பங்களாதேஷ் அணிக்கு எதிராக மிர்பூரில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடி வரும் தென்னாபிரிக்கா ஓரளவு வலுவான நிலையில் உள்ளது. இதில் நணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி சரசரவென விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களுக்குச் சுருண்டது. நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது.
முன்னதாக, தென்னாபிரிக்க பந்துவீச்சில் கேகிசோ ரபாடா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு குறைந்த பந்துகளில் 300 விக்கெட்டுகள் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
தென்னாபிரிக்காவின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் வியான் முல்டர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஷத்மன் இஸ்லாம் (0), மோமினுல் ஹக் (4) கப்டன் நஜ்முல் இஸ்லாம் ஷாண்ட்டோ (7) ஆகியோர் முல்டரிடம் காலியாக முஷ்பிகுர் ரஹீம் ரபாடாவின் பெரிய இன்ஸ்விங்கருக்கு ஸ்டம்புகள் பறக்க அதுவே ரபாடாவின் 300வது விக்கெட்டாக அமைந்தது. பிறகு லிட்டன் தாஸ் 1 ரன்னில் இருக்கும் போது ரபாடா வீசிய அருமையான எழுச்சிப் பந்தில் எட்ஜ் ஆக கல்லியில் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் அற்புதமான டைவ் அடித்து கட்சைப் பிடித்தார், இது ரபாடாவின் 301வது விக்கெட். கேகிஸோ ரபாடா 65வது டெஸ்ட் போட்டியில் 117வது இன்னிங்சில் 300 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டியுள்ளார்.
பந்துகள் கணக்கில் 11,817 பந்துகளில் ரபாடா 300 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார், இவருக்கு முன்பாக வக்கார் யூனிஸ் 12,601 பந்துகளில் 300 விக்கெட்டுகள் சாதனையை நிகழ்த்தியது சாதனையாக இருந்தது. ரபாடா இதனை முறியடித்தார். தென்னாபிரிக்காவின் முன்னாள் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் 12,605 பந்துகளில் 300 விக்கெட்டுகள் சாதனைய நிகழ்த்த மால்கம் மார்ஷல் 13,728 பந்துகளிலும் மற்றொரு தென்னாபிரிக்கா முன்னாள் பந்துவீச்சாளர் அலன் டொனால்ட் 13,840 பந்துகளில் 300 விக்கெடுட்கள் மைல்கல்லை எட்டியுள்ளார்.
ஆனால், டேல் ஸ்டெய்ன் 61வது டெஸ்ட்டிலேயே 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அலன் டொனால்ட் 2000ஆம் ஆண்டில் தன் 63வது டெஸ்ட்டில் இதே சாதனையை நிகழ்த்தினார். தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களில் டேல் ஸ்டெய்ன் 439 விக்கெட்டுகளுடன் முதலிடம் வகிக்க, ஷான் போலாக் 421, மகாயா நிடினி 390, அலன் டொனால்ட் 330, மோர்னி மோர்கெல் 309, இப்போது ரபாடா 303 விக்கெட்டுகள் என்று அடுத்தடுத்த நிலைகளில் உள்ளனர்.