுத்துவதற்கு தமிழ்த்தேசியப் பரப்பில் அல்லது அந்த அடையாளத்தோடு செயற்படும் கட்சிகள் ஐக்கியப்பட வேண்டும் என்ற அபிப்பிராயம் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. ஆனாலும் அந்தத் தளத்தில் செயற்படும் கட்சிகள் எதுவும் அதற்குத் தயாராக இல்லை என்பதே நடைமுறையாக – உண்மையாக – உள்ளது.
இதனால், இவர்கள் ஒற்றுமை, ஐக்கியம் என்று சொல்லும்போதெல்லாம் அதற்குத் தமிழ் மக்களிடத்திலே துளி மதிப்பும், சிறு நம்பிக்கையும் இல்லாது போய் விட்டது. ஒற்றுமை, ஐக்கியம் என்று யாராவது சொன்னால், அதைப் பகடியாகவும் சந்தேகத்தோடும் பார்ப்போரே அதிகம். இதற்குக் காரணம், ஐக்கியம், ஒற்றுமை என்று சொல்லப்படும்போதெல்லாம் மேலும் விரிசல்களும் உடைவுகளும் பிளவுகளும் பிரிவுகளுமே நிகழ்ந்திருக்கின்றன.
இதனால் ஆண்டுக்கொரு கட்சி என்ற காலம்போய், இப்பொழுது மாதத்துக்கொரு புதிய கட்சி என்றளவுக்கு நிலைமை ஆகியுள்ளது. தமிழ்ப்பரப்பில் கட்சிகள் பெருகிய அளவுக்கு அரசியல் வளரவேயில்லை. பதிலாக அது வரவரத் தேய்ந்துள்ளது.
2009 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரின் கீழ் இணைந்திருந்த தரப்புகள் கூட ஒவ்வொன்றாகப் பிரிந்து, பிளவு பட்டு இப்பொழுது பத்துக்கு மேற்பட்ட குழுக்களாக மாறி விட்டன.
ஒவ்வொரு சிறு குழுவும் பத்துப் பன்னிரண்டு பேரைக்கொண்டவையாகவே உள்ளன. சிலவற்றுக்கு அது கூட இல்லை.
இதில் பலவற்றின் பெயரைக் கூட மக்களுக்குச் சரியாகத் தெரியாது. எல்லாவற்றுக்கும் ஒரு அடைமொழியாக ‘தமிழ்த்தேசிய..’ என்ற முகமூடி உள்ளது. அதற்கப்பால் உள்ளீடாக – புதுமையாக இவை எதிலும் எதுவுமில்லை.
ஆனாலும் எல்லாமே கட்சி என்ற கோதாவில்தான் இயங்குகின்றன. அதாவது தாமும் ஒரு (வலுவான) தரப்பு என்ற மாதிரியே காட்டிக் கொள்ள முற்படுகின்றன. முக்கியமாகத் தேர்தல் மற்றும் அரசியல் தீர்வு பற்றிய பேச்சுகள் என்று வந்தால், தமக்கும் ஒரு பங்கு என்ற விதமாகப் பெரும் பிரகடனங்களோடு சிலிர்த்து எழுந்து நின்று விடுகின்றன.
அப்படிச் சிலிர்த்தெழுகின்ற அளவுக்கும் கூடிப் பேசி, அறிக்கைகளை விடுகின்ற அளவுக்கும் எந்த விடயத்திலும் முன்னேற்றம் ஏற்படுவதேயில்லை. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல்கள் இதற்குச் சான்று.
ஆகவே எல்லாமே ‘பெட்டிக்கடை ராஜாங்கம் நடத்தும் ராசுக் குட்டிகள்” தான்.
இந்த நிலையில்தான் தமிழ்த்தேசியப் பரப்பிலுள்ள கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்று சிலர் முயற்சிக்கிறார்கள். “அது காலத்தின் கட்டாயம். அப்படி நடக்கவில்லை என்றால், அடுத்து வரவுள்ள உள்ளுராட்சி மன்றத்துக்கான தேர்தலிலும் NPP யிடம் கோட்டை விட வேண்டியிருக்கும். அதை விட அருச்சுனா பல இடங்களிலும் சுயேட்சைக் குழுக்களை நிறுத்தப்போகிறார். அதற்கான தயாரிப்புகளை – ஆயத்தங்களை – அருச்சுனாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் செய்யத் தொடங்கி விட்டன. எனவே இது இன்னொரு புதிய பிரச்சினையாக மாறப்போகிறது. இப்படியே போனால், தமிழ் மக்களைத் தேசமாகத் திரட்டவே முடியாது. தேசமாகத் தமிழ் மக்கள் திரள்வதைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் அத்தனை சூதுகளையும் நாம் முறியடிக்க வேண்டும்..” என்று இந்தச் சிங்கங்கள் கர்ஜிக்கின்றன. மன்னிக்கவும் இந்தப் புலிகள் உறுமுகின்றன.
”இப்படியெல்லாம் ஆபத்துகளைப் பற்றி எடுத்துரைத்து, தங்கமான அறிவுரைகளைச் சொன்னாலும் எந்தப் பயலும் கேட்பதாகத் தெரியவில்லை” என்று கவலைப்படுகிறார், மூத்த ஊடகவியலாளர் ஒருவர்.
தமிழ்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கும் தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்துவதற்கும் தமிழ் மக்களைத் தேசமாகத் திரட்டுவதற்கும் பல முன்னெடுப்புகள் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டன.
2009 க்குப் பிறகு – தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வெளியே தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசியப் பேரவை, தமிழ்மக்கள் பொதுச்சபை (Tamil people’s Assembly) தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு எனப் பல அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன. இடையில் P to P என பருத்தித்துறை தொடக்கம் பொத்துவில் வரை என்ற அமைப்பொன்று. இதற்கெல்லாம் சிகரம் வைப்பதைப்போல, தமிழ்ப்பொது வேட்பாளர் கூட கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது நிறுத்தப்பட்டார்.
அப்பொழுது, “தமிழ்ப் பொது வேட்பாளர் தெரிவு எனப்படுவது பேரம் பேசலுக்கானது என்பது அதன் முதன்மை நோக்கம் அல்ல. முதன்மை நோக்கம் எதுவென்றால், தமிழ் மக்களை ஒரு தேசமாகக் கட்டியெழுப்புவதும் தமிழ் மக்களின் ஐக்கியத்தை உலகத்துக்குக் காட்டுவதும் தமிழ் மக்களின் உச்சமான கோரிக்கைகளுக்குரிய ஆகப் பிந்திய மக்கள் ஆணையை பெறுவதும்தான். தமிழ்ப் பொது வேட்பாளர் எனப்படுவது தமிழ் ஐக்கியத்தின் குறியீடு. தமிழ் மக்களை ஒரு தேசமாகக் கட்டியெழுப்பும் ஒரு தெரிவு. தமிழ் மக்களின் உச்சமான கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதித் தேர்தலை ஒரு மறைமுக பொதுசன வாக்கெடுப்பாகப் பயன்படுத்தும் ஒரு தெரிவு..” என வியாக்கியானப்படுத்தப்பட்டது.
அதற்குமுன், தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டபோது, ‘தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற எல்லைகளுடன் மட்டும் தனது பணியை மட்டுப்படுத்தாமல் தமிழ் மக்களின் கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாத்தல், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சமூக மேம்பாட்டில் கரிசனை கொள்ளுதல், பொருளாதாரத்தை- வளப்பயன்பாடுகளை உச்சமாக்குதல் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் என்பதோடு, தமிழ்த்தேசியத்தைக் கோட்பாட்டுத் தளத்திலும் செயற்பாட்டுத்தளத்திலும் வலுப்படுத்துவதற்குப் பாடுபடும்” என்று சொல்லப்பட்டது.
இப்படியெல்லாம் முயற்சிகள் நடந்தாலும், எதிர்பார்ப்புகள் இருந்தாலும் இவை அனைத்தும் அடையாளம் தெரியாமல் படுத்ததே வரலாறு. என்றபடியால்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசியப் பேரவை, தமிழ்மக்கள் பொதுச்சபை (Tamil people’s Assembly) தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு எனப் பல அமைப்புகள் கடந்த 15 ஆண்டுகளுக்குள் அடையாளம் காட்டி மறையும் நிலையேற்பட்டது. இதை விட தமிழ்ச் சிவில் அமைப்பு என்ற பேரில் பல அமைப்புகளின் கூட்டாகவும் சில அமைப்புகள் தோன்றி மறைந்தன.
ஆகவே கட்சிகள் மட்டுமல்ல, அமைப்புகளும் குழுக்களும் பலவாகத் தோன்றியுள்ளன. தோன்றியுள்ளவற்றில் பலவும் மறைந்தும் மறந்தும் விட்டன.
ஒவ்வொரு அமைப்பும் தோன்றும்போது மிகப் பெரிய ஆரவாரத்தைக் காட்டுவது வழமையாக இருந்தது. தமிழ் மக்கள் பேரவை தொடங்கப்பட்டதை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். இதோ மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கப்போகிறது தமிழ் மக்கள் பேரவை என தமிழ் ஊடகங்கள் எல்லாம் எழுதித்தள்ளின. தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்ட 2014, 2015, 2016 ஆம் ஆண்டுகளில் வந்த பத்திரிகைகள், இணையத் தளங்களைப் பார்த்தீர்களென்றால், இப்போதும் சிலருக்குப் புல்லரிக்கக் கூடும். அந்தளவுக்கு அதனுடைய பிரகனடங்களும் நம்பிக்கையூட்டல்களும் இருந்தன. இனப்பிரச்சினைக்குத் தீர்வு யோசனையைக் கூட பேரவை உருவாக்கியது. மட்டுமல்ல, மக்களை எழுச்சியடைய வைப்பதற்காகவும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாகவும் எழுக தமிழ் என்ற எழுச்சி நிகழ்ச்சியைப் பேரவை நடத்தியது. கூடவே அதற்கான பிரகடனத்தையும் வெளியிட்டிருந்தது.
இப்பொழுது பேரவை இருந்த இடத்தையே காணவில்லை. அதில் பங்குபற்றியோர் பல அணிகளாகவும் கட்சிகளாகவும் குழுக்களாவும் சிதறிப்போய் விட்டன. அப்படித்தான் பின்னாளில் உருவாகிய ஏனைய அமைப்புகளான தமிழ்த் தேசியப் பேரவை, தமிழ்மக்கள் பொதுச்சபை (Tamil people’s Assembly) தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு போன்றவையும் உடைந்து சிதறி விட்டன.
ஆக மொத்தத்தில் தேசமாகத் திரள வேண்டும் என்றவர்களும் தமிழ்த்தேசியத்தை வலுப்படுத்த வேண்டும் என்பவர்களும் தங்களுக்குள் உடைந்து சிதறியதே – சிதறிக் கொண்டிருப்பதே தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கிறது.
இப்பொழுது இலங்கைத் தமிழரசுக் கட்சியும் உடந்து சிதறும் நிலையிலேயே உள்ளது. அதனுடைய உள் வீட்டு மோதல்கள் கட்சியை நீதிமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் நீதியைக் கேட்கும் அளவுக்கும் முறைப்பாடுகளைச் செய்கின்ற அளவுக்கும் கொண்டுபோய் நிறுத்தியுள்ளன.
இந்த நிலையில் இந்தப் பாடங்களைப் படித்தவர்கள் என்ற அடிப்படையில், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (DTNA)என்ற பெயரில் இயங்கும் முன்னாள் இயக்கங்களுக்கிடையில் ஏதாவது அதிசயங்கள் நடக்குமா என்று பார்த்தால், அங்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
அவற்றக்கிடையிலும் வலுவான ஐக்கியம் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி வலுவான ஐக்கியம் இருக்குமானால், அவை தற்போதைய சூழலில் எப்படிச் செயற்படுவது? எதிர்காலத்துக்குரிய அரசியலை எப்படி மேற்கொள்வது என்பதைக் குறித்தெல்லாம் ஆராய முற்பட்டிருக்கும். குறைந்த பட்சம் தமக்கிடையிலான ஐக்கியத்தை வலுப்படுத்துவதோடு, மக்களுக்கான வேலைத்திட்டங்களை எப்படி மேற்கொள்வது என்று திட்டமிட்டிருக்கும்.
மக்களுக்கான வேலைத்திட்டங்களே, மக்களோடு கட்சியை, கூட்டணியைப் பிணைக்கும். இதைப் புரிந்து கொள்வதற்குப் பதிலாக, தேர்தற் கூட்டுக்கு ஏற்றமாதிரியே தந்திரமாக இதற்குள் உள்ள கட்சிகள் செயற்படுகின்றன. இதனால்தான் “கொள்கை அடித்தளம் இல்லாமல் கட்சிகளை ஒருங்கிணைப்பது தற்காலிகமானது செயற்கையானது என்று கூறப்படுவதுண்டு.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு பெருங்குறைபாடுண்டு. அதற்குத் தன்னம்பிக்கை குறைவும் தாழ்வுச் சிக்கலும் உண்டு. அதனால்தான் அது பல சந்தர்ப்பங்களிலும் எத்தகைய அரசியல் நிலைப்பாட்டை எடுப்பது என்று தெரியாமல் தடுமாறுகிறது. சில சந்தர்பங்களில் அது தமிழரசுக் கட்சியைப்போல செயற்பட விளைகிறது. தமிழரசுக் கட்சியோடு கூட்டு வைத்துக் கொள்ளலாம் என ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருக்கும் சித்தார்த்தனும் செல்வம் அடைக்கலநாதனும் கருதுகிறார்கள். சுரேஸ் பிரேமச்சந்திரனோ, கஜேந்திரகுமார், சிறிதரன், விக்கினேஸ்வரன் போல அதிதீவிர அரசியல் பிரகடனங்களைச் செய்கிறார். இது தமிழரசுக் கட்சிக்கும் மென்போக்கு – தீவிரப் போக்கு என இரண்டு முகங்கள் – இரட்டை நிலைப்பாடு இருப்பதை ஒத்ததாகும்.
இதற்குக் காரணம், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது தன் சொந்தப் பலத்தில் நிற்பதற்குத் தயங்குகிறது, நம்பிக்கையற்றிருக்கிறது என்பதேயாகும். மட்டுமல்ல, சொந்த உழைப்பில் நின்று, தான் சரியென்று கருதும் ஒன்றை மக்களிடம் கொண்டு சென்று அதன் மூலம் வெற்றிபெறச் செய்வதற்கான திடசித்தம் இல்லாதிருக்கிறது.
ஆகவே எந்தத் திசையிலும் ஒற்றுமைக்கான, ஐக்கியத்துக்கான வாய்ப்புகளில்லை. எதிரிகள் பலமாக இருந்தால், அதை எதிர்கொள்வதற்குச் சிதறியிருப்போர் ஒருங்கிணைவது வழமை. ஆனால், அது கூட தமிழர் அரசியலில் இல்லை என்ற நிலை உருவாகி விட்டது.
இதனால்தான் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைக்கும் தீர்வுக்குமாக ஒரு தயாரிப்பைச் செய்வதற்கு கஜேந்திரகுமார் முன்னெடுக்கும் முயற்சிக்கு (படங்காட்டுதலுக்கு) இடமளிக்கக் கூடாதென்று தமிழரசுக் கட்சி மட்டக்களப்பில் வைத்து ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளது. அதன்படி கஜேந்திரகுமாரோடு கைகுலுக்க முற்பட்ட சிறிதரனுக்கும் கடிவாளம் போடப்பட்டுள்ளது. கஜேந்திரகுமாரையும் தனிமைப்படுத்தும் முயற்சியைத் தமிழரசுக் கட்சி செய்திருக்கிறது.
இந்த நிலைமையில் எப்படி ஒற்றுமைக்கான கதவுகள் திறக்கும்? ஒற்றுமையை நோக்கி எப்படிக் கைகள் நீளும்?
00