28.8 C
Jaffna
October 3, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிக்கலாம்?- நம்பிக்கையான சிறுபான்மையினக் கட்சிகள் எவை? 1

ஜனாதிபதித் தேர்தல் நெருங்க நெருங்க வாக்குறுதிகளும், சேறு பூசல்களும் வரைமுறையில்லாமல் பெருகிக் கொண்டிருக்கிறது. தமது ஆட்சியமைந்தால் தேனும், பாலும் ஓடுமென ஒவ்வொரு வேட்பாளர்களும் மக்களை நம்ப வைக்க சிரமப்படுகிறார்கள்.

மறுவளமாக, ஏனைய வேட்பாளர்கள் வெற்றியீட்டினால் நாடு மீண்டும் வரிசை யுகத்துக்கு செல்லுமென தற்போதைய ஜனாதிபதி ரணில் வாய் கூசாமல் பொய் சொல்கிறார். அவரது அணியிலுள்ள சகபாடிகளும், அதை ஒத்தூதுகிறார்கள்.

நாடு பற்றியெரியும் போது சஜித்தும், அனுரவும் ஆட்சியை பொறுப்பேற்கவில்லை, நான் உங்கள் கண்ணீரை கண்டு மனம்நொந்து ஆட்சியை பொறுப்பேற்றேன் என்கிறார் ரணில். ஆனால், உண்மைக்கதையல்ல. கோட்டா தரப்புடன் என்ன ஒப்பந்தத்தில் ரணில் ஆட்சியை பொறுப்பேற்றார் என்பது இன்னும் வெளிவராத சங்கதி. அது வெளிவரும் வரை ரணில் இந்தவகையான கதைகளை சொல்லிக் கொண்டிருக்கலாம்.

இம்முறை வெற்றியீட்டக்கூடியவர்கள் என எதிர்பார்க்கப்படும் ஏனைய இருவரான சஜித், அநுர இவ்வகையான கதைகளில் நேரத்தை செலவிடவில்லை. அநுர ஆட்சிக்கு வந்தால் திருடர்கள் பலர் சிக்குவார்கள் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. அதனால்தான் யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பி தொடக்கம் தெற்கில் ராஜபக்சக்கள் வரை அநுரவை கடுமையாக எதிர்க்கிறார்கள்.

இலங்கையின் அதிகார மையமெனப்படுவது ஐ.தே.கவிடமும், சு.கவிடமும்- பின்னாளில் ராஜபக்சக்களிடமும் என இரு துருவ மயப்பட்டிருந்தது. இரு தரப்பும் ஒருவரையொருவர் அனுசரித்து, நாட்டின் வளங்களை கொள்ளையிட்டுக் கொண்டிருந்தனர். இந்த இரு துருவ அதிகார மையத்தில் மாற்றம் நிகழ்ந்தால், ஊழல அரசியல்வாதிகளின் நிலைமை சிக்கலாகி விடும். இதனால்த்தான் சஜித், அநுர ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என பிரதான தரப்புக்கள் பதற்றமடைந்துள்ளன.

ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கை மையப்படுத்திய சிறுபான்மை இன கட்சிகளும் ஏதோவொரு தரப்பை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரையான தேர்தல்களின் வரலாறு, கட்சிகளின் அணுகுமுறை, செயற்பாட்டு வரலாற்றின் அடிப்படையில் எந்தெந்த கட்சிகள் எடுக்கும் முடிவுகளை மக்கள் நம்பலாம், எந்த கட்சிகளின் முடிவுகளில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது பற்றிய ஒரு அலசல் இது.

வாயில்லாப் பூச்சிகள்

இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழ் தரப்பில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கை தமிழ் அரசு கட்சியென்பன நீண்ட பாரம்பரியத்தையுடையன. தமிழ் பேசும் முஸ்லிம் மக்களிடம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நீண்ட வரலாறுடையது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம் பலமான சக்தியாக வளர்ந்துள்ளது.

இதில் தமிழ் தரப்பில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பின்னாளில் பெருமளவில் மக்கள் பலமிழந்து, தற்போதுதான் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலை மட்டும் புறக்கணிக்கும் அவர்களின் நிலைப்பாட்டை மிகச்சொற்பமான மக்களே ஆதரிக்கிறார்கள். அதனால் அந்த கட்சியை விட்டு விடலாம். ஜனாதிபதி தேர்தலில் ஏதோவொரு கட்சியை ஆதரிக்கும் தரப்பில்- இலங்கை தமிழ் அரசு கட்சியை தவிர்த்த ஏனைய அனைத்து தமிழ் கட்சிகளும் கிட்டத்தட்ட வாயில்லாப் பூச்சிகள்தான்.

முஸ்லிம் தரப்பில்- சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிர்ந்த ஏனைய சிறு கட்சிகளும் வாயில்லாப் பூச்சிகள்தான்.

இலங்கை தமிழ் அரசு கட்சி நல்லாட்சி அரசாங்கத்தை ஆதரித்தது. அதன் பின்னர் நடந்த கூட்டமொன்றில் அந்த கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், நல்லாட்சிக்காலத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சி தோல்வியடைந்ததை ஏற்றுக்கொண்டு, அதை வேறு விதமாக முன்னெடுத்திருக்கலாமென்றார். நல்லாட்சி அரசின் காலத்தில் தமிழ் தரப்பினிடையே கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரி மாதிரியாகவே சுமந்திரன் நடந்தார், நல்லாட்சியில் அரசியலமைப்பு தோல்விக்கு சுமந்திரனின் அணுகுமுறையும் ஒரு காரணமென்ற போதும், அவரது ஒப்புதல் வாக்குமூலமும் முக்கியமானது.

ஏனெனில், அண்மைய வரலாற்றில் தமிழ் கட்சியொன்று தமது அரசியல் முடிவின் தோல்வியை அதிகபட்சமாக ஏற்றுக்கொண்ட முதலாவது சந்தர்ப்பம் அது. இதைவிட வேறெந்த தமிழ் கட்சியும் தமது அரசியல் முடிவின் தோல்விகளை இவ்வளவு பகிரங்கமாக- ஒரு வார்த்தையிலேனும் சொன்னதில்லை.

அதாவது, ஒவ்வொரு தேர்தலிலும் வாய்க்கு வந்ததை சொல்லிவிட்டு போகலாம், எந்த பொறுப்புக்கூறலும், பொறுப்புணர்ச்சியும் தேவையில்லையென அவர்கள் கருதுகிறார்கள்.

ஓவர் விசுவாசம் காட்டும் ஈ.பி.டி.பி 

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை ஆதரித்த தமிழ் தரப்பில் ஈ.பி.டி.பி, பிள்ளையான் குழு, அங்கஜன், காதர் மஸ்தான், அதாவுல்லா, வியாழேந்திரன் போன்ற தரப்புக்கள் உள்ளடங்குகின்றன. இவையெல்லாம் சிறிய தரப்புக்கள் என்பதுடன், அதிகார மையங்களுடன் பேரம் பேச முடியாத தரப்புக்கள்.

கடந்த கோட்டாபய ஆட்சிக்காலத்தில் வடக்கு ஆளுனர் நியமனத்தை, தனக்கு ஆதரவளித்த வடக்கிலுள்ள எந்த தரப்பின் ஆலோசனையையும் பெறாமலே மேற்கொண்டார். அப்போது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா இருந்தாலும், அவருக்கு ஆளுனர் நியமனம் அறிவிக்கப்படும் வரை எதுவுமே தெரியாது.

கோட்டாவின் யாழ்ப்பாண பிரச்சாரக்கூட்டத்தின் அங்கஜனுடன் மேடையேறிய அவரது தந்தை இராமநாதன், “கோட்டா வருகிறார். அனைவரும் கூ அடியுங்கள்“ என ஆர்வமிகுதியில் கூறினாலும், அங்கஜன் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் என்றளவில் திருப்திப்பட முடிந்ததே தவிர, கோட்டாவை அணுகவும் அவரால் முடியவில்லை. ஆனால், இவர்களெல்லோரும் தேர்தலில் கோட்டாவின் முகவர்களாக முகம் காட்டினார்கள். கோட்டாவின் வெற்றியில் பங்களித்தனர். இவர்கள் அனைவரும் ஆளுந்தரப்பின் விசுவாசிகளாக உள்ளூரில் உருட்டல் செய்யும் அரசியலைத்தான் செய்து வருகிறார்களே தவிர, இனம்சார்ந்து செயற்பட முடியவில்லை.

இது கோட்டாவின் ஆட்சியில் மட்டுமல்ல, அதற்கு முன்னரும் இதுதான் வரலாறு.

முன்னைய மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்திலும், ஈ.பி.டி.பி தலைவர் எதையும் அழுத்தமாக பேச முடியாமல் இருந்தார். ஆனால், அந்த கட்சியின் மற்றொரு எம்.பியாக இருந்த மு.சந்திரகுமார் (தற்போதைய சமத்துவக்கட்சியின் தலைவர்) அப்படியிருக்கவில்லை. கிளிநொச்சி அறிவியல் நகர் பல்கலைக்கழகம் விடுவிப்பு அவரது முயற்சியினால் நடந்தது. அப்போது டக்ளஸ் வாய் திறக்காமலிருக்க சந்திரகுமார் துணிச்சலாக பேசியதால் அது விடுவிக்கப்பட்டது. இந்த சந்தர்ப்பம் உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில் சந்திரகுமார் துணிச்சலாக பேசியது கோட்டாபயவிற்கு பிடிக்காமலிருந்து, அவர் புலியென எகிறி விழுந்த சம்பவமெல்லாம் உள்ளது.

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சியென்ற கொள்கையை ஈ.பி.டி.பி கொண்டிருந்தலும், அது மாநில சுயாட்சிக்கான எந்த வேலைத்திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை. காலத்துக்கு காலம் வரும் ஏதாவதொரு அரசுடன் ஒட்டி, அமைச்சு பதவியொன்றுடன் திருப்திப்பட்டு விடக்கூடியது.

ஜனாதிபதித் தேர்தல்களில் தனது அரசியல் முடிவுகள் குறித்த வருத்தமோ, பொறுப்புக்கூறும் இயல்போ அதனிடம் கிடையாது.

இதனால்த்தான், மக்களின் தர்மஅடியில் சிக்கி ராஜபக்சக்களே மூச்சும்காட்டாமலிருந்த சமயத்தில் டக்ளஸ் ஒரு விபரீத அறிக்கை வெளியிட்டார். மக்களின் கல்லெறியை கைதட்டல்களாக கருதுவதாக அறிக்கை விட்டார். ஆளும் தரப்பை சந்தோசப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தை விட வேறெந்த நோக்கமாவது இந்த அறிக்கையின் பின்னால் இருக்குமென நம்புகிறீர்களா?

மூச்சும் விடாத கிழக்கு கட்சிகள்

கடந்த கோட்டாவின் ஆட்சியில் சிறுபான்மையினங்கள் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை புதிதாக சொல்லத் தேவையில்லை. அப்போது அரசில் அங்கம் வகித்த எந்த சிறுபான்மையின கட்சியும் பேசக்கூடிய துணிச்சலை கொண்டிருக்கவில்லை. கொரோனா தொற்றுக்காலத்தில் முஸ்லிம்களின் ஜனாஸா எரிக்கப்பட்ட போது, அந்த அரச கூட்டணியில்தான் அதாவுல்லா இருந்தார். அவராலும் பேச முடியவில்லை.

மட்டக்களப்பு மேய்ச்சல்தரை விவகாரம் உள்ளிட்ட பல விவகாரங்களிருந்தாலும் பிள்ளையானால் அதை பற்றி மூச்சும்காட்ட முடியவில்லை.

தேர்தல் மேடைகளில் கோட்டா, ராஜபக்சவென பிரமுகர்களுடன் இந்தக்கட்சிகளின் பிரதானிகள் காணப்பட்டாலும், தேர்தலின் பின்னர் இந்த கட்சி பிரதானிகளை ஆட்சியாளர்கள் அவ்வளவாக கண்டுகொள்வதில்லையென்பதே யதார்த்தம்.

ராஜபக்ச முகாமில் இதுவரை காணப்பட்ட ஈ.பி.டி.பி, பிள்ளையான், அதாவுல்லா தரப்பு போன்றன தற்போது ரணில் தரப்பிற்கு பல்டியத்து, ரணில் புராணம் பாடுகிறார்கள். பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க ரணில்தான் பொருத்தமானவர் என சான்றிதழ் வேறு கொடுக்கிறார்கள்.

ரணில் பொருளாதார நெருக்கடியை தீர்த்தார் என்பதே கற்பனை கதை. அப்படி அவர் தீர்த்துக் கொண்டதாக வைத்தாலும், அதை தீர்க்கும் வல்லமையை கடும் தவமிருந்து கடந்த வருடம்தான் அவர் பெற்றார் என்பதில்லைத்தானே. அவர் அரசியலில் இருந்த காலம் முதல் அந்த திறன்கள் அவரிடமிருந்திருக்க வேண்டுமல்லவா. அப்படியானால் நாட்டுக்கு தேவையான அந்த தலைவரை இதுவரை எதிர்த்து, நாட்டுக்கு பொருத்தமற்ற தரப்புக்களுடன் கூட்டணி வைத்திருந்தது இந்த கட்சிகள் செய்த பிழையல்லவா? இது பற்றி என்றாவது பேசியிருக்கிறார்களா?

சரணடைந்த ஆயுத இயக்கங்கள்

பொதுவாகவே தமிழ் ஆயுத இயக்கங்கள் பெரும்பாலானவை நீண்டகாலமாக அரசுடன் இணைந்து, துணை இராணுவக்குழுக்களாக செயற்பட்டவை. அவர்கள் அரசுகள், இராணுவத்தின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து பழக்கப்பட்டவர்கள். எதிர்த்து கேள்வி கேட்காத விசுவாசமான ஆயுதக்குழுக்களாக இருந்தவர்கள். அந்த இயல்பே தற்போதும் தொடர்கிறது.

ஈ.பி.டி.பி, பிள்ளையான் குழு என்பன மாத்திரமல்ல- தீவிர தமிழ் தேசிய முலாம் பூசிய ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் என்பனவும் கிட்டத்தட்ட இவ்விதமான இயல்புடையவையே. உப தரப்புக்களாக செயற்பட்ட பழகிய இவர்கள் தனித்து அரசியல் தீர்மானங்களை எடுக்க முடியாதது மாத்திரமல்ல- அரசுகளுடன் இரகசியமாக நெருக்கமான உறவை கொண்டுள்ளனர்.

தற்போது தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பதென ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் என்பன முடிவெடுத்ததும் இந்த விதமான இயல்பினாலேயே.

அவர்களால் தனித்து அரசியல் செயற்பாட்டியக்கமொன்றை கட்டியெழுப்பவோ, கொண்டு நடத்தவோ முடியாது என்பதை அவர்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கி நிரூபித்து விட்டனர். அந்த கூட்டணி உருவாக்கப்பட்டது மாத்திரம்தான். பின்னர் சடலமாகிவிட்டது. வடக்கு கிழக்கில் எந்தவொரு மாவட்டத்திலும் முழுமையாக சென்று, கட்டமைப்பை விஸ்தரிக்கும் செயற்திறனே இல்லாதவர்கள். அவ்வப்போது மைக்கை பிடித்து பேசினால் சரியென்று நினைப்பவர்கள்.

அவர்களால் தனித்து செயற்பட முடியாது என்பதாலேயே தமிழ் பொதுவேட்பாளர் என்ற முட்டாள்த்தனமான அரசியல் கோசத்திற்கு அடிமையானார்கள். அந்த அலையில் கரைசேர்ந்து விடலாமா அல்லது பாவமன்னிப்பு பெற்று விடலாமா என சிந்தித்து, பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகித்தனர்.

ஆனாலும், பொதுவேட்பாளரை இந்த கட்சிகள் ஆதரித்தாலும், அவர்களுக்கு அரசுடன் நெருக்கமான உறவுள்ளது. ரணிலின் வெற்றிக்காக இவர்கள் பொதுவேட்பாளரை ஆதரிக்கிறார்களா என்ற கேள்வியும் உள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பாக இருந்த வரை, இலங்கை தமிழ் அரசு கட்சியின் சொல்வழி கேட்டு நடந்து கொண்டிருந்தனர். பின்னர், அதில் தெறிப்பு ஏற்பட்டு, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு என ஒரு அணியை உருவாக்கினார்கள். அந்த அணியின் தொடக்கம் பெருமெடுப்பில் பிரச்சாரம் செய்யப்பட்டாலும், பின்னர் அது சத்தமில்லாமல் கோமா நிலைக்கு சென்றுவிட்டது. இந்த தரப்புக்கள் தனித்து ஒரு அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்ப வல்லமையில்லாத நிலைமையில், பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதுபவர்களின் வழிநடத்தலை ஏற்று, இப்பொழுது பொதுவேட்பாளர் முகாமில் தஞ்சமடைந்துள்ளனர்.

பொதுவேட்பாளர் முகாமில் இந்த கட்சிகளிற்கு நிரந்தர இடம் கிடைக்குமா என்பதே சந்தேகம்தான். பொதுவேட்பாளர் அரியநேந்திரன், பொதுவேட்பாளர் தரப்பிலுள்ள கட்சிகளின் தலைவர்களை மரியாதைக்கேனும் ஒருமுறை சந்திக்கவில்லையென்ற விமர்சனம் எழுந்து, அது பற்றி அரியநேந்திரனை நேரில் அழைத்தே கேட்டிருந்தார்கள். சரி சந்திக்கிறேன் என அரியநேந்திரன் பதில் சொல்லி சமாளித்து விட்டார். சந்திக்கவில்லை. அரியநேந்திரனே சாதாரணமாக டீல் செய்யும் இந்த கட்சிகள், நமக்கு அரியநேந்திரன் அளவிலேயே அரசியல் செய்யலாம் என தேசிய அரசியலில் இருந்து ஒதுங்கி வந்துவிட்டனர். ஆகவே, அவர்களையும் பட்டியலில் இருந்து நீக்கிவிடலாம்.

விக்னேஸ்வரனும் இந்த பட்டியலுக்குள்ளேயே உள்ளடங்கக் கூடியவர். அவரை யாரும் சுலபமாக ஒரு நிலைப்பாட்டிற்கு நம்ப வைக்க முடியும். ரணில்தான் பொருத்தமானவர் என அண்மைய மாதங்கள் வரை சொல்லிக் கொண்டிருந்தார். பின்னர் நிலைப்பாட்டை மாற்றி விட்டார். அவர் அரசியலுக்கு வந்தபோது கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை, அவர் அரசியலுக்கு வந்த பின்னர் பேண முடியவில்லை. அவரும் தாக்கம் செலுத்தும் அரசியல் சக்தியாக உருவெடுக்கவில்லை.

இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் ஆயிரம் குழப்பங்கள் இருந்தாலும், அது கட்சியாக ஒரு அரசியல் நிலைப்பாடு எடுத்துள்ளது. அந்த நிலைப்பாட்டை முன்னிறுத்தி உழைக்கும் சக்தி அதற்குள்ளது. கடந்த நல்லாட்சிக்காலத்தில் ஒரு அரசியலமைப்பை உருவாக்க அது முயன்றது. அந்த முயற்சி வெற்றியடையவில்லையென்றாலும், வேறெந்த தமிழ் தரப்பும் அதற்கு கிட்டவான முயற்சிகளை கூட எடுக்கவில்லை.

மறுவளமாக இன்னொரு யதார்த்தமும் உள்ளது.

இந்த தேர்தலில் ரணில், சஜித், அநுர ஆகிய மூவரில் யார் வெற்றி பெற்றாலும், அவர்கள் சுமுகமாக இணைந்து பணியாற்றக்கூடிய ஒரே தமிழ் தரப்பு இலங்கை தமிழ் அரசு கட்சியே. முஸ்லிம் தரப்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தரப்பே.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு இலங்கை தமிழ் அரசு கட்சி ஆதரவளிக்கா விட்டாலும், அந்த கட்சிக்கு ரணிலுடன் நல்ல உறவுள்ளது. தேர்தலில் எதிர்முகாமிலிருந்தாலும், மறுதரப்புடன் இணைந்து செயற்படவல்ல நல்ல இராஜதந்திரி ரணில். இம்முறை தேர்தலில் ரணில் வெற்றியீட்டினால், அவரை ஆதரிக்கும் ஈ.பி.டி.பி, பிள்ளையான் தரப்பை விட இலங்கை தமிழ் அரசு கட்சியுடன் அவர் நெருக்கமாக பணியாற்றுவார்.

மறுவளமாக அனுரவோ, சஜித்தோ வெற்றியீட்டினாலும் அவர்கள் இலங்கை தமிழ் அரசு கட்சியுடனே நெருக்கமாக பணியாற்றுவார்கள். அந்த சமயத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி, பிள்ளையான், அதாவுல்லா அணிகளெல்லாம் பெரும் அரசியல் வீழ்ச்சியை சந்திப்பார்கள். அவர்களால் ஜனாதிபதிகளை நெருங்கவே முடியாது.

முஸ்லிம் தரப்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸே அனுர, சஜித்துடன் நெருக்கமாக பணியாற்றக்கூடியவர்கள்.

இந்த யதார்த்தங்களை உணர்ந்து வாக்களிப்பது புத்திசாலித்தனம்.

What’s your Reaction?
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

‘சஜித்துடன் கூட்டணி வைத்தவருடன் கூட்டு வைக்க மாட்டோம்’: முரட்டு தேசியவாதிகளாக மாறிய ரெலோ!

Pagetamil

‘சங்கு சின்னம் எமக்கு ஒதுக்கப்பட்டுள்ளது’: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு!

Pagetamil

கூட்டாக தேர்தலில் போட்டியிட அக்கறை காட்டாத தமிழ் அரசு: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புடனான பேச்சில் முடிவில்லை!

Pagetamil

இஸ்ரேல் மீது ஈரான் திடீர் ஏவுகணைத் தாக்குதல்!

Pagetamil

ஒற்றுமையாக தேர்தலை எதிர்கொள்ளுங்கள்: பிரதான தமிழ் கட்சிகளுக்கு இந்தியா அறிவுரை!

Pagetamil

Leave a Comment