மட்டக்களப்பின் முந்தணி ஆற்று வடிநிலம் மற்றும் அதனைச் சூழ்ந்த தாழ்நிலங்களில் வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. மஹாஓயா, ஏறாவூர்பற்று, கோறளைப்பற்று தெற்கு உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளின் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தணி ஆற்று வடிநிலத்திற்குத் தாக்கம் செலுத்தும் ரம்புக்கனை ஓயா நீர்த்தேக்கம், உறுகாமம் குளம், மற்றும் மாவடிஓடை அணைக்கட்டின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை காரணமாக வெள்ள அபாய நிலை உருவாகியிருக்கலாம். உறுகாமம் குளத்தின் நீர்கொள்ளவு 15 அடி 2 அங்குலம் (நிரம்பல் நிலை அருகில்) நிலைமையில் உள்ளதுடன், இரண்டு வான்கதவுகள் 7 அடி உயரத்திற்கு திறக்கப்பட்டுள்ளன. அதேபோல், மாவடி ஓடை அணைக்கட்டின் 6 கதவுகள் 13 அடி உயரத்திற்கு திறக்கப்பட்டுள்ளன.
மேலும், மாதுறு ஓயா ஆற்று சமவெளி பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலைமை, வெள்ள அபாயத்தை மேலும் அதிகரிக்கச் செய்யக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலைமையில், தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வேண்டும். வெள்ளத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.