தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளார்.
நேற்று (26) நடந்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, கட்டுரையாளர்களுடன் நடந்த சந்திப்பில், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் கலந்துகொண்ட பிரதிநிதி இந்த செய்தியை தெரிவித்தார்.
நேற்றைய கூட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் கலந்து கொண்ட பிரதிநிதிகள், தமது கட்சியின் நிலைப்பாடு என 3 தகவல்களை தெரிவித்தனர்.
1.இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில், எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதில்லை.
2.ஜனாதிபதி தேர்தலை பொதுக்கட்டமைப்பு என்ற பெயரில் சந்தித்த தரப்புகள், பாராளுமன்ற தேர்தலையும் சந்தித்தால், பொதுவான சின்னம் ஒன்றின் கீழ் போட்டியிட தயார். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிட முடியாது.
3.ஜனாதிபதி தேர்தலை எதிர்கொண்ட கட்டமைப்பிலுள்ள பொதுச்சபையும் அந்த கட்டமைப்பில் அங்கம் வகிக்க வேண்டும்.
இதேவேளை, நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட கே.ரி.கணேசலிங்கம், ஒரு பிரேரணையென குறிப்பிட்டு, அடுத்த பாராளுமன்ற தேர்தலில் முன்னாள், இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போட்டியிட கூடாதென்ற முட்டாள்த்தனமான யோசனையை முன்வைத்தார்.
அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, அது ஒரு யோசனை மட்டுமே என அமைதியாகி விட்டார்.