இம்யூனோகுளோபுலின் வழக்கில் தேடப்படும் சுகாதார அமைச்சின் முன்னாள் அதிகாரியான வைத்திய நிபுணர் ஜயநாத் புத்பிட்டியவை கைது செய்வதற்கான நடவடிக்கையை சர்வதேச பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம நேற்று மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம வீரசிங்கவிடம் தெரிவித்தார்.
தரமற்ற மனித நரம்பு வழி இம்யூனோகுளோபுலின் கொள்வனவு தொடர்பான வழக்கில் ஒன்பதாவது சந்தேகநபரான வைத்திய நிபுணர் புத்பிட்டியவிற்கு சர்வதேச பொலிஸ் ஊடாக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
சந்தேக நபரை சர்வதேச பொலிசார் கைது செய்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சர்வதேச பிரிவினரிடம் ஒப்படைக்கவுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் 12வது சந்தேக நபரான முன்னாள் தேசிய மருத்துவ ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விஜித் குணசேகரவிடம் இருந்து 12 அரசாங்க முத்திரைகளை கண்டுபிடிப்பதில் புலனாய்வாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
தன்னிடம் இரண்டு அரசாங்க முத்திரைகள் மட்டுமே இருப்பதாக குணசேகர முன்னதாக வாக்குமூலம் அளித்திருந்தார்.
சந்தேகத்திற்கிடமான ஆவணங்கள் தொடர்பில் விசாரணை நடத்திய அரசாங்க தடயவியல் நிபுணருக்கு இந்த முத்திரைகள் தொடர்பில் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் கொள்வனவு தொடர்பான வழக்கு நேற்று மாளிகாவத்தை நீதவான் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெலிய ரம்புக்வெல்ல, முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த உள்ளிட்ட 11 சந்தேகநபர்கள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.