மகா கும்பமேளாவுக்கு பிரயாக்ராஜ் முழுமையாக தயாராகி விட்டதாகவும் 45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் உ.பி. அமைச்சர் ஜே.பி.எஸ்.ரத்தோர் கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் ஆண்டுதோறும் கும்பமேளாவும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளாவும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை மகா கும்பமேளா நடைபெற உள்ளது. இதையொட்டி பிரயாக்ராஜ் விழாக்கோலம் பூண்டுள்ளது. பல்வேறு அகாடாக்களின் துறவிகள் கும்பமேளா திடலுக்கு ஊர்வலமாக வந்து முகாமிட்டு வருகின்றனர்.
திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் புனித நீராடலில் முக்கிய நிகழ்வான ராஜ குளியல் ஜனவரி 14 (மகர சங்கராந்தி), ஜனவரி 29 (மவுனி அமாவாசை), பிப்ரவரி 3 (வசந்த பஞ்சமி) ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.
மகா கும்பமேளாவில் பாதுகாப்பை அதிகரிக்க ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய 2,700 கண்காணிப்பு கேமராக்களை போலீஸார் நிறுவியுள்ளனர். நீருக்கு அடியிலும் செல்லும் ட்ரோன்களை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளனர். தேவை ஏற்பட்டால் இவற்றை திரிவேணி சங்கமத்தில் பயன்படுத்துவோம் என போலீஸார் கூறியுள்ளனர்.
கும்பமேளா ஏற்பாடுகள் குறித்து ஆன்மிக தலைவர் ஜகத்குரு நரேந்திராச்சாரியாஜி மகாராஜ் கூறுகையில், “2019 மகா கும்பமேளாவிலும் நான் பங்கேற்றேன். அதை விட இந்த கும்பமேளாவுக்கு மிகச் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்வருக்கு எனது ஆசிர்வாதங்கள்” என்றார்.
துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கூறுகையில், “மகா கும்பமேளாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன. கும்பமேளாவில் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதனால் எங்களின் பொறுப்பு அதிகரித்துள்ளது. பிரயாக்ராஜ் கும்பமேளாவுக்கு வருகை தருமாறு பக்தர்கள் அனைவரையும் அழைக்கிறேன்” என்றார்.
அமைச்சர் ஜே.பி.எஸ். ரத்தோர் கூறுகையில், “மக்களை வரவேற்க பிரயாக்ராஜ் முற்றிலும் தயாராகி விட்டது. பாதுகாப்புக்கு இம்முறை நவீன தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்த உள்ளோம். மகா கும்பமேளாவுக்கு 45 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.