கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் விசா வழங்கும் நடைமுறையை இந்திய நிறுவனங்கள் பொறுப்பேற்றுள்ளதாக பரவிய தகவலை, கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் மறுத்துள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் விசா வழங்கும் நடைமுறையை இந்திய நிறுவனங்கள் பொறுப்பேற்கின்றமை தொடர்பாக சமூக ஊடகங்கள் உட்பட பல்வேறு ஊடகங்களில் வெளியாகியுள்ள அறிக்கைகள் மற்றும் கருத்துகள் தொடர்பாக நாம் அறிந்துள்ளோம்.
இந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிறுவனங்கள் இந்தியாவை தளமாகக்கொண்டு இயங்கும் நிறுவனங்களோ அல்லது இந்திய நிறுவனங்களோ அல்ல, மாறாக வேறு இடங்களை தலைமையகமாகக் கொண்டவை ஆகும். இவ்வாறான சூழலில் இந்தியாவை தொடர்பு படுத்துவது அடிப்படை ஆதாரமற்றதாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் விமான நிலையத்தில் இலங்கை பிரஜை ஒருவர் புதிய இ-விசா முறையை விமர்சித்த சம்பவத்தின் பின்னணியில் இந்த தெளிவுபடுத்தல் வெளியாகியுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ ஒன்றில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா செயலாக்கத்தை எடுத்துக் கொண்ட இந்திய நிறுவனங்கள் தாமதத்தை ஏற்படுத்துவதாகவும், கூடுதல் செயலாக்கக் கட்டணங்களை வசூலிப்பதாகவும் கோபமடைந்த இலங்கை பிரஜை ஒருவர் கூறினார்.