அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ்ந்த பிரதேசங்கள், வீதிகள் மற்றும் விடுகள் நீரில் மூழ்கிக் காணப்படுவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை, அக்கறைப்பற்று, ஆலையடிவேம்பு, பொத்துவில், நிந்தவுர், இறக்காமம், கல்முனை,சம்மாந்துறை மற்றும் பல பிரதேசங்களிலும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.
தாழ்ந்த பகுதிகளில் உள்ள வீதிகள் நீரில் முழ்கிக் காணப்படுவதால் மக்கள் பிரயாணம் செய்வதில் பல கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.நாட்டில் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல இராணுவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. அதிக பருவத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் மழை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன் சில நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்து வருவதுடன் பல கிராமங்கள் வீதிகள் நீருக்குள் மூழ்கியுள்ளன. காலநிலை மாற்றத்தால் மீனவர்களை குறிப்பிட்ட தினங்கள் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர்.
கழிவு நீர் வாய்க்கால்களை நேரத்துடன் நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் விவசாயிகளும் கவனம் செலுத்தி புனரமைக்கப்படாமையால் விதைக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு அழிவு எற்பட்டு வருவதாக விவசாயிகள் மேலும் தெரிவிக்கின்றனர். பல கிராம புறங்களில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் உட்புகுந்தும் சூழ்ந்தும் காணப்படுவதால் பலர் பாதுகாப்பாக தங்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கி வாழும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-பாறுக் ஷிஹான்-