பலவீனமான கட்டமைப்பை கொண்டுள்ள ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர், தேர்தல் தோல்வியில் பாடம் படித்து- கட்டமைப்பு மாற்றத்தை செய்யப் போவதாக பிம்பமொன்றை உருவாக்கி விட்டு- இன்று வழக்கம் போல கூடிக் கதைத்து விட்டு, வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
செயல்திறன் குறைந்த தற்போதைய தலைமைகள் விலகி- புதிய கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென- அந்த கூட்டணிக்குள்ளேயே கலகக்குரல்கள் எழுந்துள்ள போதும்- பாராளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர்- மிக ஆறுதலாக- தற்போதுதான் முதல் முறையாக கூடியுள்ளனர்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நிறைவேற்றுக்குழு கூட்டம் இன்று (5) வவுனியாவில் நடந்தது.
இதன்போது, குறிப்பிடத்தக்க அமைப்பு மாற்றம் எதுவும் பேசப்படவில்லை. கூட்டணிக்கு தலைவர் ஒருவரை நியமிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட குழுக்களின் கூட்டங்களை அடுத்த வாரத்துக்குள் நிறைவு செய்து, பெப்ரவரி 1ஆம் திகதி வவுனியாவில் பொதுச்சபையை கூட்டி, கட்சியின் அரசியல் யாப்பில் மாற்றம் செய்து, தலைவர் ஒருவரை தெரிவு செய்வதென தீர்மானிக்கப்பட்டது.
இனி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பாகவே செயற்படுவதென தீர்மானிக்கப்பட்டது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் தேர்தல் கூட்டணி வைக்கும் தரப்புக்களுடன் பேச்சு நடத்துவதென பேசப்பட்டது. யாழில் க.வி.விக்னேஸ்வரன் தரப்பு, ஈ.சரவணபவன் தரப்பு, பொ.ஐங்கரநேசன் தரப்பு, கிளிநொச்சியில் மு.சந்திரகுமார் தரப்பு, மட்டக்களப்பில் ஈரோஸ் (இராஜேந்திரா அணி) ஆகியோருடன் பேச்சு நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
வவுனியாவில் சிறிரெலோவுடனும் பேச வேண்டுமென சிவசக்தி ஆனந்தன் (ஈ.பி.ஆர்.எல்.எவ்), க.சிவநேசன் (புளொட்) ஆகியோர் கேட்டனர். ஆனால் ரெலோ அதை எதிர்த்தது. அவர்கள் சிறி ரெலோ என்ற பெயரில் கூட்டணியில் இணைய முடியாது என்றும், தமது கட்சியின் பெயரை மாற்றி விட்டு வரலாம் என்றார்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் இணைவது குறித்து வி.மணிவண்ணன் தரப்பினர் பேச்சு நடத்தியது பற்றி ஆராயப்பட்டது. மணிவண்ணன் தனக்கு கூட்டணியின் செயலாளர் பதவியை தர வேண்டுமென கேட்டிருந்தார். அத்துடன், தற்போதைய தலைவர்கள் ஒதுங்கி, புதியவர்களிடம் கூட்டணியை கையளிக்க வேண்டுமென கேட்டிருந்தார். அதற்கு, கூட்டணியிலுள்ள கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இப்படியான கோரிக்கைகளை முன்வைத்ததால், வி.மணிவண்ணன் தரப்புடன் பேச்சு நடத்தாமல், விக்னேஸ்வரனுடனேயே பேச்சு நடத்தலாமென தீர்மானிக்கப்பட்டது.
பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கான காரணங்களை பற்றியும் பேசினார்கள். தேசிய மக்கள் சக்தி அலையடித்ததால் தோற்றுவிட்டோம் என சிலர் அபிப்பிராயப்பட்டனர். சங்கு சின்னத்தில் போட்டியிட்டதால் தோற்றதாக சிலர் குறிப்பிட்டனர். ஆனால், அந்த கூட்டணியின் தோல்விக்கு காரணமான பலவீனமான நிலைமை குறித்து யாரும் பேசிக்கொள்ளவில்லை.