Pagetamil
ஆன்மிகம்

துலாம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

துலாம்: பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாயின் அருமை பெருமைகளை அறிந்த நீங்கள், தாய்நாட்டையும் நேசிப்பீர்கள்! உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்த 2025-ம் ஆண்டு பிறப்பதால் திட்டவட்டமான முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த தொகையும் கைக்கு வரும். எதிர்ப்புகள் அடங்கும். தள்ளிப் போன வழக்கில் தீர்ப்பு சாதகமாக வரும். சிலர் வீடு மாறுவீர்கள். ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்க வேண்டி வரும். எதிர்பாராத பணவரவு உண்டு. சாதாரண நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்கு முன்னேறுவீர்கள். தன்னம்பிக்கையுடன் பேசுவீர்கள். உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.

இனி குழம்பாமல் பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். குழந்தை இல்லாத தம்பதிக்கு வாரிசு உண்டாகும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 17.05.2025 வரை உங்கள் ராசிக்கு 12இல் கேது தொடர்வதால் நீண்ட நாட்களாக போக நினைத்த குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள். ராகுவும் 6ஆம் வீட்டில் நிற்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாயமடை வீர்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். பால்ய நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.

18.05.2025 முதல் வருடம் முடியும் வரை கேது லாப வீட்டில் அமர்வதால் செல்வாக்கு கூடும். கவுரவப் பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும். ஆனால் ராகு 5ஆம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். அவர்களின் படிப்பு விஷயமாக முக்கிய பிரமுகர்களை சந்திக்க வேண்டியிருக்கும். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்சினை தொடர்பாக உடன் பிறந்தவர்களை கலந்து ஆலோசிக்கவும். கர்ப்பிணிகள் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

இந்த ஆண்டு பிறப்பு முதல் 13.05.2025 வரை குரு உங்கள் ராசிக்கு 8ஆம் வீட்டில் நிற்பதால் வீண் அலைக்கழிப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாக வரும். மனதில் இனம்புரியாத கவலைகள் வந்து போகும். தன்னம்பிக்கை குறையும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். தங்க நகைகளை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம்.

ஆனால் 14.05.2025 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 9ஆம் வீட்டிலேயே அமர்வதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி உண்டு. முக்கிய பிரமுகர்கலின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் அளவுக்கு நெருக்கமாவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அல்லது அறை அமைக்கும் முயற்சிகள் பலிதமாகும். தந்தையுடனான மோதல் கள் விலகும். அவருக்கிருந்த நோய் விலகும்.

இந்தாண்டு தொடக்கத்தில் சனிபகவான் 5ஆம் வீட்டில் தொடர்வதால் பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் பேசுவார்கள். உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களைப் பிரிவார்கள். தாய்மாமன் வகையில் செலவுகள் இருக்கும். சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். 29.03.2025 முதல் சனிபகவான் 6ஆம் வீட்டில் சென்று அமர்வதால் இக்காலகட்டத்தில் எதிர்பாராத பணவரவு, திடீர் யோகம், சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களுடன் நட்பு, வாகன அமைப்பு போன்ற சுபப்பலன்கள் உண்டாகும்.

வியாபாரிகளே! உங்களுக்கு பின்னால் தொழில் தொடங்கியவர்களுடன் போட்டி போட்டு முன்னேறுவீர்கள். வட்டிக்கு வாங்கி கடையை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர்கள். உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் லாபமீட்டுவீர்கள். திடீர் லாபம், பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் கூடிவரும். மருந்து, உணவு, ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்களை புரிந்து கொள்ளாமல் அவ்வப்போது பிரச்சினை செய்த நிலை மாறும். இனி பணிந்து போவார்கள்.

உத்தியோகஸ்தர்களே! பணிகளை முடிப்பதிலிருந்த தேக்கநிலை மாறும். மேலதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வருட தொடக்கத்திலேயே பதவியுயர்வு, சம்பள உயர்வு மற்றும் புதிய வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். வெளிநாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். கணினி துறையினர் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். பணிச்சுமை அதிகரிக்கும்.

இந்தப் புத்தாண்டு தொடக்கத்தில் உங்களை ஏமாற்றினாலும், மையப் பகுதியிலிருந்து உங்களை ஏற்றத்தில் உயர்த்தி விடுவதாக அமையும்.

பரிகாரம்: முருகனை வழிபடுங்கள். கந்த சஷ்டி கவசம் படியுங்கள். செம்பருத்தி கன்று நட்டு பராமரியுங்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். நல்லதே நடக்கும்.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மீனம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

கும்பம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

மகரம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

தனுசு ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

விருச்சிகம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

Leave a Comment