‘யுக்திய’ நடவடிக்கையின் எதிர்பார்த்த நோக்கங்கள் எட்டப்படவில்லை என பொலிஸ் தலைமையகம் மேற்கொண்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
‘யுக்திய’ நடவடிக்கையானது ஊடக நிகழ்ச்சியாக மட்டுமே இருந்ததாகவும், கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் போதைப்பொருள் சோதனைகள் அதிகரிக்கவில்லை எனவும் பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளனர்.
உயர்மட்ட போதைப்பொருள் வியாபாரிகளை கைது செய்வதற்கு பதிலாக உயர் பொலிஸ் அதிகாரிகள் குழு வழங்கிய ஆவணத்தின் பிரகாரம் சாதாரணமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் முன்னர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு விட்டு விலகியவர்கள் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்ட நேரத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தில் இருந்து விலகி இருந்தனர்.
அதுமட்டுமின்றி, கைது செய்யப்பட்டவர்களில் பலர் போதைக்கு அடிமையானவர்கள் எனவும், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இல்லை எனவும் பொலிஸ் தலைமையகம் மேற்கொண்ட தொடர் கண்காணிப்பில் இருந்து தெரியவந்துள்ளது.
கடற்படையினரால் கடலுக்கு அப்பால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளிலும் கைப்பற்றப்பட்ட பெருமளவிலான போதைப்பொருள் ‘யுக்திய’ நடவடிக்கையுடன் தொடர்புடையது என ஊடக நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏதோ ஒரு அரசியல் நோக்கத்திற்காக ‘யுக்திய’ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தோன்றுவதாகவும், இதன் காரணமாக பொலிஸ் நிலையங்களின் வழமையான கடமைகள் கிட்டத்தட்ட முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
பதில் பொலிஸ் மா அதிபர் ‘யுக்திய’ நடவடிக்கைக்கு உத்தியோகத்தர்களை மீண்டும் சாதாரண சிவில் கடமைகளுக்காக ஈடுபடுத்தியுள்ள போதிலும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் இடம்பெற்று வருவதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘யுக்திய’ நடவடிக்கையின் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.