இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த வருடம் 1,882 லெப்டோஸ்பிரோசிஸ் (எலிக்காய்ச்சல்) நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர்களில் 22 நோயாளிகள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளதாகவும் சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்தார்.
எலிகள், நாய்கள், பன்றிகள், குதிரைகள் போன்ற விலங்குகளின் சிறுநீரில் உள்ள ஒரு வகை பாக்டீரியாவால் லெப்டோஸ்பிரோசிஸ் ஏற்படுகிறது.
இரத்தினபுரி சப்ரகமுவ மாகாண சபை வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற எலிக்காய்ச்சல் தடுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே வைத்தியர் கன்னங்கர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சப்ரகமுவ மாகாண சபையின் முதலமைச்சர் அமைச்சு, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் இரத்தினபுரி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் என்பன இணைந்து இந்த தடுப்பு நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. நிகழ்வில் கலந்து கொண்ட சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, இரத்தினபுரி மாவட்டத்தில் 1,882 பேர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 22 பேர் இந்த நோயினால் உயிரிழந்துள்ளதாகவும் வைத்திய அறிக்கை சுட்டிக்காட்டுவதாக தெரிவித்தார்.
நெல் விவசாயம் மட்டுமின்றி, இரத்தினச் சுரங்கத் தொழிலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும், எலிக்காய்ச்சல் பரவுவதற்கும் ஒரு காரணமாக இருக்கலாம். நாட்டின் பொருளாதாரத்துடன் நெருங்கிய தொடர்புடைய துறைகளான நெல் விவசாயம் மற்றும் இரத்தினச் சுரங்கம் ஆகிய துறைகளில் இருந்து எலிக்காய்ச்சல் நோயாளிகள் பொதுவாகப் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எலிக் காய்ச்சலுக்கு எதிராகப் போராடுவதற்கு வளங்கள் பற்றாக்குறை ஏற்பட்டால், எலிக்காய்ச்சலை எதிர்த்துப் போராடுவதற்கு அதிகமான மனித மற்றும் பௌதீக வசதிகள் வழங்கப்படும் என சப்ரகமுவ மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
2024 ஜனவரி முதல் நவம்பர் வரை இலங்கையில் 10,000 எலிக் காய்ச்சல் நோயாளிகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன. 1,882 எலிக்காய்ச்சல் நோயாளிகள் மற்றும் 22 இறப்புகள் இரத்தினபுரி மாவட்டத்தில் மட்டும் பதிவாகியுள்ளன. நாட்டில் எலிக்காய்ச்சலினால் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்ட மாவட்டமாக உள்ளது.
எவ்வாறாயினும், 2023 ஆம் ஆண்டில், இரத்தினபுரி மாவட்டத்தில் பதிவான எலிக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை 1,422 ஆக இருந்தது. இரத்தினபுரி மாவட்டத்தில் எஹெலியகொட, கிரியெல்ல, எலபாத, பெல்மடுல்ல, ஓபநாயக்க, நிவித்திகல, கலவான மற்றும் கல்தோட்டை ஆகிய பகுதிகளில் எலிக்காய்ச்சலுக்கான அதிக ஆபத்துள்ள பிரதேசங்கள் உள்ளன.
கொடிய எலிக்காய்ச்சல் பாக்டீரியா நெல் வயல்களில், சுரங்கங்கள், தண்ணீர் தொட்டிகள், கூண்டுகள், வடிகால், பண்ணைகள் மற்றும் வேறு எந்த ஈரமான இடங்களிலும் காணலாம். எலிக்காய்ச்சல் பாக்டீரியா, வெட்டுக்கள், காயங்கள் மற்றும் கண்கள் போன்ற மென்மையான திசுக்களைக் கொண்ட பகுதிகள் வழியாக உடலுக்குள் நுழைகிறது.
காய்ச்சல், தசை வலி, கண் சிவத்தல், வாந்தி, தலைவலி, சோம்பல், சிறுநீர் கழித்தல் குறைதல், அடர் மஞ்சள் நிற சிறுநீர், சிறுநீரில் இரத்தம் போன்றவை எலிக் காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாகும்.
நெல் வேலையைத் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன், நோய்த்தடுப்பு மருந்தை (வாரத்திற்கு 200மி.கி டாக்ஸிசைக்லீன்) மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம் அல்லது பொது சுகாதார ஆய்வாளரிடம் பெறலாம்.
எலிக் காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், சிறுநீரகம், இதயம், மூளை போன்ற உறுப்புகள் செயலிழந்து மரணம் கூட ஏற்படலாம் என்று வைத்தியர் கன்னங்கர கூறினார்.