மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாய் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களின் முன்னர், இதேபோல இளம் தாயொருவர் உயிரிழந்திருந்தார். இதனால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது.
வைத்தியசாலைக்கு முன்பாக பெரும் போராட்டங்களும் நடந்தன. வைத்தியர் இராநாதன் அர்ச்சுனாவும் இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய முயன்று, சிறைக்கும் சென்றதுடன், வாலைச்சுருட்டிக் கொண்டார்.
இதேபோல, தற்போது மற்றொரு கர்ப்பிணித்தாய் உயிரிழந்தது பெரும் சர்ச்சையை தோற்றுவித்து, போராட்டங்களுக்கும் வழிவகுத்தது.
எனினும், தற்போதைய மரணத்திற்கு மருத்துவ தவறுகள் காரணமல்ல என முதற்கட்ட விசாரணையில் தெரிய வருவதாக மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மகப்பேற்றுத்துறை நிபுணர்களின் கருத்துக்களின் தொகுப்பு வருமாறு-
காரணம் என்ன?
முதல்கட்ட விசாரணைகளில் இந்த மரணம் amniotic fluid embolism என்ற நிலையால் ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இது என்ன நோய்?
கருப்பையில் பிள்ளையைச் சுற்றி இருக்கும் நீர்க்குடத்தில் இருக்கும் நீர்( திரவம்) அம்னியோட்டிக் ப்ளூயிட் ( amniotic fluid) எனப்படும். அது சாதாரணமாக அம்மாவின் இரத்தத்தில் கலந்து விடாமல் இருக்கும்.
மிக அரிதாக சில கர்ப்பிணிகளில் குழந்தை பிறப்பின் போது அந்த திரவம் அம்மாவின் இரத்தத்தில் கலப்பதே இந்த நோய் நிலையாகும்.
இது ஆபத்தானதா?
ஆம் மிக ஆபத்தான நிலமை.
இந்த நோய் அரிதாகத்தான் ஏற்படும் என்றாலும் , ஏற்படும் அநேகமான கர்ப்பிணிகள் மரணிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருக்கும் ஆபத்தான நோயாகும்.
இது அமெரிக்காவில் குழந்தை பெறும் 40000 ஆயிரம் தாய்களில் ஒருவருக்கும், ஐரோப்பாவில் 58000 தாய்களில் ஒருவருக்கும் ஏற்படும்.
இவ்வளவு அரிதாக ஏற்பட்டாலும் இந்த நோய் ஏற்படும் நூறு தாய்களில் 60 பேர் வரை காப்பாற்ற முடியாமல் இறந்து விடும் நிலமை உள்ளது.
இந்த 60 என்பதுகூட மிகவும் வளர்ச்சியடைந்த உயர் தர மருத்துவ வசதி உள்ள நாடுகளில்தான். இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இந்த நோய் ஏற்பட்ட தாய்களில் நூறு பேரில் 80 தொடக்கம் 90 பேர் வரை இறக்கலாம்.
ஏன் இந்த நோய் காப்பாற்ற முடியாத அளவு அதிகமானோரை மரணிக்க செய்கிறது?
குழந்தையைச் சுற்றி உள்ள திரவம் அம்மாவின் இரத்தத்தில் கலந்து இரத்தம் மூலம் தாயின் இதயம் , சுவாசப் பை போன்றவற்றிற்குச் சென்று அவற்றை நேரடியாக தாக்கி ஒருவித அலர்சசியை ஏற்படுத்தி அவற்றின் செயற்பாடுகளை பாதிக்கும் .
இது மிகவும் விரைவாக பாதித்து மிக விரைவாகவே மரணம் நடந்துவிடும். இந்த நோயை தடுப்பதற்கோ, அதனால் ஏற்படும் மரணத்தை தடுப்பதற்கோ இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் இந்த நோய் ஏற்பட்ட அநேகமான தாய்மார் இறக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலமை உள்ளது.
குழந்தை பிறப்பதற்கு முன் இந்த நோய் ஏற்பட்டால் அம்மாவின் நுரையீரல் , இதய பாதிப்பால் குழந்தைக்கு போதியளவு இரத்தம் போகாமல் குழந்தையும் மரணமாகலாம்.
இந்த நோய் எப்போது ஏற்படும்?
இது குழந்தை பிறப்பின் போது( பிரசவத்தின் போது) அல்லது குழந்தை பிறந்து 30 நிமிடங்களுக்குள் ஏற்படும்.
சுகப்பிரசவம் மூலம் இல்லாமல் சீசர் பிரசவம் செய்யும்போது இந்த நோய் ஏற்படலாமா?
ஆம். இந்த நோய் சாதாரண பிரசவம் , மற்றும் சீசர் போன்ற எந்த வகை குழந்தை பிறப்பின் போதும் ஏற்படலாம்.
இந்த நோயின் அறிகுறிகள் எவை?
இந்த நோயின் அறிகுறிகள் மிக விரைவாக ஏற்பட்டு மரணமும் மிக விரைவாக நடைபெறலாம்.
மூச்செடுக்க கஷ்டம், இதயபாதிப்பு காரணமாக குருதியமுக்கம் ( பிரசர் ) குறைதல், இதயத்துடிப்பு வேகம் அதிகரித்து பிறகு குறைதல் , கருவில் இருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பு பாதித்து அசாதாரணமாக மாறுதல் , தாய் confusion ) குழப்பமடைதல்) ஆகுதல் அல்லது வேறு உள் ரீதியான கட்டுப்பாடற்ற ( agitation/anxiety) போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்துதல் போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாக இருக்கும்.
அதன் பிறகு வாயில் அசாதாரண குருதிப் பெருக்கு, இதயம், சுவாசப் பை செயல் இழப்பு, வலிப்பு , மூளையில் இரத்தக் கசிவு போன்றவை ஏற்பட்டு இறுதியில் மரணம் சம்பவிக்கலாம்.
இதற்கான மருத்துவம் என்ன?
இதை சுகமாக்க எந்த மருந்துகளும் இல்லை. ஆனாலும் குருதிப் பெருக்கை கட்டுப்படுத்த இரத்த கூறுகளை வழங்குதல், இதய சுவாச செயற்பாட்டை செயற்கையாக பேணுதல் போன்றவை முயற்சி செய்யப்படும். குறைவான தீவிரம் உள்ள நோய் ஏற்பட்டவர்கள் இவை மூலம் காப்பாற்றப்பட லாம். ஆனால் அதிக தீவிரமான நோய் ஏற்பட்டவர்கள் இறக்க வேண்டிய துர்ப்பாக்கியமே உள்ளது.
இந்த நோய் ஏற்படாமல் தடுக்க முடியுமா?
இல்லை . இதை தடுப்பதற்கான எந்த வழிமுறையும் இதுவரை கண்டு பிடிக்கப் படவில்லை.
ஆதாரம்:https://my.clevelandclinic.org/health/diseases/15463-amniotic-fluid-embolism