க.பொ.த சாதாரணதர பரீட்சைக்காக பரீட்சை நிலையத்திற்கு வந்த இரு பாடசாலை மாணவிகள் வீடு திரும்பவில்லையென பாதுகாவலர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த இரண்டு மாணவிகளும் நேற்று (14ம் திகதி) காலை பரீட்சை நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் அவர்களில் ஒருவர் பெற்றோருடன் பரீட்சை நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இரண்டு மாணவிகளும் நேற்று (14) காலை பரீட்சைக்குத் தோற்றுவதற்காக அம்பகமுவ தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையத்திற்கு வந்துள்ளனர்.
இரண்டு மாணவிகளும் நண்பர்களாக இருப்பதையும், அன்றைய தினம் பரீட்சை தொடங்கும் முன், பரீட்சை மையம் அருகே இருவரும் பேசிக் கொண்டிருந்ததையும் பரீட்சைக்கு வந்திருந்த பல மாணவர்கள் பார்த்துள்ளனர்.
பின்னர், நாவலப்பிட்டி நகரில் இரு மாணவிகளை பாடசாலை சீருடையில் பலர் பார்த்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கினிகத்தேன, அக்ரோயா மற்றும் நாவலப்பிட்டி, நாகஸ்தன்ன ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் காணாமல் போன இந்த இரண்டு மாணவிகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.