டுபாயில் மறைந்திருந்த ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரினால், இலங்கையில் இயக்கப்படும் போதைப்பொருள் வலையமைப்பில் இணைந்து, போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த 20 வயதுடைய பட்டதாரி யுவதியொருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக ஹன்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சந்தேக நபர் இரண்டு தனியார் பல்கலைக்கழகங்களில் இரண்டு பட்டங்களை பெற்றுள்ளதாகவும், வெளிநாடு செல்வதற்கு தேவையான பணத்தை தேடி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹன்வெல்ல நகரில் யுவதியொருவர் ஐஸ் போதைப்பொருள் விநியோகம் செய்வதாக தனிப்பட்ட தகவலறிந்தவர் ஊடாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் குழுவொன்று சென்று சந்தேக நபரை கைது செய்தது.
டுபாயில் தலைமறைவாக உள்ள போதைப்பொருள் வர்த்தகரின் வலையமைப்பிலுள்ள ஹங்வெல்ல பிரதேச பொறுப்பாளருடன் அவரது உறவினருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதால், சந்தேகநபர் அந்த உறவின் அடிப்படையில் ஐஸ் போதைப்பொருளை பெற்று விற்பனை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சந்தேகநபர் கல்வி கற்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் போதைப்பொருள் விற்பனை செய்துள்ளதாக ஹன்வெல்ல காவற்துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஹங்வெல்ல நகருக்கு அருகில் வசிக்கும் 20 வயதுடைய யுவதியொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.