யாழில் தனியார் மருத்துவத்துறையை விளம்பரப்படுத்தும் முயற்சியிலீடுபடுகிறதா மருத்துவபீடம்?… யாழில் சத்தமில்லாமல் நடக்கும் சர்ச்சைச் சம்பவங்கள்!

Date:

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நொதேர்ண் சென்ரல் தனியார் மருத்துவமனையில், யாழ்ப்பாணத்திலுள்ள மருத்துவர்களுக்கான செயலமர்வு ஒன்று, அரச மருத்துவ அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பல தரப்பினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

யாழ்ப்பாணத்திலும் மருத்துவம் வியாபாரமாகி வருவது, மருத்துவ மாபியா குறித்த கவலைகள் அதிகரித்து வரும் பின்னணியில், அதன் விபரீதத்தை வெளிச்சமிடுவதை போலவும்- அதனை மேலும் ஊக்கப்படுத்துவதை போலவும் இந்த நிகழ்வு அமைந்துள்ளதாக மருத்துவ வட்டாரங்களிலேயே அதிருப்தி எழுந்துள்ளது.

இதன்மூலம், பெண்ணோயியல் மற்றும் கருவுறுதல் சிகிச்சை யாழ்ப்பாணத்தில் மேலும் வணிகமயமாவதுடன், அரச வைத்தியசாலைகளின் பங்கு குறைவடையும் அபாயமுள்ளதாக மருத்துவத்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

யாழ் மருத்துவ சங்கம், மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மகப்பேற்று மற்றும் பெண்நோயியல் மருத்துவத் துறை என்பனவற்றின் ஒத்துழைப்புடன், ஜூன் 17ஆம் திகதி நொதேர்ண் சென்ரல் தனியார் மருத்துவமனையில் இந்த செயலமர்வு நடைபெறள்ளது.

கருவுரு மருத்துவம் குறித்த இந்த செயலமர்வில், அண்மையில் வெளிநாட்டிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டு, நொதேர்ண் சென்ரல் தனியார் மருத்துவமனையில் உள்ள நவீன ஸ்கானர் தொடர்பான பயிற்சியே வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. கருவிலுள்ள குழந்தையை ஸ்கான் செய்து, குறைபாடுகளை கண்டறியும் இந்த வகை இயந்திரம், யாழில் முதல் முறையாக இங்கு பொருத்தப்பட்டுள்ளது (அண்மையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஜனாதிபதி திறந்து வைத்த பெண்கள் விடுதியில் இந்த இயந்திரம் உள்ளது). அந்த இயந்திரம் தொடர்பாகவும் பயிற்சி வழங்கவே இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தவகை செயலமர்வுகள் நடப்பது வழக்கம் என்றும், ஆனால், வடக்கில் முதல் முறையாக தனியார் மருத்துவமனையொன்றில், அரச அலகுகளின் ஒத்துழைப்புடன் நடப்பது இதுவே முதல்முறையென்றும் மருத்துவத்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர். மருத்துவர்களுக்க இவ்வாறான செயலமர்வுகள் மருத்துவபீடத்தில் அல்லது அரச மருத்துவமனைகளிலேயே நடந்து வந்துள்ளது. இப்பொழுது தனியார் மருத்துவமனையில் நடக்கவுள்ளது.

ஜூன் 17ஆம் திகதி பொது விடுமுறையென்ற போதும், வடக்கிலுள்ள பெரிய வைத்தியசாலைகள் அனைத்திலுமே பொதுவிடுமுறை நாட்களும், கடமை நாட்களை போலயே மருத்துவமனைகள் இயங்குவது வழக்கம். சத்திரசிகிச்சைகள், கிளினிக்குகள் வழக்கம் போல செயற்படும். ஆகவே, மருத்துவர்களின் கடமை நேரத்திலேயே இந்த செயலமர்வு நடைபெறவுள்ளது. அரச மருத்துவமனைகளில் செயலமர்வுகள் நடக்கும் சந்தர்ப்பங்களில், அந்த அலகுகளிற்கு பொறுப்பானவர்கள், மருத்துவர்கள் செயலமர்வுகளில் பங்கேற்க அனுமதி வழங்குவார்கள். இம்முறை தனியார் மருத்துவமனையில் நடக்கும் செயலமர்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மருத்துவர்கள் கடமை நேரத்தில் செல்ல முடியாது. கடமை நேரத்தில்  தனியார் மருத்தவமனைகளில் சிகிச்சையளிக்கும் ஆபத்தான வணிகச்சூழல் குறித்த கவலைகள் யாழ்ப்பாணத்திலும் முன்னர் எழுப்பப்பட்டிருந்தன. தற்போது அது ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. ஆனால், மருத்துவர்கள் கடமை நேரத்திலும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு செல்லலாம் என்ற ஆபத்தான சூழலை ஏற்படுத்துவதற்கான முன்னுதாரணத்தை, இந்த செயலமர்வு உருவாக்கி விடும் என்ற அச்சமும் மருத்துவத்துறையினரிடம் உள்ளது.

யாழ்ப்பாண மருத்துவர் சங்கமும், மருத்துவபீமும் இந்த ஆபத்தான சூழலை ஊக்குவிக்கிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

இது தொடர்பில், யாழ்ப்பாணத்திலுள்ள மருத்துவத்துறையினருடன் தமிழ்பக்கம் பேசிய போது கிடைத்த தகவல்களின் சுருக்கம் வருமாறு-

“அண்மையில் வெளிநாட்டு கற்கைநெறிக்கு சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த மருத்துவர்கள் ஓரிருவர் கற்கைநெறியை முடித்துவிட்டு திரும்பி வந்துள்ளனர். கருவுரு மருத்துவத்தில் பெண்களை ஸ்கான் செய்யும் இயந்திரங்கள் தற்போது பெரும்பாலான முக்கிய அரச மருத்துவமனைகளில் உள்ளது. ஆனால் இலங்கையில் உள்ளவற்றை விட, இன்னும் சற்று மேம்பட்டதாக- அண்மைய தயாரிப்புக்கள் வெளிநாட்டில் இருக்கின்றன. அவ்வாறன ஒன்றையே, இரண்டு மூன்று மருத்துவர்கள் இணைந்து தமது தொழில் முதலீட்டுக்காக கொள்வனவு செய்துள்ளனர். (இதன் பெறுமதி சுமார் மூன்றரை கோடி ரூபா வரும் என்கிறார்கள்) அந்த இயந்திரம் தொடர்பான செயலமர்வே நடைபெறவுள்ளது. இப்படியான செயலமர்வுகள் வடக்கில் ஏற்கெனவே அரச மருத்துவமனைகளில் நடந்தன. இப்பொழுது முதல்முறையாக தனியார் மருத்துவமனையில் நடப்பதும், அதனை அரச அலகுகள் விளம்பரம் செய்வதும் நடக்கிறது.

தனியார் மருத்துவமனையில் உள்ள வசதிகளை அவர்கள் விளம்பரம் செய்யலாம். மக்கள் அதை பார்த்து, விரும்பியவர்கள் செல்லலாம். அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால், தனியார் மருத்துவமனையொன்றில் உள்ள வசதியை விளம்பரப்படுத்துவதை போல, அரச அலகுகளே செயற்படுவது ஆபத்தானது. வடக்கில் முதல்முறையாக பகிரங்கமாக அது நடக்கிறது.

இதனால் பல ஆபத்துக்கள் நிகழும். இருப்பதிலேயே சிறந்த மருத்துவத்தையே மக்களுக்கு வழங்க வேண்டும். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கருவுருதல் தொடர்பான சிகிச்சைக்காக செல்பவர்கள், ஸ்கான் செய்வதற்காக நொதேர்ன் சென்ரல் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்படும் அபாயமுள்ளது. தற்போதைய போக்கை அவதானித்தால், அது விரைவில் நடக்கும் போல தெரிகிறது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் ஒரு ஸ்கானர் உள்ளது. அதன் மூலமே இதுவரை சிகிச்சையளித்து வருகிறது. மருத்துவத்துறையில் காலத்துக்கு காலம் புதிய இயந்திரங்கள் அறிமுகமாவது வழக்கம். அதற்காக- மக்களின் உரிமையான இலவச மருத்துவத்துவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக தனியார் மருத்துவத்துறையை ஊக்குவிக்கும் விதமாக அரச நிறுவனங்கள் செயற்படுவது ஆபத்தானது. வடக்கில் இதுதான் முதல் சம்பவம்“ என்றனர்.

இந்த செயலமர்விற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தின் சில பிரதானிகள், குறிப்பிட்ட தனியார் வைத்தியசாலையில் பங்குகளை வைத்துள்ளார்கள் என மற்றொரு தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.

spot_imgspot_img

More like this
Related

குவைத்தில் உள்ள அமெரிக்க தளத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல்

நாட்டின் தெற்குப் பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரானியப் புரட்சிக்...

சீமானுக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் சீர்வரிசையுடன் வந்த அனிதா ராதாகிருஷ்ணன்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானுக்கு குழந்தை பிறந்​திருக்​கும் நிலை​யில்,...

அமெரிக்க தாக்குதலில் ஈரானின் கடற்படை தளபதி பலி?

ஈரானிய துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் மீது அமெரிக்கா நடத்தியதாகக் கூறப்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்