கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால், 20,000 ரூபாய் கையூட்டல் பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அதிகாரி குருநாகல், கிரிபாவ காவல் நிலையத்தில் பணியாற்றியவர் எனத் தெரியவந்துள்ளது.
தம்மை விட்டுப் பிரிந்து சென்ற மனைவிக்கு எதிராக கணவர் ஒருவர் முன்வைத்த முறைப்பாட்டில் விசாரணை மேற்கொள்வதற்காக, அந்த காவல்துறை அதிகாரி “நீதிமன்றத்தின் ஊடாக நட்டஈடு பெற்று தருவேன்” எனக் கூறி 20,000 ரூபாய் பணத்தை கையூட்டல் கேட்ட நிலையில், ஆணைக்குழுவின் கண்காணிப்பில் கைது செய்யப்பட்டார்.
அதுமட்டுமல்லாமல், “பணம் வழங்க தவறினால், வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றத்தில் விளக்கமறியலில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என முறைப்பாட்டை முன்வைத்த கணவரை அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
முறைப்பாட்டை முன்வைத்த நபரின் வீட்டில் சந்தேக நபரான காவல்துறை அதிகாரி 20,000 ரூபாய் பணத்தை நேரடியாக பெற்றுக் கொண்டதாகவும், இதனை அடுத்து, அதற்கான அனைத்து ஆதாரங்களுடன் அவர் கைது செய்யப்பட்டதாகவும் ஆணைக்குழு அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அதிகாரிக்கு எதிராக சட்டரீதியிலான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.