தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேந்திரனின் தேர்தல் விஞ்ஞாபனம் என்ற பெயரில் வெளியான தேர்தல் அறிக்கையில், வடக்கு கிழக்கு கடல் பகுதியில் இந்திய மீனவர்களும் மீன்பிடியில் ஈடுபட அனுமதிக்கும் சூழ்ச்சியான திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக மீனவர் பிரதிநிதிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நேற்று (3) யாழ்ப்பாணத்தில் இந்த தேர்தல் அறிக்கை வெளியாகியிருந்தது.
தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடுவதாக கூறப்பட்டிருந்த போதும், அது விஞ்ஞாபன வடிவில் வெளியாகியிருக்கவில்லை. இதனை தயாரித்த சமயத்திலேயே அரசியல் கட்சிகள் அதனை சுட்டிக்காட்டி, விஞ்ஞாபன வடிவத்தில் அது அமைந்திருக்கவில்லையென்பதை சுட்டிக்காட்டியிருந்தனர்.
காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு, கோருகிறோம் என அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த கோருகிறோம் என்பதை யாரை நோக்கி முன்வைக்கிறீர்கள் என அரசியல் கட்சிகள் கேட்டபோது, கட்டுரைகள் எழுதும் நிலாந்தன் என்பவர்- மக்களை நோக்கி முன்வைப்பதாக கூறியிருந்தார்.
எனினும், விஞ்ஞாபனம் அவ்வாறு தயாரிப்பதில்லை, இது நீங்கள் வாராவாரம் பத்திரிகைகளில் எழுதும் கட்டுரைகளை போலுள்ளது என அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டியதையடுத்து, அதை திருத்தம் செய்வதாக கூறியிருந்தனர்.
எனினும், நேற்று வெளியான அதன் இறுதி வடிவமும் தேர்தல் விஞ்ஞாபனமாக அமைந்திருக்கவில்லை.
அத்துடன், யாராவதொரு அரச தலைவருடன் பேசி இணக்கம் காணக்கூடிய விவகாரங்களை- இனப்பிரச்சினையின் விளைவுகளையே- அந்த அறிக்கை பிரதானமாக வலியுறுத்தியுள்ளது.
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பிலும் திட்டவட்டமாக வடிவமொன்றை வலியுறுத்தவில்லை. தமிழ் தேசிய கட்சிகள் பலவும் சமஸ்டி அடிப்படையிலான தீர்வை வலியுறுத்துகின்றன. தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒரு நாடு இரு தேசம் என்ற அடிப்படையில் தீர்வை வலியுறுத்துகிறது. எனினும், அரியநேந்திரனின் அறிக்கை தெளிவான வடிவமொன்றையும் சுட்டிக்காட்டாமல், பத்திரிகையில் கட்டுரைகள் எழுதுவதை போல வார்த்தை ஜாலங்களே இடம்பெற்றுள்ளன.
அத்துடன், அந்த அறிக்கையில் தமிழ் கடலில் தமிழ் மீனவர்களின் கடல் இறைமை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வார்தையின் மூலம், தமிழக மீனவர்களையும் வடக்கு கிழக்கில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கை மறைமுக வார்த்தைகளின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் பல மீனவர் அமைப்புக்களிடையே ஏற்பட்டுள்ளது.
இந்திய மீனவர்கள், வடக்கு கிழக்கில் அத்துமீறி மீன்பிடித்தாலும், அவர்கள் அந்த இடங்களை பாரம்பரியமாக மீன்பிடிக்கும் இடங்கள் என்றே குறிப்பிடுகிறார்கள்.
மீனவர்களின் இந்த சந்தேகம் தொடர்பில் ரெலோ அமைப்பின் பேச்சாளர் கு.சுரேந்திரனிடம் தமிழ் பக்கம் வினவியபோது, தமக்கு கையளிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை மாதிரியில் இந்த விடயம் இணைக்கப்பட்டிருக்கவில்லையென்றும், பின்னர் தம்முடன் கலந்தாலோசிக்காமல் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விடயத்தை பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதுபவர்களிடமே கேட்க வேண்டுமென்றார்.
தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது- தமிழ் கடலில் தமிழ் மீனவர்களின் இறைமை உறுதி செய்யப்பட வேண்டுமென்பது, இந்திய மீனவர்களை உள்ளடக்கவில்லையென்றார்.