இந்த நாட்களில் சமூக ஊடகங்களை திறந்தால், யாராவதொரு வெளிநாட்டு அன்ரியோ, அங்கிளோ வெளியிட்ட வீடியோக்களையே பார்க்க முடிகிறது. நீங்கள் உண்மைத்தமிழனாக இருந்தால், நீங்கள் ஒரு தாய்க்கு பிறந்தவராக இருந்தால் தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேந்திரனுக்கே வாக்களிக்க வேண்டுமென அந்த வீடியோக்களில் அவர்கள் அறிவுரை கூறியிருப்பார்கள்.
தமிழனாக தமிழனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தூக்கலாக மேக்கப் போட்ட ஒரு அன்ரி வெளியிட்ட வீடியோவை சில நிமிடங்களின் முன்னர் பார்க்க கிடைத்தது.
தமிழ் பொதுவேட்பாளருக்கும், மேற்படி அன்ரிகள், அங்கிள்கள் சொல்லும் தர்க்கத்துக்குமிடையில் ஏதாவது தொடர்பு உங்களிற்கு படுகிறதா?
நடக்கவிருப்பது இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல். இதில் தமிழனாக தமிழனுக்கு வாக்களிக்கும் தேவை எங்கிருந்து வந்தது?
அனுரகுமார திசாநாயக்க மாதிரி குறைந்த பட்சம் நுவான் போககே மாதிரி அகில இலங்கையையும் ஏதோவொரு விதத்தில் தொடர்புபடுத்தும் ஒரு வேட்பாளரை தமிழ் பொதுவேட்பாளராக களமிறக்கி விட்டு, தமிழனாக தமிழனுக்கு வாக்களியுங்கள் என கேட்பதில் ஏதாவது தர்க்க நியாயமிருக்கக்கூடும். மாறாக, தன்னை களமிறக்கிய முதலாளி யாரென்றே தெரியாத தொழிலாளியான அரியநேந்திரனுக்கு வாக்களியுங்கள் என கேட்பது என்ன நியாயம்?
ஜனாதிபதி தேர்தலில் தமிழனான தமிழனுக்கும், முஸ்லிமாக முஸ்லிமுக்கும், சிங்களவனாக சிங்களவனுக்கும் வாக்களிக்க புறப்பட்டால் முடிவு என்ன?. நமக்கு இன்னொரு கோட்டாபயவே ஜனாதிபதியாக கிடைப்பார்.
அப்படி இன்னொரு கோட்டாபய ஜனாதிபதியானால், இப்பொழுது தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கியுள்ள தரப்புக்கள் எல்லாம் ஆமை தலையை ஓட்டுக்குள் இழுப்பதை போல பாதுகாப்பாக இருந்து விடுவார்கள்.
தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கிய தரப்புக்குள் உள்ள பிரமுகர் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம். சில கூட்டங்களில் முன்வரிசையில் இருந்தார். பேராசிரியராக கடமையாற்றிக்கொண்டு இப்படி கூட்டங்களில் கலந்து கொள்ள முடியாது, தேர்தல் பணியில் ஈடுபடுவதெனில் பல்கலைக்கழக பணியிலிருந்து விடுமுறை எடுத்துக் கொண்டு செல்லுங்கள் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிலிருந்து தகவல் வர… சோறா சுதந்திரமா முக்கியம் என யோசித்த பேராசிரியர், சோறுதான் முக்கியம் என முடிவெடுத்து, தமிழ் பொதுவேட்பாளர் விவகாரங்களில் முன்னணியில் செயற்படுவதிலிருந்து ஒதுங்கி விட்டார்.
நிலாந்தனும் தனியார் கல்வி நிலைய ஆசிரியர். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பி வந்தாலும், அரசாங்கத்தால் பிரச்சினை ஏற்படாமலிருக்க, ஈ.பி.டி.பியுடன் பேசி, பாதுகாப்பான வாழ்க்கை அமைக்க தெரிந்த புத்திசாலி. தமிழ் பொதுவேட்பாளரின் பின்னணியிலுள்ள எல்லா கட்டுரையாளர்களுமே இப்படியாக தக்கன பிழைக்கத் தெரிந்த புத்திசாலிகளே. புலம்பெயர் அன்ரிகளுக்கும், அங்கிள்களுக்கும் வசதியான வாழ்க்கைக்கு எந்தச் சிக்கல்களும் இராது.
ஆனால், இந்த சாமர்த்தியமும், பாதுகாப்பும் எல்லோரிடமும் உள்ளதா?
தமிழனாக தமிழனுக்கு வாக்களியுங்கள் என்றால், ஏன் தமிழனாக தமிழனுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதையும் சொல்ல வேண்டுமல்லவா?
இதுவரையான சிங்கள ஜனாதிபதிகள் யாரும் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை, அதனால் தென்னிலங்கைக்கும் சர்வதேசத்துக்கும் தெளிவான செய்தியை சொல்ல பொதுவேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுமென்கிறார்கள்.
சரி, தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்கிறோம், யாரோ ஒருவர் ஜனாதிபதியாகி விடுகிறார். அவர் அல்லது பொதுவேட்பாளர் தரப்பு தமிழர்களுக்கு எதையும் தந்துவிடப் போகிறார்களா?
இனப்பிரச்சினை விவகாரத்தில் நாங்கள் வாக்களித்தாலும் கிடையாது, வாக்களிக்காவிட்டாலும் கிடையாது என்றால், எமக்கு பொருத்தமான ஜனாதிபதியொருவரை ஆதரித்து, கிடைக்கக்கூடிய சின்னச்சின்ன விவகாரங்களை நிறைவேற்றுவதும் புத்திசாலித்தனம் தானே.
தமிழ் பொதுவேட்பாளரினால் அனுரகுமாரவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. ரணில், சஜித் இருவரில் ஒப்பீட்டளவில் சஜித்துக்கே இதன் பாதிப்பு அதிகமிருக்கும். ஈ.பி.டி.பி, பிள்ளையான் போன்ற துணைக்குழுக்களின் வாக்குகள் ரணிலுக்கு செல்லும். ஒப்பீட்டளவில் சஜித்தை விட, ரணில் பாதுகாப்பான நிலையில் இருப்பார்.
தமிழ் பொதுவேட்பாளரினால் தென்னிலங்கை அரசியலில் எப்படியான மாற்றம் நிகழும் என்பதும் வெளிப்படையாக தெரிந்த நிலையில்- இதன் பின்னணியில் தென்னிலங்கை சக்தியொன்று இல்லையென எப்படி நம்பாமலிருக்க முடியும்?
தமிழர்கள் எவ்வளவு பெரிய ஆணையை வழங்கினாலும், எதுவும் ஆகப்போவதில்லையென்பதை வரலாறு நிரூபித்து விட்டது. ஆக, இனி தமிழனாக தமிழனுக்கு வாக்களித்து சர்வதேசத்துக்கு செய்தி சொல்லும் பம்மாத்து அரசியலை விட, புத்திசாலித்தனமான வேறு அரசியல் வழிகளை கண்டுபிடிக்க வேண்டும்.
தமிழனாக தமிழனுக்கு வாக்களியுங்கள், சர்வதேசத்துக்கு செய்தி சொல்ல வேண்டுமென்பது ஒருவகை திருட்டு அரசியல். அதாவது, எந்த ரிஸ்க்கும் எடுக்க தயாராக இல்லாதவர்கள்- மக்களை உசுப்பேற்றி நாடாளுமன்ற அங்கத்தவர்களாகும் சூழ்ச்சியே இந்த பொதுவேட்பாளர் கூத்து.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமக்கும் ஆசனங்கள் தாருங்கள் என யாழ்ப்பாணத்தில் நிலாந்தனும், திருகோணமலையில் யதீந்திராவும் கேட்டால் எந்த கட்சி கொடுக்கும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருவரும் எதாவதொரு கட்சியின் வேட்புமனுவில் இடம்பிடிக்க தலைகீழாக நின்றார்கள். நடக்கவில்லை.
இப்பொழுது பொதுவேட்பாளர் அலையை கிளப்பி விட்டு, அதை நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்துவதே இந்த பொதுவேட்பாளர் தரப்பின் இரகசிய நோக்கம். இதனை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
அப்படியில்லை, அவர்கள் உண்மையான நோக்கத்துடன் களமிறங்கியுள்ளார்கள் எனில்- ஏன் அவர்கள் தேர்தல் அரசியலை தெரிந்தெடுத்தார்கள்?
அவர்கள் இதுவரை எத்தனை மக்கள் போராட்டங்களில் பங்கேற்றனர்? எத்தனை அஞ்சலி நிகழ்வுகளில் பங்கேற்றனர்? போரினால் பாதிக்கப்பட்டவர்கள், விடுதலையான போராளிகளின் மறுவாழ்வுக்காக என்ன பொருளாதார திட்டங்களை முன்னெடுத்தார்கள்?
இதையெல்லாம் செய்யாமல், தமிழனாக தமிழனுக்கு வாக்களியுங்கள் என புறப்பட்டுள்ளது கபடமானதல்லவா?
அதாவது, தமிழர்கள் பிரிந்து நிற்கிறார்கள், அவர்களை ஓரணியில் சேர்க்கப் போவதாக கூறுகிறார்கள்.
இதன் அர்த்தம், தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலில் இருந்து விலகுகிறார்கள், அவர்களை மீண்டும் அதே வழிக்கு கொண்டு வர எடுக்கப்பட்ட ஆயுதமே பொதுவேட்பாளர்.
விடுதலைப் புலிகளின் அரசியலை விடுதலைப் புலிகளே மேற்கொள்ள முடியும். அரசாங்க உத்தியோகத்தில்… பாதுகாப்பான வாழ்க்கை வாழ்ந்தபடி, தேர்தல் அரசியலில் அதை செய்ய முடியாது.
இலங்கையில் உள்ள தமிழ் மக்களை ஒன்றிணைக்கப் போவதாக களமறக்கப்பட்டுள்ள பொதுவேட்பாளரின் நிதி அனுசரணை புலம்பெயர்ந்த தரப்புக்களே. இலங்கையிலுள்ள தமிழ் மக்களை ஒன்றிணைக்கப் போவதாக களமிறங்கியுள்ள புலம்பெயர் தமிழர்கள் ஏன் ஒற்றுமையாக இல்லை?
அண்மையில் கனடாவில் இரண்டு தமிழ் அமைப்புக்களின் தெருச்சண்டையில், தமிழகத்திலிருந்து வந்திருந்த பாடகர் ஸ்ரீநிவாஸூக்கு முட்டை வீசப்பட்டது. புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளிளெல்லாம் தமிழர்கள் பல அமைப்புக்களாக பிரிந்து, ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கனடாவில் பாடகர் ஸ்ரீநிவாஸை அழைத்த தரப்பு இலங்கை தமிழரசு கட்சியின் சுமந்திரன் அணிக்கு நிதி அனுசரணையளிக்கிறது. முட்டை வீசிய தரப்பு தற்போது தமிழ் காங்கிரசின் க.சுகாஸை அழைத்து நிகழ்வு நடத்துகிறது. புலம்பெயர் தமிழர்கள் அமைப்புக்களாக பிளவுபட்டு, இலங்கையில் ஒவ்வொரு தரப்புக்கு நிதியளிப்பதே இலங்கையிலும் தமிழ் மக்கள் ஒற்றுமையின்றி பிளவடைய பிரதான காரணம்.
இலங்கையில் அமைப்புக்களை உருவாக்கி நிதியளிப்பதுடன் தேசிய கடமை முடிந்து விடுவதக புலம்பெயர் தமிழர்களில் கணிசமானவர்கள் நினைக்கிறார்கள். அதாவது இலங்கையில் கூலிப்படை அரசியலை நடத்த விரும்புகிறார்கள். தமிழ் பொதுவேட்பாளரும் ஒருவகையில் கூலிப்படை அரசியல்தான்.
இலங்கைத் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளின் அரசியலை விட்டு விலகக்கூடாது, அரசியலை ஒரு கொதி நிலையில் பேண வேண்டுமென விரும்பும் புலம்பெயர் தரப்புக்கள் இந்த போராட்டத்தில் ஆற்றிய பங்கென்ன?. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வருடக்கணக்கில் தொடர் போராட்டத்தை நடத்துகிறார்கள்? அப்படி ஏன் புலம்பெயர் தமிழர்கள் போராடவில்லை? குறைந்தபட்சம் வாரம் ஒருநாளாவது அடையாளப் போராட்டம் ஏன் நடத்தவில்லை?
தமிழனாக தமிழனுக்கு வாக்களியுங்கள் என, பொதுவேட்பாளர் தரப்பிலுள்ள அனைவரும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார்களா என, உங்களை கூட்டங்களுக்கு அழைப்பவர்களிடம் கேளுங்கள். தமிழனாக தமிழனுக்கு வாக்களித்து வெற்றியீட்டக்கூடிய களம் பாராளுமன்ற தேர்தல்தானே. ஆனால் இப்போதுள்ள தரப்புக்கள் அந்த தேர்தலில் ஓரணியில் போட்டியிட மாட்டார்கள். அதற்கு ஒரே காரணமேயுள்ளது- அனைவருக்கும் ஆசன கனவுள்ளது. அனைவரையும் உள்ளடக்கி வேட்புமனு தயாரிக்க முடியாது.
பொதுவேட்பாளர் கோசம் எவ்வளவு பெரிய திருட்டுக் கோசம் என்பதற்கு இதுவே உதாரணம்!