ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், சீன மற்றும் இந்திய நிறுவனங்களுடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்களை பாராட்டியுள்ள பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இதனை வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்க்கட்சியில் இருந்த போது இவ்வாறான ஒப்பந்தங்களை “ஊழல்” என விமர்சித்தவர்கள், தற்போது அதே நிறுவனங்களுடன் வெளிநாட்டு நேரடி முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது குறித்து கேள்வியுடன் அவர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
“முந்தைய ஆட்சியில், இந்த நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்தபோது, தேசிய மக்கள் சக்தி இந்த நிறுவனங்களை சர்ச்சைக்குரியவை மற்றும் ஊழல் நிறைந்தவை என குற்றம்சாட்டியது. ஆனால் இன்று, அதே தேசிய மக்கள் சக்தி, தனது சொந்த வார்த்தைகளை மறுத்து, அதே நிறுவனங்களுடன் மீண்டும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது,” என நாமல் ராஜபக்ச சாடியுள்ளார்.
அத்தோடு, “இந்த வெளிநாட்டு முதலீடுகளை ஏன் அவர்கள் எதிர்த்தார்கள்? இந்திய மற்றும் சீன நிறுவனங்களின் நற்பெயருக்கு ஏன் களங்கம் விளைவித்தார்கள்? தேசிய மக்கள் சக்தியின் வெளியுறவுக் கொள்கை என்ன?” என்ற கேள்விகளை மக்கள் முன் எழுப்பியுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், தேசிய மக்கள் சக்தி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.