25.7 C
Jaffna
December 12, 2024
Pagetamil
கட்டுரை முக்கியச் செய்திகள்

முதலாளி யாரென்றே தெரியாத தொழிலாளி அரியநேந்திரன்!

-பீஸ்மர்-

அரசியல் வரலாற்றில் எதுவும் சாத்தியமே என்பதை தமிழ் பொதுவேட்பாளர் அரியநேந்திரனும் நிரூபித்துள்ளார். கிட்டத்தட்ட ஒன்றரை தசாப்தங்களின் முன்னர் யாரெல்லாம் துரோகிகள், அரசியலில் தீண்டத்தகாதவர்கள் என அரியநேந்திரன் நாளும் பொழுதும் பேசி வந்தாரோ, அவர்களின் அரவணைப்பில் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

இராணுவ ஒட்டுக்குழுக்கள், ராஜபக்ச அரசின் கைக்கூலிகள், தமிழ் மக்களை கொன்றவர்கள் என அரியநேந்திரன் வாசித்த குற்றச்சாட்டு பட்டியல் மிகப்பெரியது.

தமிழ் அரசியலில் அதிகம் அர்த்தமிழந்து போன சொற்களில் ஒட்டுக்குழுவுக்கும் இடமுண்டு. அதை யாரும், யார் மீதும் பாவிக்கலாம், அதை யாரும் கண்டுகொள்வதுமில்லையென்றளவில் தமிழ் அரசியல் இன்றுள்ளது. ஒட்டுக்குழு, தேசியம், தியாகி, துரோகி அரசியல் எதற்கும் பலனற்றத என்பதே கட்டுரையாளரின் நிலைப்பாடு. அதைப்பற்றி பலமுறை எழுதியும் வந்துள்ளோம். என்றாலும், இன்றளவும் தமிழ் தேசிய அரசியலில் இந்த வசனங்களுக்கு சிறிய பாத்திரமேனும் உள்ளது என்பதையும் மறுக்க முடியாது.

புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோவின் மட்டக்களப்பு பிரமுகர்கள் சிலர், ஆனந்தசங்கரி தரப்பு, ஜனநாயக போராளிகள் போன்ற தரப்புக்கள் அரியநேந்திரனால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்கள். இன்று. அவர்கள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் அரியநேந்திரன் எந்த சங்கடமும் இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார்.

தானும் ஒரு தமிழ் தேசியவாதி, தன்னால் முன்னர் விமர்சிக்கப்பட்டவர்களும் தமிழ் தேசியவாதிகள், அனைவரும் தமிழ் மக்களுக்காக பாடுபடுகிறோம் என அவர் உளமாற நினைக்கவும் கூடும்.

ஆனால், ஒரு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சமயத்தில்- அந்த தரப்புக்களையெல்லாம் துரோகிகளாக வகைப்படுத்தி வசைபாடிய அரியநேந்திரன், இப்பொழுது எந்த அடிப்படையில் அவர்களுடன் கூட்டு வைத்தார் என்பதை கூற வேண்டியதும் அவசியம்தானே? ஒன்றில் அரியநேந்திரன் இப்பொழுது ஒட்டுக்குழுவாக மாறி விட்டார? அல்லது, அரியநேந்திரனால் விமர்சிக்கப்பட்டவர்கள் புனர்வாழ்வு பெற்று, தேசிய வீரர்களகி விட்டார்களா? அரியநேந்திரனால் விமர்சிக்கப்பட்டவர்கள் இப்பொழுது எப்படி தேசியவாதிகளானார்கள்? ஏனெனில், அவர்களின் கட்சி அப்படியே உள்ளது, தலைவர்கள் அப்படியே உள்ளனர், கொள்கை அப்படியே உள்ளது, நிலைப்பாட்டில் எந்த மாற்றமுமில்லை. இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் ஒருமுறை அங்கம் வகித்து விட்டால் எல்லா பாவமும் கழுவப்பட்டு விடுமா?

அப்படியானால், தமிழ் சமூகத்தின் ஆகப்பெரிய அரசியல் புனிதர் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரனா?

இந்த கேள்விகளுக்கு பா.அரியநேந்திரன் பதிலளித்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதைப்பற்றி மூச்சும் விடாமல் நல்லதொரு தொழிலாளியை போல ஊர் ஊராக நடந்து கொண்டிருக்கிறார்.

பொதுவேட்பாளராக அரியநேந்திரன் அறிவிக்கப்பட்டதும், பொதுவேட்பாளர் தரப்பை ஆதரிக்காத கட்சியின் பிரமுகர் சி.சிறிதரனை வீடு தேடிப்போய் சந்தித்தார். ஆனால், இன்றுவரை பொதுவேட்பாளர் தரப்பிலுள்ள கட்சிகளின் தலைவர்களை (அரியநேந்திரனின் துரோகிகள்) அவர் சந்திக்கவில்லை. துரோகிகள் என விமர்சித்து விட்டு, இப்பொழுது வீடு தேடிப் போவது அரியநேந்திரனுக்கு உளமாற சங்கடமாக இருக்கும்.

ஆனால், அதனை ஒரு நாடகமாக அவர் அரங்கேற்றுவதே மக்களை ஏமாற்றும் செயல். “நான் பொதுவேட்பாளர். என்னை பொதுவேட்பாளராக நியமித்துள்ளனர். அந்த பணியை மட்டும் செய்கிறேன். மற்றைய விடயங்களில் தலையிடமாட்டேன். அதற்கு யாரும் ஆதரவளிக்கலாம்“ என்பதை போல அவர் செயற்படுகிறார்.

பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்ட ஆரம்பகட்டத்தில் நிதி ஏற்பாடுகள் தொடர்பில் நடந்த கூட்டங்களிற்கும் அரியநேந்திரன் அழைக்கப்பட்டிருக்கவில்லை. அது பற்றி அரியநேந்திரனிடம் கேட்டபோது, “என்னை பொதுவேட்பாளராக களமிறக்கியுள்ளார்கள். அது மட்டும்தான் எனது வேலை. மற்றையவற்றை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்“ என்றார்.

பொதுவேட்பாளர் தரப்பிலுள்ள- அரியநேந்திரனால் முன்னர் விமர்சிக்கப்பட்ட தரப்புக்களை தனிப்பட்ட ரீதியில் சந்திக்காமல், அவர்கள் பக்கம் திரும்பாமல் நின்றுவிட்டால் போதும், அவர்கள் வேறு- நான் வேறு என்றாகிவிடும் என- பூனை கண்ணைமூடிக்கொண்டு பால் குடித்த கதையாக அரியநேந்திரனின் கதை உள்ளது.

தமிழ் அரசியலில் யாரும் எதுவும் கதைக்கலாம், அது பற்றிய பொறுப்புகூற வேண்டுமென்ற தேவையே இல்லாமல் போய்விட்டது.

பொதுவேட்பாளர் தரப்பை ஆதரிப்பதாக கூறிக்கொண்டு, அவர்களின் மேடையில் ரணில் ஏறினாலும், அரியநேந்திரன் அந்த பக்கம் திரும்பாமல் நின்றுவிட்டு, ஊரெல்லாம் நடையாக நடந்து கொண்டிருப்பார்.

பொதுவேட்பாளர் கொள்கைக்காக களமிறக்கப்பட்ட ஒரு அடையாளம் என்றால்- அந்த செயற்பாட்டில் கொள்கையிருக்க வேண்டாமா?

லைக்கா நிறுவனத்திடம் பொதுவேட்பாளர் தரப்பினர் பணம் கேட்டார்கள். அவர்களும் ஒரு தொகை பணம் கொடுத்தார்கள். லைக்கா நிறுவனம் இம்முறை தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெருமளவு நிதியளித்தது மட்டுமல்லாமல், வேறு வழிகளிலும் உதவிவருவது பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன.

ரணிலின் வெற்றிக்காக உழைக்கும் ஒருவரிடம் நிதி பெறுவது என்ன வகையான கொள்கை?

நாங்கள் நிதிதானே பெற்றோம், பலரிடம் நிதி பெற்றுள்ளோம், லைக்காவிடம் நிதி பெற்றாலும், அவர்களின் பேச்சை நாம் கேட்கவில்லையென பொதுவேட்பாளர் தரப்பினர் கூறலாம்.

ஆனால், யதார்த்தம் அதுவல்ல. தமிழ் பொதுவேட்பாளர் தரப்பின் உண்மையான முதலாளி யாரென்றே இன்னும் தெரியவில்லை. தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் போல, காசு கொடுத்தவன் எல்லாம் இப்பொழுது அதன் முதலாளிகள்தான். இதில் பெரும்தொகை பணம் கொடுத்த லைக்கா மாத்திரம் எப்படி முதலாளியாக இருக்க மாட்டார்கள்?

புலம்பெயர் தரப்பிலுள்ள பலரும் பொதுவேட்பாளரை ஆதரித்து பல வட்ஸ்அப் குழுக்களை நடத்தி வருகிறார்கள். அந்த குழுக்களை கவனித்தீர்கள் என்றால்- ஒவ்வொரு குழுவும் தாம் தான் பொதுவேட்பாளரை வழிநடத்துவதாக பாவனை பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் வேடிக்கை- அரியநேந்திரனின் மட்டக்களப்பு பிரச்சார பேரணிக்கு பொலிசார் கட்டுப்பாடு விதித்தபோது, பிரித்தானியாவிலுள்ள வட்ஸ்அப் குழுவில் பெரும் அலப்பறை நடந்தது. பொலிசாரிடம் எப்படி அனுமதி பெறுவதென்ற அனுமதி கடிதங்களை கூட தாமே தயாரித்து அனுப்பியதாகவும், அதை வைத்து அனுமதி பெறவில்லையே என பெண்ணொருவர் எழுதிக்கொண்டிருந்தார். பொதுவேட்பாளர் தரப்பை விசாரித்த போது, பொதுவேட்பாளரை ஆதரிக்கும் புலம்பெயர்ந்த பலர், இவ்வாறு குழுக்களை உருவாக்கி, தாமே பொதுவேட்பாளரை களமிறக்கியதாக பாவனை பண்ணி சுயஇன்பம் கண்டுகொண்டிருக்கிறார்கள் என்றார்கள்.

அரியநேந்திரனை கேட்டால்- தனக்கு எதுவும் தெரியாது, என்னை களமிறக்கியுள்ளார்கள், பிரச்சாரம் செய்வது மட்டும்தான் எனது வேலையென்கிறார்.

அவரால் துரோகிகளாக வகைப்படுத்தப்பட்டவர்கள், தாமே பொதுவேட்பாளரை தெரிவு செய்து களமிறக்கியதாக கூறுகிறார்கள். அவர்களின் பக்கம் திரும்பாமல் இருந்து விட்டாலே போதும், தனது தமிழ் தேசிய பூச்சுக்கு சேதாரம் இல்லாமல் இருந்து விடலாமென அரியநேந்திரன் நம்புகிறார்.

கட்சிகள் பொதுவேட்பாளரை களமிறக்கவில்லை, நாமே களமிறக்கினோம் என்கிறார்கள் இங்குள்ள கட்டுரையாளர்கள். கட்டுரையாளர்களுக்கு சொந்த மூளையில்லை, இந்த ஐடியாவின் பின்னணி தாமே என்கிறார்கள்- புலம்பெயர் வட்ஸ்அப் குழு அட்மின்கள்.

2006 இல் கொழும்பு பற்றியெரியும் என புத்தகம் வெளியிட்டு, புலிகளை குஸிப்படுத்தி விட்டு, 2009 இல் முக்காடு போட்டுக்கொண்டு ஓடிய மு.திருநாவுக்கரசுதான் இதில் சூத்திரதாரியென்கிறார்கள். அதை மறுக்கும், புலம்பெயர் வேறு தரப்புக்களும் உண்டு.

அதாவது, முதலாளி யார் என்றே தெரியாத தொழிலாளியாக அரியநேந்திரனை வரலாறு நிறுத்தியுள்ளது.

இந்த அரசியல் கோமாளிகளிடம் மக்கள் ஆணை வழங்கி என்னத்தை பெறப் போகிறோம்?

தமிழ் மக்களின் அரசியல் ஆணையை எந்த தரப்பும் கோரவில்லை. தமிழ் மக்களின் அரசியல் ஆணை இல்லாததால்த்தான் தம்மால் தலையிட முடியவில்லையென எந்த தரப்பும் கூறவில்லை. தமிழ் மக்கள் தமது ஆணையை மிகத்தெளிவாக பலமுறை வழங்கி விட்டார்கள். அந்த ஆணையே போதுமானது. தமிழ் மக்கள் மிகத்தெளிவான ஆணையை வழங்கி பல தசாப்தங்களாக எந்தவொரு தரப்பும் தலையிடவில்லை. இப்பொழுது தமிழ் மக்கள் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் வாக்களிக்கும் போக்கு இல்லாமல் போகும் நிலையில், ஆணையை கோரப் போகிறோம் என புறப்பட்டுள்ளது தமிழ் மக்களை பலவீனப்படுத்தும் ஒரு அரசியல் செயற்பாடாகும். விடுதலைப் புலிகள் அமைப்பினர் இருந்திருந்தால், பொதுவேட்பாளர் தரப்பினர் இப்பொழுது ஒவ்வொரு ஊரின் மின்கம்பங்களிலும்தான் தொங்கிக் கொண்டிருந்திருப்பார்கள்.

What’s your Reaction?
+1
1
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

யாழில் தொடர் உயிரிழப்புக்களுக்கு எலிக்காய்ச்சலே காரணம்: பரிசோதனையில் உறுதியானது!

Pagetamil

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் ஒதுங்கி, புதியவர்களுக்கு வழிவிட யோசனை: புதிய அணிகள் இணைய பேச்சு!

Pagetamil

சிரியா முன்னாள் ஜனாதிபதி அசாத் பற்றிய மர்மம் விலகியது: ரஷ்யா புகலிடம் அளித்துள்ளது!

Pagetamil

சிரியா தலைநகரும் கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது: அசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி முடிந்தது!

Pagetamil

திருத்தப்பட்ட அரசி விலைகள் அறிவிப்பு!

Pagetamil

Leave a Comment