கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில், 2016ம் ஆண்டிலிருந்து மாவீரர் நாளை சிறப்பாகவும் எழுச்சியுடனும் நடத்தப்பட்டு வருகிறது. எனினும், தற்போதுள்ள மாவீரர் பணிக்குழுவை விடுத்து புதிய பணிக்குழுவை மாற்றும் நோக்குடன், EPDP உறுப்பினர்கள் சந்திரகுமாருடன் இணைந்த ஒரு குழு தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவற்றின் தொடர்ச்சியாக, EPDP சந்திரகுமாரின் சகோதரர் தீபன், இன்றைய தினம் (11) காலை, புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்படும் என்று சமூக வலைதளங்கள் மூலம் அறிவிப்பு விடுத்திருந்தார்.
இந்த அறிவிப்புக்கு எதிராக, மக்களும் முன்னாள் போராளிகளும் பெரும் எண்ணிக்கையில் கனகபுரம் துயிலுமில்லத்தில் ஒன்று கூடி, புதிய நிர்வாகத் தேர்வை நடத்த வந்த தீபன் மற்றும் அவரது குழுவினரை அங்கு மக்கள் பல கேள்விகள் கேட்டு சவாலுக்கு உட்படுத்தினர்.
“இவ்வளவு ஆண்டுகளாக பிரச்சினையின்றி மாவீரர் நாள் நடத்தப்பட்டு வருகிறது, இப்போது புதிய குழு தேவைதான் என்ன?”, “தமிழர் தேசத்தை அழித்த EPDP சந்திரகுமாருக்கு மாவீரர் நினைவேந்தல் நடத்த என்ன தகுதி?”, “முழுமையான ஜனநாயக முறையில் மூன்று முறை ஏற்கனவே நிர்வாகத் தெரிவுகள் நடைபெற்றுள்ளன. இப்போது ஏன் குழப்பம்?” என பல கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தீபனும் அவரது குழுவினரும் பதற்றமடைந்தனர்.
மேலும், அவர்களுடன் வந்த பெண்களில் சிலர், “புதிய நிர்வாக தெரிவு என்று சொல்லி தான் எங்களை அழைத்தார்கள். இப்படி குழப்பத்தை ஏற்படுத்தும் வேலை என்று எமக்கு தெரியாது. எங்களை மன்னித்துவிடுங்கள் என்று கூறியதோடு, அவர்களே இந்த புதிய தெரிவு தேவையில்லை என்று கூறி அங்கிருந்து விலகிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீபனுடன் வந்திருந்த EPDP சந்திரகுமாரின் கனகாம்பிகைக்குள வட்டார இணைப்பாளர் பாலன் என்பவர் புதிய தெரிவு செய்யப்பட வேண்டும் என கூற, சுற்றியிருந்த அனைவரும் பாலனை கடுமையாக எச்சரித்திருந்தனர். இதனால் அவர் அதிலிருந்து பின்வாங்கியதாக அறியப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், மக்களின் ஒற்றுமையும் தமிழர் தேசியத்தை பாதுகாக்கும் தாராள முயற்சியையும் மீண்டும் சுட்டிக்காட்டுகிறது.