மன்னார் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் முன்னாள் இராணுவச் சிப்பாய்கள்.
கடந்த 16ஆம் திகதி மன்னார் நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாக நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டிருந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கடந்த சில வருடங்களின் முன்னர், மன்னார், உயிலங்குளத்தில் நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தின் தொடர்ச்சியாக நடந்து வரும் கொலைகளின் வரிசையில் இந்த சம்பவமும் நடந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
இரட்டைக்கொலை வழக்கு விசாரணைக்காக வந்தவர்களே துப்பாக்கிதாரிகளால் சுடப்பட்டனர்.
வெளிநாட்டில் உள்ள ஒருவரே கூலிப்படையினர் மூலம் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர். அந்த நபரை சர்வதேச பொலிசாரின் உதவியுடன் கைது செய்ய பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில் கூலிப்படையாக செயற்பட்டு துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகத்தில் இருவரை நேற்று முன்தினமே பொலிசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மன்னார், நடுக்குடாவில் வைத்து ஒருவரும், கொழும்பில் வைத்து ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவரும் முன்னாள் இராணுவச்சிப்பாய்கள் என்பது குறிப்பிடத்தக்கது.