விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 8-ஆவது சீசன் வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி முதல் ஒளிபரப்பாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘பிக்பாஸ்’. பரவலான ரசிகர்களைக் கொண்ட இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். வார இறுதி நாட்களில் புத்தகங்களை பரிந்துரைப்பது, முடிந்த அளவுக்கு இரு தரப்பு கருத்துகளையும் உள்வாங்கி பதில் சொல்வது, வித்தியாசமான ஆடைகள் மூலம் கவனம் ஈர்ப்பது, தனது சினிமா அனுபவங்களை பகிர்வது என தனது பாணியில் முத்திரை பதித்த கமல் 7 ஆண்டுகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதையடுத்து அவர் நிகழ்ச்சியிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்தார்.
தொடர்ந்து 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். இது தொடர்பான அறிவிப்பு வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் பிக்பாஸ் 8வது சீசன் வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி மாலை 6 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வீடியோவில் பேசும் விஜய் சேதுபதி, “ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” என டேக்லைன் பயன்படுத்துகிறார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. விடிவி கணேஷ் கலந்துகொள்வது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மற்றபடி நடிகர் ரஞ்சித், பப்லு, பூனம் பஜ்வா, குரேஷி கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.