அமெரிக்காவின் பாராளுமன்றத்தில் தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக ஜனவரி மாதத்தை அறிவிக்க வேண்டி தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி எம்.பி. தலைமையில் ரோ கன்னா, அமி பெரா, ஸ்ரீ தானேதர், பிரமிளா ஜெயபால், சுஹாஸ் சுப்பிரமணியம் உள்ளிட்ட 15 உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்தை அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் முன்மொழிந்துள்ளனர்.
இந்தத் தீர்மானம் தொடர்பாக ராஜா கிருஷ்ணமூர்த்தி கருத்து தெரிவிக்கையில், “ஒரு தமிழ்-அமெரிக்கராக, தமிழ் மொழி, பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை மதிக்கும் இரு கட்சி தீர்மானத்தை அறிமுகப்படுத்துவதில் நான் பெருமைப்படுகிறேன். அமெரிக்கா பல்வேறு மொழிகள், கலாசாரங்கள் மற்றும் மரபுகளின் ஒருமித்தக்களமாகும். இந்தத் தீர்மானம் 3.5 இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ்-அமெரிக்கர்களின் வளமான கலாசாரத்தை மற்றும் சாதனைகளை வெளிச்சமிட்டுக் காட்டும். தமிழ்-அமெரிக்கர்களின் சமூக தாக்கத்தை அங்கீகரிக்க இந்தத் தீர்மானத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என நான் மனதார நம்புகிறேன்,” என்றார்.
இந்த அறிவிப்புக்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் தமிழ் மொழி, பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தின் மகத்துவம் மேலும் உலக அளவில் அறியப்படும் என நம்பப்படுகிறது.