அதிகரித்த வெள்ளம் காரணமாக வடமராட்சி கடல் நீரேரியில் அமைந்துள்ள மருதங்கேணி பிரதேசத்திற்கான ஒரே ஒரு போக்குவரத்து மார்க்கமாவும் ஏனைய பிரதேசங்களை இணைக்கும் வகையில் இருக்கும் தாழையடி புதுக்காடு பாதையில் அமைந்துள்ள மருதங்கேணி பாலம் உடைந்து போகும் நிலை காணப்பட்டது.
இந்த பாலத்தினுடைய இரு முனைகளிலும் மண் அரிக்கப்பட்டதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டிருந்தது. இது தொடர்பில் வழங்கப்பட்ட தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மண் அரிப்பு ஏற்பட்ட இரு பகுதிகளிலும் மணல் மூடைகளை அடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது செம்பியன்பற்று இராணுவ முகாம் கட்டளை அதிகாரியுடன் தொடர்புகொண்டு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அந்த முகாமை சேர்ந்த இராணுவத்தினரும் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இவ்வாறு மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மருதங்கேணி பாலத்தின் ஊடான போக்கு வரத்து சீர்செய்ய வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர் நித்தியானந்தன் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் கனரக வாகனங்கள் பயணிப்பதனை இயன்றவரை குறைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு தெரியப்படுத்தியிருப்பதாக மருதங்கேணி பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
அத்துடன் கொடுக்கிளாய் – இயக்கச்சி பாதையில் இருக்கும் அபாய வெளியேற்றப் பாதை, வெள்ளம் மற்றும் அதிகரித்த வெள்ளம் காரணமாக முழுமையாக சேதமடைந்திருபனால் அவ்வீதியூடான போக்குவரத்து செய்ய முடியாத நில ஏற்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.