பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் வெடித்த பாலின சர்ச்சை தற்போது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
மகளிர் குத்துச்சண்டையில் 66 கிலோ எடைப்பிரிவில் இத்தாலியின் ஏஞ்சலா கரினி, அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் ஆகியோர் விளையாடினர். இதில் ஆட்டம் தொடங்கிய 46 நொடிகளில் ஏஞ்சலா வாக் அவுட் கொடுத்தார். முதல் ரவுண்டில் இமானே கெலிஃப், ஏஞ்சலா கரினியின் மூக்கில் தாக்கினார். ரத்தம் சிந்திய நிலையில் இமானே கெலிஃப் பெண் அல்ல ஆண் என நடுவர்களிடம் ஏஞ்சலா தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். இதையடுத்து இமானே கெலிஃப் வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர். “நான் எப்போதும் தேசத்துக்காக மிகுந்த விஸ்வாசத்துடன் விளையாடி வருகிறேன். இந்த முறை என்னால் மேற்கொண்டு விளையாட முடியாமல் போனது. ஏனெனில், என் மீது இமானே கெலிஃப் தாக்கிய பிறகு என்னால் விளையாட முடியவில்லை. நான் நிலைகுலைந்தேன்.
ரிங்கில் உள்ள என்னுடைய அனுபவம் மற்றும் எனது குத்துச்சண்டை கேரியரில் இது மாதிரியான வலுவான தாக்குதலை நான் எதிர்கொண்டது இல்லை. இமானே கெலிஃப் ஆண் தன்மை கொண்டவர். அவர் மகளிர் பிரிவில் ஆடி இருக்க கூடாது” என ஏஞ்சலா கரினி தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஏஞ்சலாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.
இதுகுறித்து சர்வதேச குத்துச்சண்டை சங்கம் (ஐபிஏ) சொல்லியுள்ளது என்ன?
இமானே கெலிஃப் மற்றும் சீன தைபேவின் லின் யூ ஆகியோர் ஐபிஏ போட்டிகள் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் பிரிவில் விளையாடி வருகின்றனர். அவர்கள் இருவரையும் நாங்கள் தகுதி நீக்கம் செய்தது சோதனைகளின் அடிப்படையில் தான். அவர்கள் இருவரும் மகளிர் பிரிவில் போட்டியிடும் போது மற்றவர்களை விட சில சாதகங்கள் உள்ளது. அதனை அந்த சோதனையில் உறுதி செய்த பிறகே இறுதி செய்தோம். இந்த முடிவு கடந்த ஆண்டு எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி
டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்னதாக ஐபிஏ-வை கடந்த 2019இல் சஸ்பெண்ட் செய்து விட்டு தங்களது பொக்சிங் யூனிட்டை கொண்டு டோக்கியோ போட்டிகளை நடத்தியது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி. பாரிஸ் ஒலிம்பிக்கிலும் இது தொடர்கிறது.
எந்தவித பாகுபாடும் இல்லாமல் விளையாட்டில் ஈடுபட அனைவருக்கும் உரிமை உண்டு. பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனைகள் அனைவரும் போட்டியின் விதிகள் மற்றும் மருத்துவ விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுதி பெற்றுள்ளனர். முந்தைய ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகளைப் போலவே, விளையாட்டு வீரர்களின் பாலினம் மற்றும் வயது அவர்களின் பாஸ்போர்ட்டை அடிப்படையாகக் கொண்டது என ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. இதன் மூலம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறது ஐஓசி.