26.9 C
Jaffna
January 28, 2025
Pagetamil
இலங்கை

‘சுமந்திரன் காட்டும் படங்கள் அரசியல் முதிர்ச்சியின்மையின் வெளிப்பாடு’: சுரேஷ் பிரேமச்சந்திரன்

எம்மவர்களைக் கொண்டே எம்மைப் பிரித்தாண்டு எமது ஒற்றுமையை சிதைத்து, எமது அபிலாசைகளைக் குழிதோண்டிப் புதைத்து எம்மீது மீண்டும் ஒடுக்குமுறைகளை மேற்கொள்வதற்கு எம்மிடமே ஆணை பெறுவதற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர். எனவே நாம் விழிப்புடன் இருந்து எம்மை பலியிடத் துடிக்கும் சக்திகளைப் புறந்தள்ளி அவர்களின் விருப்பம் நிறைவேறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்துகளுக்கு பதிலளித்து அவர் வெளியட்டுள்ள அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:

2024ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக அதன் முக்கிய வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸ்ஸநாயக்க போன்றோர் அடிக்கடி வடக்கு-கிழக்குக்கு வருவதும் அங்குள்ள பல்வேறு கட்சிகளையும் தனிநபர்களையும் சந்தித்துப் பேசுவதும் இப்பொழுது கிரமமாக நடைபெற்று வருகின்றது.

இதற்கு மேலதிகமாக தமிழர் தரப்புகளை கொழும்புக்கு வருமாறு அழைத்து அவர்களைச் சந்திக்க விரும்புவது ஒருபுறமும் திரு. சுமந்திரன், சாணக்கியன் போன்றோர் இவர்களைத் தேடித்திரிந்து சந்திப்பது இன்னொருபுறமுமாக அரசியல் நகர்த்தலில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திரு. சுமந்திரன் அவர்கள் அண்மைக்காலங்களில் மீண்டும் மீண்டும் திரு. ரணில் விக்கிரமசிங்க அவர்களைச் சந்திப்பதும் அவற்றைப் பெரிய செய்தியாக பத்திரிகைகளுக்குக் கொடுப்பதும் பத்திரிகைகளும் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கப்போகிறார் என்ற சாரப்பட கருத்துகளை எழுதுவதும் இப்பொழுது நடைபெற்று வருகின்றது.

2024ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து தமிழர் தரப்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்குள் பல சுற்றுப் பேச்சுகள் நடைபெற்றன. அதன் பிரகாரம் ஒரு தமிழ் பொது வேட்பாளருக்கான தேவை இருக்கின்றது என்பதை எமது கூட்டணி ஏற்றுக்கொண்டது. அதே சமயம் தமிழ்த் தேசிய பரப்பிலுள்ள சிவில் அமைப்புகளும் இ;வாறான ஒரு தேவை இருப்பதை தமது கலந்துரையாடல்கள் மூலம் உறுதிப்படுத்தின. அதன் பின்னர் இருதரப்பினரும் இணைந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதுடன் பொதுவேட்பாளரை நிறுத்துவது என்ற இலக்கை நோக்கி முன்னேறினர்.

இந்தக் காரணங்களினால் அச்சமடைந்துள்ள தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்கள் தமிழ் மக்களின் வாக்குகளை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில் பலமுனைகளிலும் காய்நகர்த்தல்களை மேற்கொள்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி திரு. சுமந்திரன் தனிநபராக தனது கட்சியினரின் ஒப்புதலோ அல்லது தமிழ் மக்களின் ஒப்புதலோ இல்லாமல் தான் ஜனாதிபதியுடன் பேசுகிறேன் என்று கூறுவதும் பதின்மூன்றை அவர் முழுமையாகத் தந்துவிடப்போகிறார் என்று சாரப்பட கருத்துகளை வெளியிடுவதும் தேர்தலில் மக்களை பிழையான பாதைக்கு இட்டுச் செல்வதற்கான ஒரு முயற்சியாகும்.

தமிழ் மக்களது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக இந்த ஜனாதிபதித் தேர்தல் களத்தைப் பாவிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்பதே தமிழர் தரப்பின் நோக்கமாகும். ஆனால் அதனை எதிர்த்து நிற்பது போன்ற தோற்றத்தைக் காட்டி நிற்கும் திரு. சுமந்திரன் அவர்கள் தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை முன்னிறுத்தியே இந்த பேச்சு வார்த்தைகளை நடாத்தி வருகின்றார்.

திரு. சுமந்திரன் அவர்களுக்கு பேச்சுவார்த்தைகள் தொடர்பாக குறைந்தபட்ச அனுபவங்களாவது இருக்கும் என்று நான் கருதுகின்றேன். மகிந்த ராஜபக்ச தரப்புடன் பதினேழு சுற்றுப் பேச்சுகள் நடாத்தப்பட்டு அவை எவ்வாறு தோல்வியில் முடிந்தது என்பது அவருக்குத் தெரியும். இதே போன்று நல்லாட்சி காலத்தில் இதே ரணில் விக்கிரமசிங்க அவர்களது தலைமையில் புதிய அரசியல் சாசனத்திற்காக நான்கு வருடங்கள் பேசி அது எவ்வாறு தோல்வியில் முடிந்தது என்பதும் அவருக்குத் தெரியும்.

அதன் பின்னர், ரணில் விக்கிரசிங்க ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்றதன் பின்னர் பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப் படுத்துவதற்கு நீங்கள் அனைவரும் தயாரா என்று கேட்டபொழுது மகிந்த ராஜபக்ச உட்பட அனைவரும் அதற்கு ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால் அதன் பின்னர் அது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதே காலகட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் திரு. விக்னேஸ்வரன் அவர்கள் வடக்கு-கிழக்கில் மாகாணசபை தேர்தல் நடக்கும்வரை ஒரு இடைக்கால சபையை உருவாக்கும்படியும் அதற்கான முழு ஏற்பாடுகளையும் அவருக்கு சமர்ப்பித்தும்கூட, அது தொடர்பாகவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இந்தியா சென்ற சமயத்திலும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெயசங்கர் இலங்கை வந்த சமயத்திலும் பதின்மூன்றை முழுமையாக நிறைவேற்றும்படி வற்புறுத்தியும்கூட அப்பொழுதும் எதுவும் செய்யவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக இருக்கின்ற திரு. ரணில் விக்கிரசிங்க அவர்களால் அரசியல் சாசனத்தில் காணப்படும் பதின்மூன்றாவது திருத்தத்தில் உள்ள ஒருபகுதியைக்கூட நிறைவேற்றுவதற்கு எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளாத நிலையில், திரு. சுமந்திரன் போன்றோர் தொடர்ச்சியாக ரணிலை சந்திப்பதும் மாகாணசபை அதிகாரங்கள் அனைத்தையும் அவர் கொடுப்பார் போன்ற அறிக்கையை வெளியிடுவதும் தமிழ் மக்களை தவறான பாதைக்கு வழிநடத்தும் ஒரு முயற்சியாகும்.

முன்னர் பதின்மூன்றாவதை முற்று முழுதாக எதிர்த்து நின்ற திரு. சுமந்திரன் அவர்கள் இப்பொழுது பதின்மூன்றை தான் ஏதோ பெற்றுக்கொடுப்பதுபோல் படம் காட்டுவதும் தமிழ் மக்கள் அரசியல் ஞானசூன்யங்கள் என்றும் அவர்களுக்கு எதுவும் புரியாது என்ற பாணியில் நடந்துகொள்வதும் அவரது அறிவு முதிர்ச்சியின்மையின் வெளிப்பாடு.

கொரோனா காலத்திற்குப் பின்னர் நாடு பொருளாதார ரீதியில் வங்குரோத்து அடைந்துவிட்டது என்ற சூழ்நிலையில், ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் வரவு-செலவு திட்டத்தில் ஒதுக்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட நிதி நிறுத்தப்பட்டது. ஆனால் ஜனாதிபதி அவர்கள் இப்பொழுது தான் விரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தான் விரும்பியவாறு ஒதுக்கும் நிலையைக் காணமுடிகின்றது. இதன் மூலம் தமிழ் மக்களின் வாக்குகளை இலகுவாகப் பெற்றுவிடலாம் என்று ரணில் கனவு காண்பதாகவும் தோன்றுகின்றது.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், ஜெனிவாவிலும்சரி, நியூயார்க்கிலும் சரி சுமந்திரனின் நடவடிக்கைகள் என்பது தமிழ் மக்களது கோரிக்கைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் எதிராகவே இருந்திருக்கின்றது. இனப்படுகொலை நடக்கவில்லை என்று கூறுவதும், யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்துவிட்டது என்று கூறுவதும் தொடர்ந்து அரசாங்கத்திற்கு கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுப்பதிலும் அவர் முன்னின்று செயற்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தையும் புரிந்துகொள்வதினூடாக நாம் ஏன் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்குவது என்ற முடிவை எடுத்தோம் என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.
தமிழ் மக்கள் நீண்டகாலமாக இலங்கை அரசியலை கண்காணித்து வருபவர்கள். அவர்களை ஏமாளிகள் என்றோ இலகுவாக ஏமாற்றிவிடலாம் என்றோ நினைப்பது மடைமைத்தனமானது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நிதி சிக்கலுக்குப் பின் துறைமுக புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்

east tamil

கடந்த ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக 8746 முறைப்பாடுகள் பதிவு – சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

east tamil

பண்டத்தரிப்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா

east tamil

Update – மாவை. சேனாதிராஜா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

east tamil

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகவுள்ள இலங்கை பொருளாதார உச்சி மாநாடு

east tamil

Leave a Comment