பொதுவேட்பாளருக்கு நாம் எமது முதல் வாக்கை அளித்துவிட்டு 2ம் 3ம் விருப்பு வாக்குகளை நாம் விரும்பும் சிங்கள வேட்பாளருக்கு அளிக்க முடியும். இதன் மூலம் தமிழ் மக்களின் ஒற்றுமை பேணப்படும். எமது எதிர்பார்ப்புக்கள் உலகறியச் செய்யப்படும். அதே நேரத்தில் எமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் இடமளிக்கப்படும். இவ்வாறு செய்வதால் இனக்கலவரங்கள் வெடிக்கவேண்டிய அவசியம் எதுவும் ஏற்படாது என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன்.
கிளிநொச்சியில் நேற்று (1) இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஏற்பாட்டில் நடந்த மேதின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
தற்போது வாசுதேவ நாணயக்கார அவர்களும் நானும் சம்பந்திகள். எமது நட்பு சுமார் 65 வருடங்கள்; பழமையானது. எமது நட்பு தொடங்கும் போது திரு.சிறீதரன் அவர்கள் பிறந்திருக்கவில்லை. சட்டமாணவர்களாக நாம் அந்தக் காலத்தில் கொழும்பில் மேதின ஊர்வலங்கள் பலவற்றில் பங்குபற்றினோம். கனல்பறக்கும் பேச்சுக்களை கேட்டு புளகாங்கிதம் அடைந்தோம். காலம் ஆக ஆக மேதின நிகழ்ச்சிகளுக்குள் அரசியல் வெகுவாக நுழைந்து வருவதை நான் உணரத் தொடங்கினேன். நடந்த உண்மையைக் கூறுகின்றேனே அல்லாது இதை விமர்சனமாக நான் கூறவில்லை.
உண்மையில் இன்றைய நாள் சர்வதேச தொழிலாளர் தினம். தொழிலாளர்களின் கடின உழைப்பை அங்கீகரித்துப் போற்றும் ஒரு நாள் தான் இந்தத் தொழிலாளர் தினமான மே தினம்.
தொழிலாளர்களின் ஈடுபாடும் பங்களிப்புமே ஒரு நாட்டை வளமாக வைத்திருக்க உதவுகின்றது. வெவ்வேறுவிதமான தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து நாம் யாவரும் தொழிலாளர்களே என்று தமது ஒற்றுமையை வலியுறுத்தி மார்தட்ட உதவும் நாளே மேதினம்.
உலகளாவிய தொழிலாளர்களை ஒன்று சேர்ப்பதே இந்த மேதினக் கொண்டாட்டம். எத் தொழில் செய்து வந்தாலும் அத் தொழிலுக்கு அங்கீகாரம் கிடைக்கும் நாள் தான்; இந்த மேதினம். இன்றைய தினம் சுமார் 80 உலக நாடுகளில் விடுமுறை நாள் ஆக்கப்பட்டுள்ளது.
சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் தொழிலாளர்களுக்கு என்று உரிமைகள் எதுவும் இருக்கவில்லை. முக்கியமாக அவர்கள் முகம்கொடுத்த அவலம் தான் காலவரையறையின்றி வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டமை அடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாதிருந்தமை. 19ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் ஒரு தொழிலாளி நாள்தோறும் 16 மணித்தியாலங்கள் தொடர்ந்து வேலைசெய்ய வேண்டியிருந்தது. அப்படி வேலை செய்த பின்னரும் அவர்களுக்குக் கிடைத்ததோ மிகக் குறைந்த கூலியே. அவர்கள் வேலை செய்த ஆலைகளில் மற்றும் தொழிற்சாலைகளில் பாரிய இயந்திரங்கள் இருந்தன. ஆனால் எந்தவித பாதுகாப்பும் இருக்கவில்லை. ஆபத்தான சூழலிலேயே அவர்கள் வேலை செய்தார்கள்.
இவ்வாறான சூழலை மாற்ற தொழிலாளர்கள் சேர்ந்து வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டார்கள். வேலை நிறுத்தங்களினால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். பலர் இறந்தனர். பலர் பட்டினி கிடந்தனர். வேறு சிலர் காயப்பட்டனர். உறவினரைப் பறிகொடுத்தனர். எனினும் அவர்களின் போராட்டம் ஈற்றில் வெற்றி அளித்தது. அவர்களின் போராட்டங்களால்தான் இன்று தொழிலாளர்கள் வேலை செய்யும் நேரம் 8 மணித்தியாலங்களாக வரையறைப்படுத்தப்பட்டுள்ளது.
1884 ல் அமெரிக்க ஒழுங்கமைக்கப்பட்ட வாணிப மற்றும் தொழிற் சங்க இணைப்பானது 8 மணித்தியால வேலை நாளை பிரகடனப்படுத்தியது. எட்டு மணித்தியால வேலைநாள் நடைமுறைக்கு வந்தது. அத்துடன் மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அமெரிக்காவில் தொடங்கிய மே தினக் கொண்டாட்டம் பல நாடுகளுக்கும் பரவியது.
இன்று மே தினம் தொழிலாளர்களால் பல உலகநாடுகளில் கொண்டாடப்படுகிறது.
ஒரு தொழிற்சாலை வெறும் இலாபத்திற்காக மட்டும் செயற்படக்கூடாது, அதன் தொழிலாளர்களின் நலனை நிர்வாகம் மனத்திற்கெடுத்து அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும் என்ற மனோபாவம் இக் காலம் முதல் மேலோங்க தொடங்கியது. அதே நேரம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை ஒரு ஆயுதமாகப் பாவித்து நிர்வாகத்தை அச்சுறுத்த முனையக்கூடாதென்ற கருத்தும் தொழிலாளர்களிடையே பரப்பப்பட்டது.
இன்று பொதுவாகப் பார்க்கின் தொழில்ஸ்தாபனங்கள், அரசாங்க திணைக்களங்கள் போன்றவை ஓரளவு நிர்வாக-தொழிலாள நல்லெண்ணத்துடன் சுமூகமாக நடந்துகொண்டிருக்கின்றன. அன்று பாதிக்கப்பட்டிருந்த பாதுகாப்பற்ற நிலையிலும் தமக்காக போராடிய தொழிலாள முன்னோடிகளுக்கு இன்றைய தொழிலாளர்கள் நன்றி கூறக் கடமைப்பட்டவர்கள்.
இலங்கையில் தொழிற்சங்க நடவடிக்கைகளை தமது தொழிலுக்கு அப்பாலும் எடுத்துச் சென்றவர்களில் என் நண்பர் சௌம்யமூர்த்தி தொண்டமானும் ஒருவர். மலையக உறவுகளின் வாக்களிக்கும் உரித்து 1949ல் பறிக்கப்பட்ட பின்னர் படிப்படியாக தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம் அவர்களின் சிவில் உரிமைகளை மீண்டும் பெற்றுக்கொடுக்க திரு.தொண்டமான் அவர்கள் உதவினார்.
போராட்டம் இல்லாது நாம் எமது இன்றைய இழிநிலையை மாற்ற முடியாது. எமக்கென அல்லது எமது சந்ததிகளுக்கென மாற்றங்களை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்றால் நாம் போராடவேண்டும்.
மேதினப் போராட்டங்கள், தொழிலாளர் போராட்டங்கள் ஆகியன வடக்குகிழக்கு தமிழ்மக்களுக்கு ஒரு பெரும் உண்மையை உணர்த்தி நிற்கின்றன. அதாவது போராட்ட மனோநிலையை நாங்கள் கைவிட்டோமானால் இழந்த உரிமைகளை நாம் திரும்பவும் பெறமுடியாது என்பதே அது. ஆயுதமேந்திப் போராடுவது மட்டும் போராட்டம் என்று நாம் நினைக்கக்கூடாது. போராடும் போது செயல்திறனும் செயல்நுட்பமும் எமக்கு அவசியம். அவ்வாறான ஒரு மனநிலையில்தான் இன்று ஒரு தமிழ்ப்பேசும் பொதுவேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களம் இறக்கவேண்டும் என்று சொல்லிவருகின்றோம். அதெப்படி என்று நீங்கள் கேட்கக் கூடும்.
பொதுவேட்பாளர் தேர்தலில் நாம் தேர்தலில் வெல்ல போட்டியிடவில்லை. பின் எதற்காக என்று கேட்டால் எமது நிலையை எமது மக்களுக்கும் மற்றையோருக்கும் தெளிவுபடுத்தவும் மக்கள் தீர்ப்பு ஒன்றை வட கிழக்கு மாகாணங்களில் பெற ஆவனசெய்யவுமே தான் இந்த ஏற்பாட்டை வலியுறுத்துகின்றோம்.
ஐ.நா வினால் வடகிழக்கு மாகாணங்கள் மக்கள் தீர்ப்பிற்கு விடப்பட்டால் மக்களின் மனதில் என்ன உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும். முன்னைய தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றவாறு தமிழர்களாகிய நாம் எமது வருங்கால சந்ததியினரை மனதில் வைத்து சில போராட்டங்களில் ஈடுபட வேண்டும். வன்முறை தேவையில்லை. பட்டினி கிடக்க அவசியமில்லை. ஆனால் பொது வேட்பாளரை முன் நிறுத்தி எமது தமிழ்ப் பேசும் உறவுகளை ஒன்றிணைத்து எமக்கென உலக அரங்கத்தில் சில நன்மைகளைப் பெற முயற்சிப்பதே இந்தப் போராட்டம்.
அவ்வாறான ஒரு போராட்டவழிமுறையாகவே தமிழ் பொதுவேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னிறுத்தும் செயல் அமைகின்றது.
தக்க பொதுவேட்பாளர் ஒருவரை நாம் முன்னிறுத்தினால் அவர் மும்மொழிகளிலும் எமது வரலாறு பற்றி, எமக்கிழைக்கப்பட்ட அநியாயங்கள் பற்றி, இன்னல்கள், பாகுபாடுகள் பற்றி உலகுக்கு எடுத்துரைத்து எமது வடக்குகிழக்கு மக்களின் எதிர்பார்ப்புக்களை ஐக்கிய நாடுகள் நடத்தக்கூடிய தகுந்த மக்கள் வாக்கெடுப்பின் மூலம் வெளிக் கொண்டுவர முடியும் என்ற கருத்தை நிலைநாட்டமுடியும்.
பலர் பொதுவேட்பாளரை முன்னிறுத்தினால் தமக்கு வேண்டிய சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்க முடியாது போய்விடும் என்று அஞ்சுகின்றார்கள். அது தவறு. பொதுவேட்பாளருக்கு நாம் எமது முதல் வாக்கை அளித்துவிட்டு 2ம் 3ம் விருப்பு வாக்குகளை நாம் விரும்பும் சிங்கள வேட்பாளருக்கு அளிக்க முடியும். இதன் மூலம் தமிழ் மக்களின் ஒற்றுமை பேணப்படும். எமது எதிர்பார்ப்புக்கள் உலகறியச் செய்யப்படும். அதே நேரத்தில் எமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் இடமளிக்கப்படும். இவ்வாறு செய்வதால் இனக்கலவரங்கள் வெடிக்கவேண்டிய அவசியம் எதுவும் ஏற்படாது. எதுஎவ்வாறெனினும் இன்றைய ஆபத்தான பொருளாதார சூழலில் கலவரங்கள் ஏதேனும் வெடித்தால் நாட்டின் நிலை அதலபாதாளத்திற்குத் தள்ளப்பட்டுவிடும் என்பதை எமது அரச தலைவர்கள் அறிந்து வைத்துள்ளார்கள். ஆகவே கலவரங்கள் ஏற்பட விடமாட்டார்கள்.
பெரும்பான்மையினரின் அதிகாரபலத்தினுள் சிக்குப்பட்டு தத்தளிக்கும் வடகிழக்குத் தமிழ்பேசும் மக்கள், எமது தொழிலாள முன்னோடிகள் முன்னர் போராடியதை போல் புதுப்புது போராடும் உத்திகளை கடைப்பிடித்து எமது தமிழ்பேசும் மக்களின் உரிமைகளை திரும்பப்பெற முயற்சிசெய்யவேண்டும்.
ஒற்றையாட்சியானது இந்த நாட்டை சிங்கள மக்களுக்காக, சிங்கள மக்களால் பெரும்பான்மை சிங்கள மக்களின் நலன் பேணி நடத்தப்படும் ஒரு ஆட்சியாகும்.
எவர் ஆட்சிக்கு வந்தாலும் நடக்கப் போவது சிங்கள இனவழி ஆட்சியே. இந்த இனவழி ஆட்சியை ஆங்கிலத்தில் நுவாழெஉசயஉல என்பார்கள். இந்தச் சொல்லை முதன் முதலில் சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் பாவித்தவர் இஸ்ரேலிய பேராசிரியர் ஒரென் யிவ்டசெல் என்பவராவார். இன்றும் உயிருடன் இருக்கின்றார். அண்மையில் எமது நில அபகரிப்பு பற்றிய இணையவழி கருத்தரங்கத்தில் பங்கேற்றிருந்தார்.
அவர் செய்த ஆராய்ச்சிகளின் பின்னர் ஒரு முக்கியமான கருத்தை வெளியிட்டார். இலங்கையும் இஸ்ரேலும் இனவழி ஆட்சிகளே என்றார். இந் நாடுகள் இரண்டும் என்றார். இந் நாட்டில் ஜனநாயகம் தழைக்கவில்லை இன நாயகமே தலைவிரித்தாடுகின்றது என்றார்.
வட கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரையில் எமக்கு வேண்டாத பாதுகாப்பை எமக்களிப்பது சிங்கள இராணுவமே. எமது காணிகளை சூறையாடுவது சிங்கள சகோதரர் வழிநடத்தும் அரச திணைக்களங்களே. எமது தாய் மண்ணில் பௌத்த சின்னங்களை அமைப்பதும் சிங்கள பௌத்த பிக்குகளே. சிங்களவர்களால் சிங்களவர்க்கென்று சிங்களவர் மத்தியிலிருந்து நடாத்தப்படும் ஒரு இனவழி ஆட்சியே எமது ஒற்றையாட்சி. தமக்கு ஒற்றையாட்சி வேண்டும் என்று னு.ளு.சேனநாயக்க, ஒலிவர் குணதிலக போன்றவர்கள் சதி செய்து பெற்ற அரசாங்க முறையே இந்த ஒற்றையாட்சி அரசாங்க முறை இதன் மூலம் இரண்டு மாகாணங்களில் 3000 வருடங்களுக்கு மேலாகப் பெரும்பான்மையினராக இருந்து வந்த தமிழ் பேசும் மக்கள் சிங்களம் பேசும் 7 மாகாணங்களுடன் சேர்க்கப்பட்டு 9 மாகாணங்களில் நாம் சிறுபான்மையர் ஆக்கப்பட்டோம். நாங்கள் எங்கள் மண்ணில் பெரும்பான்மையினராக இருந்தும் சிறுபான்மையினராகவே நடத்தப்பட்டு வருகின்றோம். சட்டப்படி சுயநிர்ணய உரிமை எமக்குண்டு. ஆனால் அதைப் பற்றி மௌனம் காத்து வருகின்றன தொடர்ந்து வரும் அரசாங்கங்கள்.
ஆனால் அந்த உரிமையை வடகிழக்கு மாகாண மக்கள் ஒரு வாக்கெடுப்பில் பாவிக்க இடம் தாருங்கள் என்று நாம் அதனைக் கேட்டால் எம்மைப் பயங்கரவாதிகள் என்று அழைப்பார்கள். ஆனால் ஐனாதிபதி வேட்பாளர் அதைக் கோரலாம்.
நான் முதலமைச்சராகப் பதவி ஏற்றதும் விஸ்வமடுவில் ஒரு கூட்டத்திற்குப் போயிருந்தேன். சுமார் 25 அல்லது 30 படையினர் கூட்ட மண்டபத்திற்கு வெளியில் நின்றனர். நான் போனதும் அத்தனை பேரும் எனக்கு சல்யூட் அடித்தனர். உள்ளே சென்று ஏன் இத்தனை படைவீரர்கள் என்று கேட்டேன். எமக்கு பாதுகாப்பு அளிக்க வந்துள்ளார்கள் என்று கூட்ட ஒழுங்கமைப்பாளர் கூறினார். நீங்கள் கூப்பிட்டு வந்தார்களா அல்லது தாமாக வந்தார்களா என்று கேட்டேன். நாங்கள் கூப்பிடவில்லை என்றார் அவர். மேடையில் அவர்களின் இராணுவப் பொறுப்பதிகாரி கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதையும் காட்டினார்.
நான் பேசும் போது இப்போது தேர்தல் முடிந்துவிட்டது. இனி இராணுவம் வடக்கு மாகாணத்தில் தொடர்ந்து இருக்கத் தேவையில்லை. அவர்கள் வாபஸ் பெற்றுப் போகலாம் என்ற கருத்தை முன்வைத்தேன். வைத்து விட்டுத் திரும்பி படையதிகாரியிடம் “என்ன அப்படித்தானே?” என்று ஆங்கிலத்தில் கேட்டேன். அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. நான் இறங்கிச் செல்லும் போது எனக்கு வரும்போது சல்யூட் அடித்த அத்தனை படைவீரர்களும் வேறு திசை நோக்கி ஆடாமல் அசையாமல் நின்றார்கள். பாவம்! எனக்கு அவர்களின் பிரியாவிடை சல்யூட் கிடைக்காமல் போய்விட்டது! இன்று வரையில் இராணுவத்தினர் பிரியாமலே இங்கு இருக்கின்றார்கள். இக் கால கட்டத்தினுள் எமது காணிகளை கையேற்றுள்ளனர். சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளனர். உணவகங்களை நடத்தி வருகின்றனர். புத்தமத வழிபாட்டு தலங்களை உருவாக்க உதவி வருகின்றனர். வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் மக்கள் காணிகளைத் திணைக்களங்கள் கையேற்க உதவி புரிந்து வருகின்றனர்;.
எமக்கு சுயநிர்ணய அதிகாரம் இருக்கின்றது என்று யார் சொன்னார்கள்? இன்று இனவழியாட்சியே இங்கு நடந்து வருகின்றது. அதை மாற்ற வேண்டும்.
அவ்வாறு மாற்றுவதாயின் நாம் ஒற்றுமைப்பட வேண்டும். எமது குரல் ஐ.நா வரையில் கேட்க வேண்டும். கேட்டதன் பின்னர் வடகிழக்கில் மக்கள் தீர்மானத்திற்காக சர்வதேச நாடுகளால் இங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதை உலகுக்கு எடுத்துக் கூற ஒரு தமிழ் பொது வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் பங்குபற்ற வேண்டும். அவருக்கு எம் தமிழ் மக்கள் வாக்களித்து எமது கோரிக்கையை உலகறியச் செய்ய வேண்டும். இதுவே தமிழ் பொது வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் பங்கு பற்ற வலியுறுத்துவோரின் உத்தியாகும். எமக்குள் பிரிவினை இல்லாது தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தும் பணியில் ஈடுபடுவோமாக என்றார்.




