யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையில் உள்ள மரக்கறி வியாபாரிகள், புதிய மரக்கறி சந்தை அமைப்பு தொடர்பாக கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஏற்கனவே அமைந்துள்ள சந்தையில் போதிய இட வசதிகள் உள்ளதோடு, பஸ் தரிப்பிடம் மற்றும் மீன் சந்தை ஆகியவை அருகிலேயே உள்ளதால் வியாபாரம் செய்வதற்கு வசதியாக இருந்ததாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
எனினும், தற்போது அமைக்கப்பட்டுள்ள புதிய சந்தை தொலைவில் அமைக்கப்பட்டுள்ளதால் நுகர்வோருக்கு சென்றுசேர அவதியுள்ளதாகவும், போதிய வசதிகளின்றி அமைக்கப்பட்டுள்ள புதிய சந்தை, வியாபார செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ளதாகவும், மரக்கறி சந்தைக்கான பாதை ஒன்றே ஒரு வழிப்பாதையாக காணப்படுவதும் வியாபாரிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக வியாபாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தற்போதைய மேல் மாடி சந்தையிலிருந்து கீழ் தளத்திற்கு மாற்றம் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை வியாபாரிகள் வெளியிட்டுள்ளனர்.
இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் விரைவில் தீர்வு காண வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்துகின்றனர்.