பிரதமர் மோடி மீது இலங்கை மக்களுக்கு அதிக நம்பிக்கை இருப்பதாக பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கூறினார்.
இலங்கை நுவரெலியா மாவட்டத்தில் ‘சீதா எலிய’ என்ற பகுதியில் அமைந்துள்ள சீதை அம்மன் கோயிலில் கடந்த 19ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஷ்ணனின் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அயோத்தியில் ராமர் கோயில் திறந்த பிறகு, இலங்கை சீதை அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. அயோத்தி ராமர் கோயிலில் பிரதமர் மோடி பூஜை செய்த படத்தை,சீதை கோயிலுக்கு அன்பளிப்பாக அளித்தேன்.
மலையகத்தில் கொட்டககலை என்ற இடத்தில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக ஆர்எஸ்எஸ் சார்பாக நடத்தப்படும் தொடக்கப் பள்ளியைப் பார்வையிட்டேன். தொடர்ந்து, கதிர்காமம் முருகன் கோயிலுக்குச் சென்றேன்.
வழியில், கடற்கரைக் கிராமமான வெலிகாமம் என்ற இடத்தில் பெட்டிக் கடை நடத்தும் சிங்களப் பெண்ணிடம் எனது செல்போனில் இருந்த பிரதமர் மோடியின் படத்தைக் காண்பித்து, “இவர் யார் தெரியுமா?” என்று கேட்டேன். அந்தப்பெண் “இந்தியப் பிரதமர்” என்றுகூறி என்னை ஆச்சரியப்படுத்தினார்.
மலையகத்தில் தேயிலை தோட்டப் பகுதிகளில் வசிக்கும் தமிழர்களின் குழந்தைகளுக்குப் போதுமான கல்வி வசதி இல்லை. பல இடங்களில் ஆரம்ப பள்ளிகள்கூட இல்லை. எனவே, பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.
இலங்கையில் வளர்ச்சி மற்றும் முதலீடு ஆகியவை கொழும்பு, கண்டி, நுவரெலியா ஆகிய 3 மாவட்டங்களில் மட்டுமே உள்ளன.மற்ற மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி இல்லை.
தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் விவசாயத்தை மட்டுமே நம்பிஇருக்க வேண்டிய நிலை உள்ளது.அவற்றில் பெரும்பான்மையானவை உள்நாட்டுப் போரின்போது அழிந்துவிட்டன. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அதிக அளவில் தொழில் முதலீடுகள் செய்ய வேண்டும்.
தலைமன்னாருக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே பாலம்அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும். இந்தப் பாலத்தின் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இலங்கைக்கும் மறுவாழ்வுகிடைக்கும். இதன் மூலம் சுற்றுலா வளர்ச்சி அடைவதுடன், பொருளாதா வளர்ச்சியும் ஏற்படும்.
கடந்த 10 ஆண்டுகளில் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு இலங்கை மக்களுக்கு பல்வேறு பணிகளை செய்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியின்போது இந்திய அரசு பல்வேறு உதவிகளை செய்தது. இலங்கை மக்களுக்கு அவர்களின் அதிபர், பிரதமர்களைக் காட்டிலும், இந்தியப் பிரதமர் மோடி மீது பெரிய நம்பிக்கையும், மரியாதையும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.