இள வயது பெண்களின் மத்தியில் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெண்களில் புகைத்தல் பயன்பாட்டு வீதம் அதிகரித்துள்ளதே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று தேசிய சுவாச விஞ்ஞான நிறுவனத்தின் விசேட சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் வைத்தியர் சமன் இத்தகொட தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (22) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் புற்றுநோயினால் பாதிக்கப்படுவோரில் நுரையீரல் புற்றுநோய் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தது. ஆரம்பத்தில் இது பெரும்பாலும் ஆண்களில் அதிகமாக காணப்பட்டாலும், தற்போது பெண்களிடமிருந்தும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களில் 60% முதல் 70% பேர் சிகிச்சைக்குப் பின்னரும் முழுமையாக சுகமடைவதில்லை என கூறிய வைத்தியர், 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன்புடன் ஒப்பிடுகையில், ஆண்களில் புகைத்தல் வீதம் குறைந்தாலும், பெண்களிடம் துரதிர்ஷ்டவசமாக அதிகரித்துவருவதாக ஆய்வுகள் காட்டியுள்ளன.
இதன் அடிப்படையில், இள வயது பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோயின் அபாயம் அதிகரித்து வரும் எச்சரிக்கை நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்நிலமை இலங்கை மட்டுமின்றி முழு ஆசிய வலயத்திலும் இருப்பது கவலைக்குரியதாகும். இதுதொடர்பான மேலதிக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.