நிவித்திகல தொடக்கம் கொலம்பகம வரையான பிரதான வீதியில் நேற்று (10) காலை டோலஸ்வல பகுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் சுரங்கத்தின் சுரங்கப்பாதை உடைந்து வீழ்ந்ததால் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.
இந்த வீதி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அரசு செலவில் கார்ப்பெட் இடப்பட்டு மேம்படுத்தப்பட்டது.
அதன்படி, வீதிக்கு அடியில் இயங்கும் அனுமதியற்ற மாணிக்கக்கல் சுரங்கத்தின் மேற்பகுதி ஒன்று சரிந்து விழுந்துள்ளதால் வீதி போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் போக்குவரத்து நடவடிக்கைகளில் கடும் சிரமங்களை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீதி அபிவிருத்தியின் பின்னர் சட்டவிரோத மாணிக்கக்கல் கடத்தல்காரர்களினால் அழிந்து வருவது மிகவும் கேவலமானது எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். வீதியோரம் கட்டப்பட்ட கட்டிடங்களும் நீரில் மூழ்கியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது இரத்தினபுரி மற்றும் கொழும்பில் இருந்து வரும் பேருந்துகள் டோலஸ்வல வரை மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கொழும்புகம, நிவித்திகல போன்ற புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் நேற்று பாடசாலைகளுக்குச் செல்ல முடியவில்லை.
வீதிக்கு அடியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்விடம் இருப்பது அவதானிக்கப்பட்டது. இந்த சட்டவிரோத அகழ்விடத்துக்கு மின்சார வசதிகளும் பெறப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் அகழ்விடம் ஏற்படுத்திய குழியில் வீதியின் கார்பெட் பகுதிகள் சரிந்து விழுவது தெரியவந்தது.