சட்டப்படியாக மதுபானசாலைகள் திறக்கப்படாவிட்டால் அது பாரிய தீங்கை விளைவிக்கும்; கசிப்பு உற்பத்தி பெருகும். என்னை விமர்சித்தவர்கள் கசிப்பு விற்பனையாளர்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளனரா என கேள்வியெழுப்பியுள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன்.
அவர் வெளியிடும் கேள்வி- பதில் அறிக்கையில் அதனை தெரிவித்துள்ளார்.
அவரால் அனுப்பி வைக்கப்பட்ட கேள்வி- பதில் அறிக்கை வருமாறு-
கேள்வி :- தேர்தல் காலத்தின் போது நீங்கள் கட்சி தாவுவதாகவும் அதாவது வீட்டில் இருந்து மீனுக்கு மாறி தற்போது மானுடன் இருப்பதாகவும், பார் லைசன்சை எடுத்துக் கொடுத்ததால் உங்கள் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமானதாகவும், நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராக எதுவுமே செய்யவில்லை என்றும் குறைவாகவே பாராளுமன்ற நிகழ்வுகளில் பங்கு பற்றி வந்ததாகவும் பலவித குற்றச்சாட்டுக்கள் உங்கள் மேல் சுமத்தப்பட்டன. நீங்கள் அவை பற்றி எதுவுமே அப்போது கூறவில்லை. இப்பொழுதாவது அவற்றைப் பற்றிய உங்கள் கருத்துக்களை அறிய முடியுமா?
பதில் :- கட்டாயமாக முடியும்! நீங்கள் கூறிய அத்தனை குற்றச்சாட்டுக்களும் தவறானவை. உண்மையை நான் விளக்குகின்றேன் –
1. கட்சி தாவுதல் – நான் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் முதலமைச்சராகப் போட்டியிட்டு 2013 செப்டெம்பர் 21ந் திகதி வரலாறு காணாத பெரும்பான்மை வாக்குகளுடன் வென்றேன். பின்னர் எனக்கெதிராகச் சிலர் சதி செய்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் வெளியேற்றப் பார்த்தார்கள். அது பலிக்கவில்லை. முழு 5 வருடங்களும் பதவியில் இருந்து மக்கள் சேவை செய்து விடுபட்ட அடுத்த நாளே நான் ஒரு கட்சியைத் தொடங்கினேன். அது தான் தமிழ் மக்கள் கூட்டணி. இன்றும் அக் கட்சியில்த்தான் நான் இருந்து வருகின்றேன். என்னைப் போலவே அதே சதியாளர்களின் நடவடிக்கைகளினால் பல சிரே~;ட உறுப்பினர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறினார்கள். புதியதொரு கட்சியையும் ஆரம்பித்து தேர்தலில் நின்றார்கள். தம்பி ஸ்ரீதரன் அவர்கள் கட்சியில் தொடர்வது அவருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும். அவர்; கட்சித் தலைமைப் பதவியை ஏற்க சதிக் கும்பல் இடமளிக்குமோ என்பது கேள்விக் குறியே. இருந்து பார்ப்போம்.
நான் கட்சியில் இருந்து வெளியேறியமை பிழை என்றால் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேறிய அத்தனை சிரே~;ட உறுப்பினர்களும் பிழை செய்தவர்களே. சதி செய்வதே சிலரின் சுபாவம். அவர்களுடன் இருந்து மக்களுக்கு உண்மையான சேவை செய்ய முடியாது. அதனால் மக்கள் நலன் கருதி நான் தமிழ் மக்கள் கூட்டணியை ஸ்தாபித்தமையைக் குற்றமாகக் கணிக்க முடியாது.
தனிப்பட்ட விதத்தில் என் நண்பர் குமார் பொன்னம்பலத்தின் மகன் கஜேந்திரகுமார் மீது மதிப்பும் அன்பும் எனக்கு உண்டு. அவரும் என் மூத்த மகனாரும் ஒரே சட்டக் கல்லூரி இறுதியாண்டு பரீட்சையில் சித்தி அடைந்தே சட்டத்தரணிகள் ஆனார்கள். ஆனால் கஜேந்திரகுமார் கட்சியிலும் சதியாளர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களின் சதிச் செயல்களினால்த் தான் திரு.மணிவண்ணன் அவர்கள் கட்சியை விட்டு வெளிவர நேர்ந்தது. திரு.மணிவண்ணனின் வளர்ச்சி , செல்வாக்கு ஆகியவை சிலருக்கு பிடிக்கவில்லை, அதனால் கஜேந்திரகுமாருக்கும் பிடிக்கவில்லை.
ஆகவே அக் கட்சியின் நிலைமையை அப்பொழுதே புரிந்து கொண்ட நான் புதுக்கட்சியை 2018ல் என் முதலமைச்சர் பதவிக்காலம் முடிந்தவுடன் ஆரம்பித்தேன். 2020 பாராளுமன்றத் தேர்தல்கள் வரும் போது எமது புதிய கட்சி பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. அதனால்த்தான் மற்றைய கட்சிகளுடன் சேர்ந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் க்குரிய மீன் சின்னத்தில் தேர்தலில் பங்கு பற்றினோம். தேர்தலில் எமது கூட்டு அவ்வளவாக முன்னேற்றம் பெறவில்லை. நான் மட்டும் தெரிவானேன். அதன்பின் என் கட்சி பதிவு செய்யப்பட்டது. அந்தக் கட்சியில்த்தான் அன்று தொடக்கம் இன்று வரையில் இருந்து வருகின்றேன். கட்சிக்குக் கட்சி தாவவில்லை.
திரும்பவும் ஒரு கூட்டு அதே கட்சிகளுடன் அமைக்க எத்தனித்தேன். ஆனால் அவர்கள் என்னைப் பெயருக்குத் தலைவராக்கி தம் இஸ்டப்படியே கட்சியை நடத்த எத்தனித்தார்கள். நான் வெளிநடப்பு செய்து என் கட்சியுடனேயே இன்றும் அரசியல் செய்து வருகின்றேன். ஆகவே நான் கட்சி தாவினேன் என்று கூறுவது தவறு. ‘மதியாதார் முற்றம் மதித்தொரு கால் மிதியாமை கோடிபெறும்” என்ற ஒளவையார் வாக்கின் உண்மை உணர்ந்து சில து~;டர்களிடம் இருந்து தூர விலகி நின்றதால் நான் சுயசார்புடன் அரசியல் செய்ய முடிந்துள்ளது. இன்றைய தோல்வி தற்காலிகமானதே. ஜே.வீ.பி எவ்வளவு போராட்டங்களின் பின்னர் இன்றைய இந்த நிலைக்கு வந்துள்ளது என்பதை என்னை விமர்சிப்போர் புரிந்து கொள்ள வேண்டும்.
மதுபானக்கடை உரிமைப் பத்திரம் பெற சிபார்சுக் கடிதம் கொடுத்தமை.
மதுபானக்கடை உரிமங்கள் பெறுவதானது சட்டப்படி தடைசெய்யப்பட்டிருக்கவில்லை. இன்றும் இந்த அரசாங்கம் வந்த பின்னரும் கூட அவ்வாறானதொரு சட்டம் இயற்றப்படவில்லை. அரசாங்கங்கள் மதுபானக்கடை உரிமங்களை வழங்குவது அவற்றில் இருந்து பாரிய வரியை அரசாங்கங்கள் பெற முடியும் என்பதாலும் மதுபான விற்பனையை ஒழுங்குமுறைக்குட்படுத்தி நடத்தவேண்டும் என்பதாலும் ஆகும். சட்டவிரோதமான மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை சமூக, பொருளாதார, கலாசார ரீதியாக பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்துவன.
உரிமங்கள் வழங்கும் போது அதனைக் கோருபவர் வசிக்கும் இடத்தின் பாராளுமன்ற உறுப்பினரின் சிபார்சைப் பெற வேண்டும் என்று இருந்தால் இயற்கையாகவே அவ்வாறு விண்ணப்பிப்பவர் பாராளுமன்ற உறுப்பினரின் சிபார்சை நாடுவார். என்னிடம் சிபார்சு கடிதத்தைக் கோரி விண்ணப்பித்தவரின் குடும்பத்தாரை எனக்குத் தெரியும். என்னுடைய தேர்தல் ஆசன நியாயாதிக்க எல்லைக்குள்ளேயே அவரின் குடும்பத்தவர் வசித்து வந்தார்கள். விண்ணப்பதாரியை அவரின் சிறுவயதில் இருந்தே எனக்குத் தெரியும். அப்படி இருந்தும் அவர் சிபார்சுக் கடிதம் கேட்ட போது ‘எப்படியம்மா நீ மதுபானக்கடையை நடத்தப் போகின்றாய்?” என்று கேட்டேன். தனது தந்தையார், சகோதரர் ஆகியோர் மதுபானக்கடை உரிமங்கள் பெற்று நடத்துவதை குறிப்பிட்டு நடத்தக் கூடிய ஆதரவாளர்கள் தனக்கு இருக்கின்றார்கள் என்று கூறினார். அடுத்து ‘ஏன் என்னிடம் இதைக் கேட்கின்றீர்கள்?” என்று வினவிய போது பாராளுமன்ற உறுப்பினரின் சிபார்சினைப் பெற்றால்த்தான் அப்போதைய ஜனாதிபதி உரிமங்கள் வழங்குவார் என்று குறிப்பிட்டுள்ளதாகக் கூறினார். நான் மல்லாகம் மாவட்ட நீதிபதியாக இருந்த போதே இவரின் தந்தையார் சுண்ணாகத்தில் மதுபானக்கடையொன்றை நடத்தி வந்தமை எனக்குத் தெரிந்திருந்தது. பொலிசார் சில தருணங்களில் சாட்சியம் தரும் போது அவ்வாறானதொரு கடை இருந்ததைக் குறிப்பிட்டிருந்தார்கள். பின்னர் அது திரு.நடராஜா அவர்களுக்கு சொந்தம் என்று அறிந்திருந்தேன்.
சட்ட ரீதியாக முறையாக மதுபானசாலை நடத்தும் அனுபவமும் ஆற்றலும் அந்த பெண்மணியின் குடும்பத்தவருக்கு இருந்ததால் பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் அந்த பெண்மணி வேண்டிய சிபாரிசு கடிதத்தை வழங்கினேன்.
முதலமைச்சராக இருந்தபோதும் அதற்கு பின்னரும் சட்டவிரோதமான முறையில் மது மற்றும் போதை ஆகியவை இளையோர்களுக்கு விநியோகிக்கப்படுவது பற்றியும் இதன் பின்னணியில் இராணுவம் செயற்படுவது பற்றியும் எண்ணற்ற தடவைகள் நான் மத்திய அரசாங்கத்திடம் முறையிட்டிருந்ததுடன் சட்ட விரோத மதுபான உற்பத்தியைத் தடுக்க என்னால் ஆன நடவடிக்கைகளையும் எடுத்திருந்தேன் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பிட விரும்புகின்றேன். சட்டப்படியாக மதுபானசாலைகள் திறக்கப்படாவிட்டால் அது பாரிய தீங்கை விளைவிக்கும்; கசிப்பு உற்பத்தி பெருகும். என்னை விமர்சித்தவர்கள் கசிப்பு விற்பனையாளர்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளனரா?
2013 செப்ரெம்பர் தொடக்கம் நான் செய்த எண்ணற்ற நல்ல காரியங்களை மறந்து ஒரு சிபார்சுக் கடிதத்தை வைத்தா என்னை வைய வேண்டும். உண்மையில் என் ஆதரவாளர்களுக்கு நான் அந்த சிபார்சுக் கடிதத்தைக் கொடுத்தமை மனவருத்தத்தைக் கொடுத்ததென்றால் நான் அதற்கு மனம் வருந்துகின்றேன். சட்ட ரீதியாக நான் தவறு ஏதும் செய்யவில்லை என்றாலும் மக்களின் ஒழுக்கக் கோட்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் விதத்தில் நான் நடந்திருந்தால் அதற்கு நான் மனவருத்தம் தெரிவிக்கின்றேன்.
குறித்த பெண்மணி ஒரு வறியவர் என்றும் அவருக்கு வாழ்வாதாரம் பெற நான் கடிதம் கொடுத்தேன் என்றும் ஒரு பொய்யான கூற்றைப் பரவவிட்டவர் லோகதயாளன் என்ற பத்திரிகை நிருபர். ‘தாய் தந்தையரை இழந்தவர் அப் பெண் என்பது எனக்குத் தெரியும்’ என்று நான் கூறியதை அவர் திரித்து பரவ விட்டுள்ளார்.
மேலும் அவர் என்னிடம் கேள்விகள் கேட்ட போது எல்லாவற்றிற்கும் பதில்கள் கொடுத்தவர் நானே. அவர் தானாக எனக்கு அப்பால் சென்று தகவல்களை புலனாய்வு செய்து கண்டறியவில்லை. நீங்கள் மதுபானசாலை பெற யாருக்கேனும் கடிதம் கொடுத்தீர்களா என்று கேட்டார். ‘ஆம்” என்றேன். ‘யார்?” என்றார். பெயரைக் கூறினேன். ‘எங்கு கடை அமைந்திருக்கின்றது?” என்றார். விலாசத்தைக் கொடுத்தேன். ‘எப்பொழுது கடிதம் கொடுக்கப்பட்டது?” என்று கேட்டார். தினத்தைக் கொடுத்தேன். என் மடியில் கனமில்லை. ஆகவே நானே விபரங்களைக் கொடுத்தேன். ஏதோ தாமாக என் நடவடிக்கைகள் பற்றி கண்டறிந்ததாகச் சிலர் குறிப்பிடுகின்றார்கள். அது தவறு. கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தவர் நானே. உண்மையில் இந்த உரிமங்களால் நன்மைகள் பெற்ற பாராளுமன்ற அங்கத்தவர்கள் முற்றாகத் தாம் எதுவும் செய்யவில்லை என்று கூறத் தலைப்பட்டதால் அவர்கள் தப்பித்துக் கொண்டு விட்டனர். உண்மையைக் கூற முன்வந்த என்னைப் பற்றி விமர்சிக்கின்றனர். நான் எந்த நன்மைகளையும் இந்த சிபார்சுக் கடிதத்தால் பெறவில்லை. பெற வேண்டிய அவசியம் ஏதும் எனக்கில்லை. அரசியலுக்கு வந்த நாள் முதல் நேர்மைக்குப் பெயர் போன நான் கேவலம் சில இலட்சங்களை எதிர்பார்த்து குறித்த கடிதத்தை வழங்கவில்லை. தகமை இருந்தால் அவர்களுக்கான சிபார்சுக் கடிதங்கள் வழங்குவது பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமைகளில் ஒன்று.
2016ம் ஆண்டு முழு இலங்கையிலும் இருந்த எண்ணூறுக்கும் மேற்பட்ட திணைக்களங்கள், அமைச்சுக்கள் ஆகியவற்றின் நிதி முகாமைத்துவத்தை ஆராய்ந்து பார்த்த போது வடமாகாண முதலமைச்சரின் அமைச்சே முதலிடம் பெற்றது. சுருட்ட வேண்டும் என்ற மனோநிலை இருந்தால் நான் அன்றே சுருட்டியிருக்கலாமே! கேவலம் பார் உரிமம் பெற்றுக் கொடுத்தா சுருட்ட வேண்டும்? 2020ம் ஆண்டு நடந்த தேர்தலின் பின்னர் தனது தேர்தலுக்கான வரவு செலவு சம்பந்தமான அறிக்கையைப் பத்திரிகைகளில் முதன் முதலில் வெளிவிட்டவர் நானே. மதுபானசாலை உரிமப் பத்திரத்தால் என் அரசியல் வாழ்வு அஸ்தமித்துவிட்டதாக யாரேனும் நினைத்தால் நினைத்துவிட்டுப் போகட்டும். ‘கரவான்” என்ற தொடர் இரதம் தொடர்ந்து செல்லும். நாய்களின் குரைப்பு வாகனத்தின் பயணத்தைத் தடைசெய்யாது!
பாராளுமன்ற சேவை –
நான் பாராளுமன்றம் சென்றது மத்திய அரசாங்கத்துக்கு முண்டு கொடுப்பதற்கு அல்ல. வடகிழக்கு தமிழ் மக்களின் வருங்காலப் பாதுகாப்புக்காகவும் அவர்களின் இருப்பை நீட்சி பெறச் செய்வதற்காக ஆவன செய்வதற்காகவுமே. அதை மிகச் சிறப்பாகச் செய்துள்ளேன். பாராளுமன்ற உறுப்பினர் என்ற பதவியே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எனது குரலை மக்கள் கேட்க வைத்தது. பாராளுமன்றத்தில் தமிழர் தம் வரலாறு, அவர்தம் பழமை, இந் நாட்டில் அவர்களின் நீண்டகால இருப்பு, அவர் தம் வாழ்க்கை முறை அவர்களின் கடும் முயற்சிகளும் உயர்ச்சிகளும் பற்றி நான் பேசியவை சிங்கள மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது உண்மை. சிங்கள இளைஞர்கள் தமது உண்மையான வரலாறு பற்றி ஆராயத் தொடங்கியிருந்தார்கள். பௌத்த பிக்குமாரால் மறைத்து வைக்கப் பார்த்த ‘தமிழ் பௌத்தர்கள்’ என்ற வரலாற்று நூல் (பேராசிரியர் சுனில் ஆரியரத்ன அவர்களால் சிங்கள மொழியில் எழுதப்பட்டது) அப்பொழுது சிங்கள இளைஞர்களால் ஆர்வமாகப் படிக்கப்பட்டது. பௌத்தம் இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட போது இங்கு வாழ்ந்து வந்தவர்கள் தமிழரே என்பது என்னால் என் எழுத்துக்களாலும் பேச்சுக்களாலும் வெளிக்கொண்டு வரப்பட்டது. C.V.Wigneswaran on Colombo Telegraph என்று google பண்ணினால் அப்பத்திரிகையில் நான் பாராளுமன்ற பிரதிநிதியாக எழுதிய பல கட்டுரைகள், பேசிய பேச்சுக்கள், கேள்வி-பதில்கள் போன்றவற்றைக் காணலாம்.
தெற்கில் தேசிய மக்கள் சக்திக்கு பெருவாரியான வாக்களித்தவர்கள் தமிழர் பற்றிய உண்மைகளை அறிந்த பின்னரே அவ்வாறு வாக்களித்தார்கள் என்று கொள்ள இடமிருக்கின்றது.
சர்வதேச ‘சூம்’ மாநாடுகள் இரண்டை ஒழுங்கு செய்தேன். அவை இலங்கையில் வடகிழக்கு தமிழ் மக்களின் காணிகள் சூறையாடப்படுவதை எடுத்துரைப்பனவாக அமைந்தன. நேரடியாகவும் “ஒன்லைன்” மூலமாகவும் பன்நாட்டு இராஜதந்திரிகளுடன் பேசி எம் மக்களின் நிலை பற்றி முழு விபரங்களையும் ஒப்படைத்துள்ளேன். அதே போல் ஐக்கிய நாடுகள் அலுவலர்களுக்கு எமது நில அபகரிப்பு பற்றியும், மற்றும் பல விடயங்கள் பற்றியும் பேசி அவர்களின் எமக்கான அனுசரணை அவர் தம் நடவடிக்கைகளில் வெளிவரும் வண்ணம் நடவடிக்கை எடுத்திருந்தேன். நான் செய்த எல்லாவற்றையும் வெளிப்படையாகக் கூற முடியாமல் இருக்கின்றது. பல கருத்தரங்கங்களையும் நடத்தினோம். நில ஆக்கிரமிப்பு தொடர்பில் சர்வதேச தரத்துடன் கூடிய ஆவணப்படம் ஒன்றை வெளியிட நான் பெரும் உதவி செய்திருந்தேன். சர்வதேச ஆய்வு நிறுவனங்களுடன் நெருக்கமாக பணியாற்றி நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல், மனித உரிமைகள் தொடர்பில் பல ஆய்வு அறிக்கைகளை வெளிக்கொண்டு வந்தோம். எமது சட்டத்தரணிகள் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்காக நீதிமன்றங்களில் ஆஜராகி வந்துள்ளனர். பல சர்வதேசத் தலைவர்களுடன் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் மற்றும் மனித உரிமைகள் ஆணையாளர்கள் உட்பட பலருடனும் நான் பல விடயங்களுக்காக தொடர்பு கொண்டிருந்தேன். மக்கள் பல உதவிகளை அவர்கள் மூலமாகப் பெறக் காரணமாயிருந்தேன். புதுடில்லி சென்று அங்குள்ள அரசியல்வாதிகள் மற்றும் கல்வியியலாளர்களை சந்தித்து பல ஆவணங்களை கையளித்திருந்தேன். அவர்களுக்கு எமது பிரச்சினைகள் பற்றி புரியவைத்திருந்தேன். ஐக்கிய நாடுகளில் இலங்கைக்கு அனுசரணையாக செயல்பட்ட பல நாடுகள் இன்று தமது ஆதரவை நிறுத்தியுள்ளன. எமது அறிவுறுத்தல்கள் இவ்வாறான மனமாற்றத்திற்கு ஏதோ ஒரு விதத்தில் காரணமாகியிருந்தன என்று கொள்ள இடமிருக்கிறது.
அதைவிட தாயகத்தில் பல திக்கற்ற மக்களுக்கும் சிறுவர்களுக்கும் ஏராளமான நிவாரண உதவிகளை நான் மேற்கொண்டிருந்தேன்.
எமது கட்சி இவ் வருடத் தொடக்கத்தில் தமிழர்தம் இனப்படுகொலை பற்றி ஆங்கிலத்தில் நூல் ஒன்றை வெளியிட்டது. பிரதிகள் சர்வதேசத் தலைவர்களுக்கும் இலங்கையின் சிங்களத் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டன.
மேலும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் பதில் கூறி எம் மக்கள் நிலை பற்றிப் புரிய வைத்திருந்தேன்.
இவ்வாறு மேலும் பல்வேறு விடயங்களை நான் அடுக்கிக்கொண்டு செல்ல முடியும்.
என்னிடம் கேட்டது போல, மற்றைய முன்னைய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அவர்கள் என்ன செய்தார்கள் என்று கேளுங்கள். அப்பொழுது தெரியும் விக்னேஸ்வரன் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக் காலத்தில் ஏனையவர்களைவிட நன்றாகத் தமிழர்களுக்காகச் சேவைகள் ஆற்றினாரா இல்லையா என்பது! நான் செய்தவை யாவும் ஆக்க பூர்வமான செயல்கள்!
பாராளுமன்ற அமர்வுகள்
எனக்குத் தேவையான போது நான் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கு பற்றினேன். அவசியமான கருத்துக்களை எடுத்தியம்பினேன். எம் மக்கள் பற்றியும் அவர்களின் குறைகள் பற்றியும் அவர்கள் தேவை பற்றியும் பேசினேன். எமது உண்மையான வரலாறு பற்றி குறிப்பிட்டேன். மற்றப்படி மத்திய அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கிருக்கவில்லை. எம் மக்களின் அவசியம் கருதி மட்டுமே நான் பாராளுமன்றம் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தேன். ஏனென்றால் நாய் வாலை நிமிர்த்த முடியாது என்று எனக்கு தெரியும். பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மையமாக வைத்து என் சேவைகள் பல கோணங்களில் இருந்தும் ஆற்றப்பட்டன என்பதே உண்மை.




