ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக் கொண்ட விழாவில், புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, மத்திய உள்துறை அமித் ஷா கண்டிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு விஜயவாடா அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட விழாவில் பதவியேற்றுக்கொண்டார். இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜெ.பி.நட்டா, நிதின் கட்கரி, ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் அமைச்சரானார். மேலும் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இந்த விழாவில், புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் கலந்துகொண்டார். விழா மேடைக்கு வந்த தமிழிசை சவுந்தரராஜன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வணக்கம் தெரிவித்தார். அப்போது அமித் ஷா, தமிழிசையை அழைத்துப் பேசினார். தமிழிசை ஏதோ சொல்ல வர, அதை அமித் ஷா மறுப்பது போல் சைகை காட்டி பேசும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. பாஜகவின் உள்கட்சி விவகாரத்தை பொதுவெளியில் பேசியதற்காக, தமிழிசையை அமித் ஷா கண்டித்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், பாஜக தனியாக கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தது. இத்தேர்தலில், புதுச்சேரி மற்றும் தெலங்கானா மாநில ஆளுநராக பதவி வகித்து வந்த தமிழிசை சவுந்தரராஜன், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜக சார்பில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியைத் தழுவினார். இதைத்தொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தமிழகத்தில் அதிமுக உடன் கூட்டணி அமைத்திருந்தால், அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம் என்று கூறியிருந்தார்.
இதேபோல், தேர்தல் தோல்விக்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, இந்த தேர்தலில் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், கணிசமான தொகுதிகளில் பாஜக இரண்டாம் இடத்தைப் பிடித்திருப்பதாகவும் கூறியிருந்தார். பாஜகவின் முன்னாள், இந்நாள் தலைவர்களின் கருத்து அக்கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில், அமித் ஷா தமிழிசையை கண்டிப்பது போன்ற வீடியோ வெளியாகி இருப்பது கவனிக்கத்தக்கது.