ஈ.பி.டி.பி தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வழங்கும் எண்ணம் இல்லை என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க நேற்று (08) யாழில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தேவானந்தா மட்டுமல்ல, கடந்த காலத்தில் ராஜபக்ச அல்லது விக்ரமசிங்கே அரசாங்கங்களில் அமைச்சராக இருந்து நாட்டை அழித்த எவருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கும் பைத்தியம் அவரது அரசாங்கத்திற்கு இல்லையென்றார்.
யாழில் நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றியபோது இதனை தெரிவித்தார்.
“தேவானந்தா ஜனாதிபதியை சந்திக்க அவகாசம் கேட்டார். முன்னாள் அமைச்சர் ஒருவர் எம்.பி.யாக இருப்பதால் ஜனாதிபதி அவ்வாறான கோரிக்கைக்கு அனுமதி வழங்குவது அரசியல் தார்மீகமாகும். தேவானந்தா ஜனாதிபதியை சந்தித்தபோது ஜனாதிபதியுடன் புகைப்படம் எடுத்தார்
புகைப்படத்தை வடக்குப் பத்திரிகைகளில் வெளியிட்டார். முகநூலில் பதிவிட்டுள்ளார். ஜனாதிபதி அவருக்கு உதவுவதாகச் சொல்லி பெரும் விளம்பரம் எடுத்தார். அவர் கடிதம் எழுதியதாக கூறினார். தான் மீன்பிடித்துறை அமைச்சராக இருந்த போது அமைச்சுப் பணிகளைப் பற்றி பேசியதாக மக்களிடம் பொய் கூறினார். டக்ளஸ் தேவானந்தாவை நினைத்து வெட்கப்படுகிறோம்.
இப்போது தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றதும் ஆட்சியில் இணைவேன் என்று எல்லா இடங்களிலும் கூறி வருகிறார். டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சுப் பதவி வழங்க ஜனாதிபதியோ நாமோ விரும்பவில்லை. இந்தப் பொய் முடிவுக்கு வரும் என்று காத்திருந்தோம். டக்ளஸும் அவருடைய அடியாட்களும் இன்றும் எல்லா இடங்களிலும் இந்தப் பொய்யைத் தொடர்ந்து சொல்கிறார்கள்.
ராஜபக்சவுடன் சேர்ந்து நாட்டை அழித்த அமைச்சர்களும் இருக்கிறார்கள். ராஜபக்ச, விக்கிரமசிங்க, மைத்திரிபாலவுடன் இணைந்து வடக்கை அழித்தது யார்? தேவானந்தா இலங்கையை அழித்த அமைச்சரவையின் முன்னாள் உறுப்பினர். டக்ளஸ் தேவானந்தா கடந்த தேர்தலில் ரணிலுக்கு உதவினார்.
சுமந்திரனின் ஆதரவாளர்களும் சிறிதரனின் ஆதரவாளர்களும் இதையே செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஏழை தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை கேட்கிறார்கள்.
யுத்தத்தின் போது, ஏழை தமிழ் மற்றும் முஸ்லிம்களின் நிலங்களை அபகரித்தனர்.
வெற்றி பெற்றால் தேசிய மக்கள் சக்தியை ஆதரிப்போம் என்று வாக்கு கேட்கிறார்கள்.
நீங்கள் திசைகாட்டிக்கு வாக்களித்தால், மற்றவர்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? திசைகாட்டியிடம் வாக்களித்தால் முடிந்துவிட்டது.
திசைகாட்டி என்பது திசைகாட்டி தவிர வேறில்லை. அமைச்சர்களும் திசைகாட்டியில் உள்ளவர்களாக இருப்பார்கள்.