எதிர்வரும் இரண்டு வாரங்களில் தட்டுப்பாடின்றி மருந்துகளை வழங்குவதற்கு உற்பத்தித் திறனைத் துரிதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது, இது தொடர்பான முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அமைச்சர் பல்வேறு காரணங்களால் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் தொடர்ச்சியாக வழங்குவது சவாலாக மாறியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
மருந்து வழங்குநர் பற்றாக்குறை, உலகளாவிய சிக்கல்கள் மற்றும் விநியோக வலையமைப்பின் சீர்குலைவு ஆகியன மருந்து விநியோகத்தில் மந்தநிலையை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மருந்து உற்பத்தி திறனை அதிகரிக்கத் தேவையான மூலப்பொருட்களை உடனடியாக இறக்குமதி செய்வதில் உள்ள சிக்கல்களும் இதன் போது ஆராயப்பட்டன. இதனையடுத்து, மருந்து விநியோகத்தைச் சீர்செய்யும் திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதற்கு அவரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், அரச மருந்தக சங்கிலியின் கிளைகள் எண்ணிக்கையை ஒவ்வொரு நகரத்தையும் உள்ளடக்கும் வகையில் அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
மருந்து ஆராய்ச்சி, விநியோக திட்டங்கள், ஆய்வக வசதிகள், சந்தைப்படுத்தல் மற்றும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் மனித வள மேம்பாடு போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடல் இடம்பெற்றது.