தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்து, இலங்கை தமிழ் அரசு கட்சி அதிலிருந்து வெளியேறிய பின்னர், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்படும் கட்சிகளை மீளவும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக இணைந்து செயற்பட வருமாறு இலங்கை தமிழ் அரசு கட்சி அழைத்துள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று (28) வவுனியாவில் நடந்தபோது, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு, பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகளுடன் மீள இணைந்து செயற்பட விரும்புவதாகவும், வீட்டு சின்னத்தில் போட்டியிட வருமாறு அழைப்பதாகவும் மத்தியகுழுவின் தீர்மானத்தை எம்.ஏ.சுமந்திரன் அறிவித்தார்.
அத்துடன், இது தொடர்பில் பேச்சு நடத்த வேண்டியிருந்தால், அதற்காக குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், பா.சத்தியலிங்கம், முன்னாள் மட்டக்களப்பு மேயர் சர்வணபவன் ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகித்தனர்.
அத்துடன், தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்து செயற்பட்டவர்களிடம் விளக்கம் கோருவதென்றும். அவர்கள் மீதான நடவடிக்கை பற்றி பின்னர் ஆராய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்கிய அரியநேந்திரனிடம் விளக்கம் கோரப்பட்டிருந்தது. அவர் அளித்திருந்த விளக்கம் போதுமானதாக இருக்கவில்லையென்பதால், அவரிடம் மீள விளக்கம் கோர தீர்மானிக்கப்பட்டது.
பாராளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவது பற்றி ஆராயப்பட்டது. எனினும், இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இது தொடர்பில் 3ஆம் திகதி மீண்டும் கூடி இறுதித்தீர்மானம் எடுக்க முடிவு செய்யப்பட்டது.