மூதூர் மேன்காமம் பகுதியில், முன்னதாக மேன்காமம் பொலிஸ் நிலையமாக பயன்படுத்தப்பட்ட கிராம அபிவிருத்திச் சங்க கட்டடம், 15 ஆண்டுகளுக்குப் பின்னர் மக்களின் பயன்பாட்டிற்காக பொலிஸாரால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த கட்டடம் 15 ஆண்டுகளாக எந்தவித கொடுப்பனவுமின்றி பொலிஸ் நிலையமாக செயல்பட்டு வந்தது. 2025 ஜனவரி 17 அன்று நடைபெற்ற மூதூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் குறித்த கட்டடத்தை மக்களின் பயன்பாட்டிற்காக மீள வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.
இக் கட்டடம் ஆரம்பத்தில் தாய்-சேய் பராமரிப்பு நிலையமாகவும், நூலகம் உள்ளிட்ட பல தேவைகளுக்காக அமைக்கப்பட்டதாக இருந்தது. ஆனால், அவசர தேவை காரணமாக பொலிஸ் நிலையத்திற்கு ஒதுக்கப்பட்டது. இதனால் மக்கள் பொதுக்கட்டட வசதிகளை இழந்து சிரமப்பட்டனர்.
கட்டடத்தை மீள மக்களுக்கு வழங்க கோரி, 2020 பெப்ரவரியில் மக்கள் கடித மூலமாக கோரிக்கை செய்திருந்த போதிக்கும் இதற்கான பலன் ஏதும் கிடைக்காத நிலையில், கடந்த 17ம் திகதி நடைபெற்ற மூதூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, பிரதேச செயலகம் மற்றும் பொலிஸ்மா அதிபர் உட்பட அதனுடன் தொடர்புடைய தரப்புகளின் அனுமதியுடன், கட்டடம் மக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டது.
இது மேன்காமம் கிராம மக்களுக்கு தேவையான சேவைகளுக்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.