பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்ட இலங்கை மீண்டும் மேல்-நடுத்தர வருமான நாடாக உயர்வு
வரலாற்றிலேயே மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு நாட்டின் பொருளாதாரம் சரிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், இலங்கை மீண்டும் மேல்-நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் (Upper-Middle-Income Countries) பட்டியலில் இணைந்துள்ளது.
உலக வங்கியின் (World Bank) நேற்று வெளியிடப்பட்ட சமீபத்திய வருமான வகைப்பாட்டின்படி, 2025ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5 சதவீதம் வளர்ச்சியடைந்ததன் காரணமாக, நாடு கீழ்-நடுத்தர வருமான நாடுகள் பட்டியலிலிருந்து மீண்டும் மேல்-நடுத்தர வருமான நாடுகள் பட்டியலுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
தொழில்துறை, சுற்றுலாத்துறை மற்றும் நிதிச் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏற்பட்ட மீட்சியே இந்த பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார சரிவிலிருந்து இலங்கை மீண்டிருப்பதை இது உறுதிப்படுத்துவதோடு, கடினமான பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியதற்கான சர்வதேச அங்கீகாரமாகவும் இந்த உயர்வு பார்க்கப்படுகிறது.
இலங்கையை “மீட்சியின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு” என வர்ணித்துள்ள உலக வங்கி, “2022ஆம் ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடியால் சரிவின் விளிம்பை எட்டிய இலங்கை, வெறும் மூன்று ஆண்டுகளில் தொழில்துறைகள், நிதிச் சேவைகள் மற்றும் சுற்றுலாத்துறையின் மீட்சியால் 2025ஆம் ஆண்டில் 5 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது” என குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, “இந்த உயர்வு இலங்கையின் மீளுருவாக்க திறனை வெளிப்படுத்தினாலும், நிர்ணயிக்கப்பட்ட வருமான வரம்பை நாடு மிகக் குறைந்த வித்தியாசத்திலேயே கடந்துள்ளது” என்றும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
2019ஆம் ஆண்டில் இலங்கை முதன்முறையாக மேல்-நடுத்தர வருமான நாடுகளின் பட்டியலில் இணைந்திருந்தது. எனினும், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொரோனா பெருந்தொற்று, அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெளிநாட்டு செலாவணி நெருக்கடி, மற்றும் 2022ஆம் ஆண்டின் இறையாண்மை கடன் தவறுதல் (Sovereign Default) ஆகிய தொடர் அதிர்வுகளால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக ஒருவருக்கான தேசிய வருமானம் குறைந்து, இலங்கை மீண்டும் கீழ்-நடுத்தர வருமான நாடுகள் பட்டியலுக்கு தள்ளப்பட்டது.
தற்போதைய இந்த உயர்வு, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார நிலைநிறுத்தல் திட்டங்கள், நிதி ஒழுங்குபடுத்தல், பணவியல் சீர்திருத்தங்கள் மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு போன்ற விரிவான நடவடிக்கைகளின் பலனாகக் கருதப்படுகிறது.
மேலும், சுற்றுலாத்துறையின் எழுச்சி, வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் பணப்பரிமாற்ற அதிகரிப்பு, வெளிநாட்டு வர்த்தகத் துறையின் முன்னேற்றம் மற்றும் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஏற்பட்ட பொருளாதார சுருக்கத்திற்குப் பின்னர் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பியமை ஆகியவை, ஒருவருக்கான மொத்த தேசிய வருமானத்தை (GNI per capita) உலக வங்கி நிர்ணயித்துள்ள மேல்-நடுத்தர வருமான வரம்பைத் தாண்ட உதவியுள்ளன.
இந்த உயர்வு இலங்கையின் சர்வதேச பொருளாதார நம்பகத்தன்மையையும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (FDI) ஈர்ப்பதற்கும், தனியார் துறை வழிநடத்தும் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்துவதற்கும், சர்வதேச முதலீட்டாளர்களுக்கு போட்டித்தன்மை வாய்ந்த முதலீட்டு இலக்காக இலங்கையை நிலைநிறுத்துவதற்கும் வாய்ப்பு உருவாகும்.
எனினும், உலக வங்கியின் வருமான வகைப்பாடு என்பது ஒரு நாட்டின் வாழ்க்கைத் தரம் அல்லது வறுமை நிலையை நேரடியாக பிரதிபலிப்பதில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக வங்கியின் 2026–2027 வருமான வகைப்பாட்டில், இலங்கையுடன் இணைந்து ஜோர்டான், மைக்ரோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளும் மேல்-நடுத்தர வருமான நாடுகளாக உயர்த்தப்பட்டுள்ளன.




