முல்லைத்தீவு பகுதியில் அண்மையில் படகில் கரையொதுங்கிய ரொஹிங்கியா அகதிகள் குழு உண்மையான அகதிகளா என்பதை கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
படகில் இருந்த 12 ஊழியர்கள் தற்போது விசாரணைக்காக ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 103 பேர் முல்லைத்தீவு விமானப்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அது அண்மையில் தடுப்பு மையமாக அறிவிக்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
குழுவை மீண்டும் மியன்மாருக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி 04, 2025 திகதியிட்ட முஜிபுர் ரஹ்மானின் கடிதத்தில், அவர்களை ஏற்றுக்கொள்ள விரும்பும் மற்றொரு நாட்டிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் வரை, அவர்களை இங்கு அடைக்கலம் தருமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் முடிவுகளுக்கு அமைய அரசாங்கம் செயற்படும் என அமைச்சர் விஜேபால தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மியன்மார் அதிகாரிகளுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அமைச்சர் விஜேபால தெரிவித்துள்ளார்.
இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மனித கடத்தல்காரர்களுடன் தொடர்புடையவர்கள் என இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள ஆர்வமுள்ள பல்வேறு தரப்பினரால் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க அனுமதிக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்த அமைச்சர் விஜேபால, மனித கடத்தலை ஊக்குவிக்காமல் இருப்பது அவர்களின் பொறுப்பு என்றும் வலியுறுத்தினார்.
இது தொடர்பான விரிவான அறிக்கை நாளை (07) கையளிக்கப்படும் என இலங்கை விமானப்படை மற்றும் குடிவரவு பிரதிநிதிகளிடமிருந்து 2024 டிசம்பர் 31 ஆம் திகதி ஆணைக்குழுவுக்கு உறுதிமொழி கிடைத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணையாளர் நிமல் ஜி.புஞ்சிஹேவ தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு விமானப்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை மனித உரிமைகள் ஆணைக்குழு அணுகுவதற்கு விமானப்படை அனுமதி மறுத்ததையடுத்து இந்த விளக்கம் கோரப்பட்டதாக புஞ்சிஹேவ கூறினார்.
புஞ்சிஹேவவின் கூற்றுப்படி, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், அவர்களின் வடக்கு அலுவலகங்களில் உள்ள சிரேஷ்ட பிரதிநிதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள குழுவைப் பார்வையிட முடியும்.
கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மனித கடத்தல்காரர்களுடன் தொடர்புடையவர்கள் என்பதே குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் நிலைப்பாடாகும்.
1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 11(d) இன் படி, ஆணைக்குழுவின் அதிகாரங்களும் செயல்பாடுகளும் இலங்கைப் பிரஜைகளுக்கு மட்டுமல்ல, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘எந்த நபருக்கும்’ விரிவடையும் என்று புஞ்சிஹேவ கூறுகிறார்.
எனவே, முல்லைத்தீவு விமானப்படை தளத்தை அணுகவும், குழந்தைகள் உட்பட அனைத்து அகதிகளையும் கண்காணிக்கவும் ஆணைக்குழுவுக்கு சட்டரீதியான அதிகாரங்கள் உள்ளன.