தமிழகத்துக்கு புயல் ஆபத்து சற்றே நீங்கும் நிலையில், இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், தஞ்சை, நாகை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு கனமழையும் இன்று பெய்யக் கூடும் என்று சென்னை வானைலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென் மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கடந்த 6 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ளது. இது புயலாக வலுப்பெற மேலும் 12 மணி நேரம் தாமதம் ஆகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (நவ.28) அதிகாலை 3.45 மணியளவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின் விவரம் வருமாறு: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கடந்த 6 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ளது. அது தற்போது திரிகோணமலைக்கு கிழக்கு – வடகிழக்கில் 100 கிமீ தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து தென் கிழக்கே 320 கிமீ தூரத்திலும், புதுச்சேரிக்கு தென் கிழக்கே 410 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு – தென் கிழக்கில் 490 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது மேலும் வடக்கு – வடமேற்கு நோக்கி நகர்ந்து இலங்கை கடற்கரையை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாற வாய்ப்புள்ளது எனக் கணிக்கப்படுகிறது. அதன்பின்னர் வடக்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து 30-ஆம் தேதி தமிழகம் – புதுச்சேரி கடற்கரையை ஒட்டி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையைக் கடக்கும். அப்போது மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்தில் காற்று வீசும்.
இன்று (நவ.28) காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை முதல் மிக கனமழை முதல் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்காலிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை (நவ.29) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஆங்காங்கே கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நவ.30-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஆங்காங்கே கனமழைக்கு வாய்ப்புள்ளது.
பலத்த தரைக் காற்று: இன்று (நவ.28) தமிழகம், காரைக்கால், புதுச்சேரி கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 65 கிமீ வரையிலான பலத்த தரைக்காற்று வீசக்கூடும். இதுவே நாளை (நவ.29) மணிக்கு 70 கிமீ வேகம் வரை பலத்த தரைக் காற்று இப்பகுதிகளில் வீசக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்பும்வரை அறிவுறுத்தப்படுகிறார்கள். அடுத்த அறிவிப்பு வரும்வரை மீனவர்கள் இப்பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.