இன்று செவ்வாய்க்கிழமை (31) கட்டுநாயக்க விமான நிலையத்தில், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தடை செய்யப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகள் மற்றும் மதுபான போத்தல்களுடன் குறித்த வர்த்தகர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
கொழும்பு – 14 பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இந்தியாவின் பெங்களூர் நகரத்திலிருந்து இன்றைய தினம் அதிகாலை 03.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து வெளிநாட்டு சிகரட்டுகள், 125 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபரான வர்த்தகர் நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் உள்ள மதுபானசாலைகள் மற்றும் விற்பனை நிலைங்களுக்கு விற்பனை செய்வதற்காக இந்த வெளிநாட்டு சிகரட்டுகள் மற்றும் மதுபான போத்தல்களை கொண்டுவந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.